Friday, 15 June 2018

J.C.DANIEL ,MALAYALAM MOVIES BEESMAR 1900 NOVEMBER 28-1975 APRIL 27








J.C.DANIEL ,MALAYALAM MOVIES 
BEESMAR 1900 NOVEMBER 28-1975 APRIL 27



இது மலையாள திரையின் பீஸ் மர் கதை

எட்டாண்டுகளுக்கு முன்பு மலையாளத்திரையுலகின் பிதாமகர் என்று சொல்லத்தக்க நடிகர்-இயக்குநர் ஒருவர் என்னிடம் சொன்னார். ‘மலையாள சினிமாவின் தொடக்கப்புள்ளிகள் மூன்று நாடார்கள். மூவருமே உங்கள் ஊர்க்காரர்கள். நீ மலையாள சினிமாவின் நாற்றங்காலில் இருந்து வந்திருக்கிறாய்…’
அவர் குறிப்பிட்டது ஜெ.சி.டானியல் நாடார், சுந்தர்ராஜ் நாடார், சத்யநேசன் நாடார் என்ற நடிகர் சத்யன். மூவரும் உறவினர்கள் என்பதும் ஒருவரை ஒருவர் அறிந்தவர்கள் என்பதும் இன்னும் ஆச்சரியம்

1893ல் குமரிமாவட்டத்தில் அகஸ்தீஸ்வரத்தில் பிறந்தவர் ஜெ.சி.டானியேல். செல்வந்த நாடார் குடும்பத்தில் பிறந்தவர். அவரது அப்பா ஒரு அலோபதி மருத்துவர். நாகர்கோயிலில் உயர்நிலைப்படிப்பை முடித்து திருவனந்தபுரம் பல்கலைக்கழகக் கல்லூரியில் இளங்கலைப்படிப்பை முடித்தார். அப்போது திருவனந்தபுரத்தில் காபிட்டால் என்ற திரையரங்கில் ஊமைப்படங்கள் ஓடிக்கொண்டிருந்தன. அவற்றில் மனம் ஈடுபட்ட அவர் திரைப்படக்கலையைப் படிப்பதற்காக சென்னைக்குச்சென்றார்.
ஆனால் சென்னை ஸ்டுடியோக்களுக்குள் அவரை அனுமதிக்கவில்லை. ஆகவே அங்கிருந்து மும்பைக்குச் சென்றார். மும்பையில் வெவ்வேறு படப்பிடிப்புநிலையங்களில் டானியேல் உதவியாளராகப் பணியாற்றினார். மெதுவாகத் திரைக்கலையைக் கற்றுத்தேர்ந்தார்

டானியேல் திருவனந்தபுரம் பேட்டை பகுதியில் ஒரு ஸ்டுடியோவை ஆரம்பித்தார். பனச்சமூடு பகுதியில் அவருக்குத் தாய்வழிச்சொத்தாகக் கிடைத்த நூறு ஏக்கர் தென்னந்தோப்பை விற்று இந்த ஸ்டுடியோவை அமைத்தார். திருவிதாங்கூர் நேஷனல் ஸ்டுடியோஸ் அங்கே அமைந்தது. அதுதான் கேரள மண்ணின் முதல் திரைப்படத் தயாரிப்பரங்கு.

டானியேலுக்கு எல்லாமே சவால்களாக இருந்தன. முக்கியமாகத் தொழில்நுட்பப் பயிற்சி உள்ள ஊழியர்கள் அமையவில்லை. அவர்களை சென்னையிலிருந்தும் மும்பையில் இருந்தும் கொண்டுவரவேண்டியிருந்தது. படப்பிடிப்பு நிபுணர்கள் லண்டனில் இருந்து வந்தனர். அவர் நினைத்ததைவிட ஆறுமடங்கு அதிகமாக செலவு இழுத்தது. ஆனால் பிடிவாதக்காரரான டானியேல் படநிறுவனத்தை முழுமையாக்கிப் படத்தையும் எடுத்துமுடித்தார்

நான்குலட்சம் ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட ஊமைப்படமான விகதகுமாரன் கேரளத்தின் முதல்படம். கேரள வாழ்க்கையைக் காட்டிய முதல் படம் அதுவே. 1928இல் ஆரம்பித்த படப்பிடிப்பு முடிந்து 1930 அக்டோபர் 23 ஆம் தேதி திருவனந்தபுரம் காப்பிட்டோல் அரங்கிலும் நாகர்கோயில் பயோனியர் அரங்கிலும் படம் வெளியாகியது.

விகதகுமாரன் அல்லது The Lost child என்பது படத்தின் தலைப்பு. முற்றத்தில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை ஒன்றை பூதநாதன் என்ற வில்லன் திருடிக்கொண்டு கொழும்பு சென்றுவிடுகிறான். அங்கே அந்தக்குழந்தையை ஒரு திருடனாக வளர்க்கிறான். திருடப்பட்ட சிறுவனின் தங்கை சரோஜம் அழகிய இளம்பெண்ணாக வளர்கிறாள். அவளை அந்த ஊருக்கு வரும் இளைஞன் சந்திரகுமார் காதலிக்கிறான்

மேல்படிப்புக்காக லண்டன் செல்லும் சந்திரகுமார் வழியில் கொழும்புவில் இறங்கும்போது பூதநாதனின் ஆட்களால் கொள்ளையடிக்கப்படுகிறான். பொருட்களை இழந்து கொழும்புவில் வேலைதேடி அலையும்போது காணாமல்போன இளைஞனான அவன் சந்திக்கிறான். இருவரும் சேர்ந்து பூதநாதனிடமிருந்து தப்புகிறார்கள். ஊர் திரும்பும் சந்திரகுமார் சரோஜத்தைக் காண்கிறான். அந்த இளைஞனின் முதுகில் உள்ள மச்சத்தைக்கொண்டு அது தன் அண்ணன் தான் என்று அறிகிறாள் சரோஜம். அவன் அம்மா வந்து கண்ணீருடன் மகனைக் கட்டிப்பிடிக்கிறாள்

அப்போது பூதநாதன் அங்கே வருகிறான். கடுமையான சண்டை நடக்கிறது. பூதநாதனை சந்திரகுமார் அடித்து வீழ்த்துகிறான். பூதநாதன் தப்பி ஓட சந்திரகுமாரும் சரோஜமும் மணம்செய்துகொள்கிறார்கள். படம் மங்கலமாக முடிகிறது. இதுதான் விகதகுமாரனின் கதை

இதில் சந்திரகுமார் ஆக டானியேலே நடித்திருந்தார். கதையும் அவருடையதே. இயக்கியதும் டானியேல்தான். படப்பிடிப்பு திருவனந்தபுரத்திலும் கொழும்புவிலும் நடந்தது. டானியேல் அக்காலத்தில் முறையாக அடிமுறை கற்றவர். ஆகவே படத்தில் நான்கு கம்புச்சண்டைக்காட்சிகளும் ஒரு கைச்சண்டையும் இடம்பெற்றிருந்தன.

படத்தின் கதைநாயகியாக நடிக்க அக்காலத்தில் பெண்கள் தயாராகவில்லை. நாயகிக்காக மும்பையில் இருந்து கொண்டுவந்த பெண்ணுக்குக் கேரளப்பெண்ணாக நடிக்கத்தெரியவில்லை. ஆகவே டானியேல் ரோசம்மா என்ற ஒரு புலையர் சாதிப்பெண்ணைக் கண்டடைந்தார். அவள் ஏற்கனவே மேடைகளில் குறவன் குறத்தி ஆட்டம் ஆடிக்கொண்டிருந்தவள். அவளை நாயகியாக நடிக்கவைத்தார். அவளுக்கு ரோசி என்று பெயர் சூட்டினார்.

படம் வெளியான முதல்நாளே பெரும் எதிர்ப்பைச்சந்தித்தது. படத்தில் ஒரு புலையப்பெண் நாயர்பெண் போல உடையும் நகைகளும் அணிந்து நடிப்பதைக் கண்டு நாயர்களும் நம்பூதிரிகளும் கொதித்தெழுந்தார்கள். விகதகுமாரன் வெளியீட்டுக்கு வந்திருந்த புகழ்பெற்ற வழக்கறிஞர் மள்ளூர் கோபித்துக்கொண்டு அரங்கிலிருந்து வெளிநடப்பு செய்தார். கேரளம் முழுக்க முதல்நாளே படம் நிறுத்தப்பட்டுவிட்டது.

பெரும் நஷ்டத்தைச் சந்தித்த டானியேல் கடன்காரர்களுக்குப் பதில் சொல்லமுடியாமல் மதுரைக்குத் தப்பி ஓடினார். அங்கே யாருக்கும்தெரியாமல் வாழ்ந்தார். அப்போது பல்மருத்துவம் கற்றுத் தேர்வெழுதி வென்று மருத்துவராக ஆனார்.

காரைக்குடியில் மருத்துவராகப் பணியாற்றினார். மீண்டும் வாழ்க்கை சீரடைந்தது அப்போது அவரிடம் பல்மருத்துவம் செய்வதற்காக வந்த பிரபல நடிகர் பி.யூ.சின்னப்பா டானியேலை திரைப்படத்துறைக்கு வருமாறு அழைத்தார். வற்புறுத்தி சென்னைக்குக் கொண்டுசென்றார். ஆனால் அங்கே சின்னப்பாவை ச்சுற்றி இருந்த ஒரு கும்பலும் சின்னப்பாவும் சேர்ந்துகொண்டு டானியேலின் மொத்தப்பணத்தையும் பிடுங்கிக்கொண்டு துரத்தியடித்தனர். அதே கும்பல் பின்னாளில் சின்னப்பாவையும் அனாதையாகத் துரத்தியடித்தது. இரண்டுவருடம் நாடோடியாக அலைந்தபின் டானியேல் மனைவியிடம் வந்துசேர்ந்தார்.

அவரது மனைவி பெயர் ஜேனட். அவருக்கு நான்கு மகன்கள். அகஸ்தீஸ்வரத்திலும் நாகர்கோயிலிலும் டானியேல் பல்மருத்துவராகப் பணியாற்றினார். பிள்ளைகள் வெளியூருக்குப் பணிக்குச்சென்றார்கள். குடிப்பழக்கமிருந்தமையால் மிச்சமிருந்த பணத்தையும் இழந்து கடைசிக்காலத்தில் வறுமையால் மிகவும் வாடினார்
.
அப்போது டானியேல் கேரள அரசின் நலிந்த திரைக்கலைஞர்களுக்கான பென்ஷனுக்காக விண்ணப்பம் செய்தார். அவர் எடுத்தபடம் மலையாளப்படம் அல்ல என்றும், அவர் கேரளத்தில் வாழ்கிறார் என்றும் சொல்லி அவ்விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. திட்டமிட்டு அவரை நிராகரித்தவர் புகழ்பெற்ற மலையாள எழுத்தாளரும் ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான மலையாற்றூர் ராமகிருஷ்ணன்.

அது முழுக்கமுழுக்க சாதிப்பற்றின் விளைவு. முதல் மலையாளப் படம் என்று சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் சுந்தரம் எடுத்த பாலன் என்ற படத்தையே அதுவரையிலான வரலாறு சுட்டிக்காட்டிவந்தது. சுந்தரம் அய்யர், ராமகிருஷ்ணனும் அய்யர். அந்த வரலாறு மாற்றப்படுவதை மலையாற்றூர் ராமகிருஷ்ணன் விரும்பவில்லை.

டானியேலைப்பற்றி கேள்விப்பட்டு அவரைப்பற்றித் தொடர்ந்து எழுதி அவர்தான் மலையாள சினிமாவின் முதல்வர் என்பதை நிறுவப் பாடுபட்டவர் இதழாளரும் எழுத்தாளருமான சேலங்கோட்டு கோபாலகிருஷ்ணன் என்பவர். பாடலாசிரியர் வயலார் ராமவர்மாவும் முன் முயற்சி எடுத்துக்கொண்டார். ஆனால் மலையாற்றூர் ராமகிருஷ்ணன் பதவியில் இருக்கும் வரை எதுவும் நடக்கவில்லை. விகதகுமாரனின் பிரதி அழிந்துவிட்டது. டானியேலிடம் இருந்தது அந்தப்படத்தின் சில புகைப்படங்களும் விளம்பரப்பிரசுரங்களும் மட்டும்தான். அவற்றை மலையாற்றூர் ஏற்றுக்கொள்ளவில்லை.

1975இல் டானியேல் தன் 78 ஆவது வயதில் ஆதரவற்ற முதியவராகக் காலமானார். அதற்கு அடுத்தவருடம் மலையாற்றூர் ராமகிருஷ்ணன் பதவி விலகியபின் கேரள அரசின் கவனத்துக்கு டானியேலின் வரலாற்றைக் கொண்டு செல்லமுடிந்தது. அப்போது பதவிக்கு வந்த ஏ.கே.ஆண்டனியின் அரசு டானியேலின் விதவையான ஜேனட்டுக்கு ஓய்வூதியம் அளிக்க ஆணையிட்டது. டானியேலின் பங்களிப்பு வரலாற்றிலும் இடம்பெற்றது.

1992இல் கேரள அரசின் திரைப்பட வளர்ச்சி நிறுவனம் அளிக்கும் வாழ்நாள் சாதனைக்கான திரைவிருதுக்கு ஜெ.சி.டானியேல் விருது என்று பெயரிடப்பட்டது. டானியேல் இன்று மலையாளத் திரையின் முதல்வராக, பிதாமகராக வரலாற்றில் இடம்பெற்றிருக்கிறார்.

ஏ.சுந்தர்ராஜின் கதையும் வேறல்ல. அவர் 1933இல் மலையாளத்தின் முதல்பேசும்படமான மார்த்தாண்ட வர்மாவை எடுத்தார். வி.வி.ராவ் படத்தை இயக்கினார். ராஜேஸ்வரி ஃபிலிம்ஸ் என்ற நிறுவனத்திற்காக அக்காலத்தில் இரண்டு லட்சம் ரூபாய் செலவில் சுந்தர்ராஜ் இந்தப்படத்தை எடுத்தார். இதுவும் ஒரேஒரு நாள்தான் ஓடியது. இப்படத்தின் கதை சி.வி.ராமன்பிள்ளை எழுதியது என்றும் உரியமுறையில் அனுமதிபெறாமல் படம் எடுக்கப்பட்டது என்றும் குற்றம்சாட்டிப் படத்துக்கு எதிராக அந்நாவலை வெளியிட்ட நிறுவனம் நீதிமன்றத்தை அணுகியது. தடைபெற்றுப் படப்பெட்டிகளைக் கைப்பற்றியது. நொடித்துப்போன சுந்தர்ராஜ் ஊரைவிட்டு ஓடினார். நாகர்கோயிலில் முதியவயதில் கைவிடப்பட்டவராக இறந்தார்.
நல்லவேளையாக மார்த்தாண்டவர்மாவின் பிரதி சேலங்கோட்டு கோபாலகிருஷ்ணனால் மீட்கப்பட்டது. பதிப்பகம் மூடப்பட்டபின் அந்தத் திரைப்படப்பிரதி அவர்களின் கிடங்கில் கைவிடப்பட்டுக் கிடந்தது. சுந்தர்ராஜுக்குத் தன் படத்தின் மதிப்பு தெரிந்திருந்தமையால் நாற்பதுவருடங்களுக்குமேல் அவர் வருடம்தோறும் வந்து அந்த ஃபிலிமை சுத்தம்செய்து கொடுத்துவிட்டு செல்லும் வழக்கம் கொண்டிருந்தார். ஆகவே படம் பெரும்பாலும் தப்பித்தது.
சுந்தர்ராஜின் படமும் சாதிவெறியால்தான் தடுக்கப்பட்டது என்பது இன்று தெரிகிறது. அவர் எடுத்தது சி.வி.ராமன்பிள்ளையின் கதையை அல்ல. அன்று கேரளநாட்டார்வழக்கில் பிரபலமாக இருந்த மார்த்தாண்டவர்மாவின் தொன்மத்தைத்தான். அந்த தொன்மத்திற்கு சி.வி.ராமன்பிள்ளை உரிமைகொண்டாட முடியாது. ஆனால் அதை அன்றைய நீதிமன்றம் கருத்தில்கொள்ளவில்லை.
மலையாற்றூர் ராமகிருஷ்ணன் டானியேலை அங்கீகரிக்க மறுத்தது அவர் எடுத்தபடம் கிடைக்கவில்லை என்பதற்காக. ஆனால் மார்த்தாண்டவர்மா கிடைத்தபோதும் அதை அவர் கண்டுகொள்ள மறுத்தார். படத்தை பூனா ஃபிலிம் ஆர்கைவ்ஸ் வாங்கச்செய்வதில் சேலங்கோட்டு கோபாலகிருஷ்ணன் வெற்றிபெற்றார்
மூன்றாவது நாடாரான சத்யன் முதல் இருவருக்கு மாறாகத் திரைப்படத்தில் பெரும் வெற்றி பெற்றார். மலையாளத்திரையுலகின் அரசன் என்று அறியப்பட்டார். ‘சத்யனின் சிம்மாசனம்’ என்ற சொல்லாட்சியே மலையாளத்தில் உள்ளது. ஒரு நடிகர் நன்றாக நடித்தால் அவர் அந்த சிம்மாசனத்தில் சற்று நேரம் அமர்ந்திருந்தார் என்று சொல்வார்கள்.
*

ஜே.சி.டானியேலின் வாழ்க்கையைப்பற்றி சேலங்காட்டு கோபாலகிருஷ்ணன் எழுதிய நூல், ஆர்.கோபாலகிருஷ்ணன் எடுத்த ஆவணப்படம் , ரோசியைப்பற்றி வினு ஆரகாம் எழுதிய ‘ நஷ்டநாயிகா’ என்னும் நாவல் ஆகியவற்றின் அடிப்படையில் கமல் திரைக்கதை எழுதி இயக்கிய ‘செல்லுலோய்ட்’ ஜெ..சி.டானியேலுக்கு மிக ஆத்மார்த்தமாக அளிக்கப்பட்ட மகத்தான நன்றியறிவிப்பு எனலாம்.
சேலங்காட்டு கோபாலகிருஷ்ணன் [ஸ்ரீனிவாசன்] தற்செயலாக டானியேலைப்பற்றிக் கேள்விப்பட்டு அவரைத் தேடிச்சென்று அகஸ்தீஸ்வரத்தில் சந்திக்கிறார். மனக்கசப்படைந்து இருக்கும் டானியேல் முதலில் அவரை சந்திக்க விரும்புவதில்லை. மரியாதையுடன் திருப்பியனுப்புகிறார். சேலங்காட்டு கோபாலகிருஷ்ணன் அவரது மனைவி ஜேனட்டிடம் ஒரு நீண்ட பேட்டி எடுக்கிறார். ஜேனட் அந்தப்படம் எடுக்கும்போது கூடவே இருந்தவர்
பேட்டி பிரசுரமானதை வாசித்துக்கேட்ட டானியேல் கோபாலகிருஷ்ணனை வரச்சொல்லிக் கடிதமனுப்புகிறார். தன்னுடைய திரைமுயற்சியைப்பற்றி விரிவாகச் சொல்கிறார். ஜேனட்டும் அவரும் உற்சாகமான இளமையுடன் திருவிதாங்கூர் நேஷனல் ஸ்டுடியோஸ் நிறுவனத்தை ஆரம்பிக்கிறார்கள். நடிக்க ஆளில்லாமல் ரோசம்மாவைக் கண்டுபிடித்து அவளுக்குப்பயிற்சி கொடுத்து நடிக்கச்செய்கிறார்கள். அவள் பெயரை ரோசி என்று மாற்றுகிறார்கள்.
படம் வெளியானபோது சாதிவெறியர்களின் கடும் எதிர்ப்பு உருவாகிறது. படம் நிறுத்தப்படுகிறது. டானியேல் கடனாளியாக மதுரைக்குச்செல்கிறார். ரோசியின் வீட்டை எரித்து அவள் தந்தையைக் கடுமையாகத் தாக்குகிறார்கள் உயர்சாதியினர். தப்பி ஓடி இருளில் மறைகிறாள் ரோசி.[ ரோசி அதன்பின் செய்திகளில் வரவே இல்லை. அவளை ஒரு லாரி ஓட்டுநர் சாலையில் கண்டெடுத்து மணம் புரிந்துகொண்டதாகவும் 1970 வரை நாகர்கோயிலில் வாழ்ந்ததாகவும் ஒரு பேச்சு உண்டு]
மலையாள சினிமாவின் முதல் கதாநாயகி அவள் நடித்த படத்தைப்பார்க்க திரையரங்கில் நுழைய அனுமதிக்கப்படவில்லை. தன் முகம் திரையில் தெரிவதை அவள் பார்க்கவேஇல்லை. அன்றைய இரவில் மறைந்த அவள் பின்னர் வெளிவரவும் இல்லை. இந்த உண்மைக்கதையில் இருக்கும் வரலாற்றுசோகம் படத்தில் அற்புதமாகப் பதிவாகியிருக்கிறது.
டானியேலை வெளிச்சத்துக்குக் கொண்டுவர சேலங்காட்டு கோபாலகிருஷ்ணன் முயல்கிறார். வறுமையில் வாடும் டானியேலுக்கு ஒரு பென்ஷனாவது வாங்கிக்கொடுக்கலாமென நினைக்கிறார். ஆனால் மலையாற்றூர் ராமகிருஷ்ணன் அதை எல்லாவகையிலும் தடுக்கிறார். மலையாற்றூர் ராமகிருஷ்ணன் இப்படத்தில் பெயர்சொல்லப்பட்டு நேரடியாகக் குற்றம் சாட்டப்படுகிறார். ‘நீங்களும் அய்யர் மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபரும் அய்யர்…அதுதான் இந்த நிலைப்பாட்டுக்குக் காரணம் இல்லையா?’ என சேலங்காட்டு கோபாலகிருஷ்ணன் நேரடியாகக் கேட்பதுபோலவே படத்தில் காட்சி இருக்கிறது
இடதுசாரியாக இருந்த மலையாற்றூரின் சாதிய நோக்கு முன்னரே சிலரால் சொல்லப்பட்டுவிட்டதுதான். சேலங்காட்டு கோபாலகிருஷ்ணனின் நூல் நாற்பதாண்டுகளுக்கு முன்னரே அதை நிறுவியும் விட்டது. ஆனால் சினிமா என்ற மாபெரும் ஊடகத்தின்மூலம் கேரளத்தின் முக்கியமான எழுத்தாளராகிய மலையாற்றூர் முழுமையாகவே அழிக்கப்பட்டுவிட்டார் என்றே சொல்லவேண்டும். இனி அவரது எந்தப்படைப்பும் இயல்பான வாசிப்பைப் பெறமுடியாது. வருத்தமான விஷயம்தான் , ஆனால் வரலாறு ஈவிரக்கமற்றது.இனி எஞ்சிய நாள் முழுக்க டானியேல் ஒளியையும் மலையாற்றூர் இருளையும் பெறுவார்கள்!
டானியேல் அனாதையாக இறக்கிறார். அவர் இறந்தபின் அவர் அங்கீகரிக்கப்படுகிறார். அவரது தந்தையைப்பற்றிய ஆவணப்பட வெளியீட்டுவிழாவில் அவரது கடைசி மகன் ஹாரீஸ்நாடார் மேடையேறுகிறார். அந்த நாள் வரை அவர் தன் தந்தையைப் பொறுப்பில்லாத ஊதாரி என்று வெறுத்துவந்ததாகவும் அந்தமேடையில்தான் அவர் எப்படிப்பட்ட மாமனிதர் என்று தெரியவந்ததாகவும் ஹாரீஸ் சொல்கிறார்.
அந்தப்படச்சுருளை இளமையில் தீவைத்துக் கொளுத்தியவர் ஹாரீஸ்தான். ஆனால் அதற்காக வருந்தினாலும் டானியேல் மகனின் கோபத்தைப் புரிந்துகொள்கிறார். ஒருபோதும் அதை தன் மகன் அழித்தான் என்று அவர் சொல்லவில்லை. பல நிருபர்கள் கேட்டும்கூட அது அழிந்துவிட்டது என்று மட்டுமே சொன்னார், மகன் தீவைத்ததைச் சொல்லி அதை வரலாறாக ஆக்கவில்லை. அவர் புறக்கணிக்கப்பட்டதும் அங்கீகாரமில்லாமல் இறந்ததும் அந்தப் படம் அழிந்தமையால்தான்.
மேடையில் ஹாரீஸ் அப்படிப் படத்தை அழித்தவன் தானே என்கிறார். கண்ணீருடன் தன் தந்தையை அப்போது வெறுத்ததாகவும் இப்போது புரிந்துகொள்வதாகவும் சொல்கிறார். படம் மகனின் கண்ணீரில் முடிகிறது. அது மலையாள சினிமாவில் இன்றிருக்கும் அனைவரின் கண்ணீரும்தான். அனைவருமே டானியேலின் பிள்ளைகள் அல்லவா?
டானியேலாகவும் ஹாரீஸாகவும் பிரிதிவிராஜ் அற்புதமாக நடித்திருக்கிறார். ஒருவேளை அவரது திரைவாழ்க்கையின் மிகச்சிறந்த படம் இதுவாகத்தான் இருக்கும். இளமையில் கற்றறிந்த இளைஞனாக உற்சாகமும் துருதுருப்புமாக இருக்கும் டானியேல், பின் நொடித்துப்போய்க் கலங்கும் டானியேல், மீண்டு எழும் டாக்டர் டானியேல், கடைசியில் கைவிடப்பட்டு அனாதையாக சாகும் முதிய டானியேல். ஒவ்வொரு முகமும் மிகையற்ற கச்சிதம்.
டானியேலின் மனைவி ஜேனட் ஆக மம்தா மோகன்தாஸ் அழகாக நடித்திருக்கிறார். மற்ற சிறு கதாபாத்திரங்கள் எல்லாமே கச்சிதம். வயலார் ராமவர்மாவாக நடிப்பவரும் சரி மலையாற்றூராக நடிப்பவரும் சரி அப்படியே அவர்களின் சாயலில் இருக்கிறார்கள்.
படத்தின் மிகச்சிறந்த இன்னொரு நடிப்பு ரோசியாக நடிக்கும் புதுமுகம் சாந்த்னி. இந்த வரலாற்றுப்படத்தின் உணர்ச்சிமிக்க ஓர் அத்தியாயம் ரோசியின் வாழ்க்கை. தீண்டாமை உச்சத்தில் இருந்த காலகட்டத்தைச்சேர்ந்த புலையப்பெண் அவள். நகைகளோ நல்ல உடைகளோ அவளால் கனவில் கூட அடைய முடியாதவை. சட்டென்று அவை எல்லாமே அவளைத்தேடிவருகின்றன. தனக்களிக்கப்பட்ட உடைகளை உடைமாற்றும் அறையில் இருளில் நின்று மார்போடு அணைத்து அழும் ரோசி ஒரு மகத்தான கதாபாத்திரம்
சினிமா நவீன உலகம். அங்கே தீண்டாமை இல்லை. அங்கே ரோசி ஒரு நடிகை. ஆனால் ரோசியால் அந்த யதார்த்தத்தைப் புரிந்துகொள்ள முடியவில்லை. நாற்காலியில் அமர முடியவில்லை. ஏன் சோறுகூட சாப்பிடமுடியவில்லை- கஞ்சி போதும் என்கிறாள். மெல்லமெல்ல அவள் அதற்குள் வந்து சேரும்போது படம் முடிகிறது. கனவு கலைகிறது. ரோசிக்கு ஊதியம் வழங்கி அவளை அனுப்பும்போது ஜேனெட் அவளுக்கு அவளுடைய உடைகளை அளிக்கிறாள். நாயர்பெண்ணாக வாழ்ந்த ரோசி புலையப்பெண்ணாக மீண்டும் மாறிக் கண்ணீருடன் விடைபெறுகிறாள். கனவு நினைவில் எஞ்சியிருப்பதுபோல அந்த உடை கையில் இருக்கிறது
தன்னுடைய சினிமாவைப்பார்க்க காபிடோல் திரையரங்குக்குச் செல்கிறாள் ரோசி. அவளை வற்புறுத்திக் கூட்டிவந்தவர் டானியேல்தான். ஆனால் தலைமைதாங்க வந்த வழக்கறிஞர் மள்ளூர் கோபித்துக்கொள்ளவே ரோசி உள்ளே விடப்படவில்லை. தன் முகத்தைத் திரையில் பார்க்கும் அதிருஷ்டம் அவளுக்குக் கிடைக்கவில்லை. அன்றிரவே வீடு கொளுத்தப்பட்டு அவள் துரத்தியடிக்கப்படுகிறாள். சினிமா என்னும் கனவு, தொழில்நுட்பம் உருவாக்கிய மாபெரும் மாற்று யதார்த்தம், அழிகிறது.
அழியவில்லை, அந்த வரலாற்றுக்கணத்தில் அது பிறக்கிறது என்று காட்டுகிறார் கமல். நுணுக்கமான இயக்கம் கொண்ட படம் இது. ஒவ்வொரு காட்சியிலும் செலுத்தப்பட்டிருக்கும் கவனம் குறியீட்டு ரீதியாக மேலும் மேலும் வாசிக்கப்படவேண்டியது.
உதாரணமாகத் திரைப்படத்திற்குள் நிகழும் யதார்த்தமும் வெளியே உள்ள சமூக யதார்த்தமும் தலைகீழாக இருப்பதைக் காட்டும் காட்சிகளைச் சுட்டிக்காட்டலாம். ’இப்போது ஏன் குத்துவிளக்கு, இது பகல் அல்லவா?’ என்கிறார் ஒருவர் படப்பிடிப்பின் போது. ‘சினிமாவுக்குள் இது இரவு’ என்கிறார் தொழில்நுட்பம் தெரிந்தவர். அங்கே புலையப்பெண் உயர்சாதிப்பெண்ணாக வந்து நிற்கிறாள். இங்கே அந்த ஆச்சரியம் தாளாமல் தவிக்கிறார்கள் பிறர்.

டானியேல் முதல்முறையாக ஃபிலிமைக் காணும் காட்சி அதை முழுமைசெய்கிறது. எல்லாக் காட்சியும் அதற்குள் தலைகீழாக இருக்கிறது. அவரது முகம் மலர்கிறது. ஆம், அவர் தான் கண்ட சமூக யதார்த்தத்தைத் தன் கலைக்குள் தலைகீழாக ஆக்கிவிட்டிருக்கிறார்.

அப்பாவின் நினைவுக்கூட்டத்துக்காக வரும் ஹாரீஸ் நாடார் வெளியே மோகன்லாலின் மசாலாப்படம் வெளியான அன்று பெட்டியுடன் நடனமிடும் ரசிகர் கும்பலைக் கண்டு திகைத்து பின் மெல்ல புன்முறுவல் செய்யும் காட்சி அதைப்போல மிக கவித்துவமானது.
படத்தின் அப்பட்டத்தன்மை மலையாளசினிமாவுக்கே உரியது. எல்லா வரலாற்றுமாந்தர்களும் குறைநிறைகளுடன் அப்படியே வருகிறார்கள்.

‘தெரியாமல் முன்னோடியாக ஆகிவிட்டேன்…மன்னிக்கணும் மன்னிக்கணும்’ என்று நோய்ப்ப டுக்கையில் கைகூப்பும் சுந்தர்ராஜ் ஓர் எல்லை. மறுபக்கம் பி.யூ.சின்னப்பா ஒரு ஏமாற்றுப்பேர்வழியாக வருகிறார்.

மிகக்குறைந்த செலவில் எடுக்கப்பட்ட இப்படத்திற்கு மிகச்சிறந்த கலை இயக்கம் அமைந்திருக்கிறது. 1930 முதல் 1980 வரையிலான காலம் சரியாகவும் அழகாகவும் காட்சிக்குள் வந்திருந்தது. கலை இயக்குநர் . இந்தப்படத்தின் சிறப்பான அம்சம் இந்தியாவின் மிகச்சிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான வேணுவின் அற்புதமான ஒளிப்பதிவு. காலங்கள் வழியாக உணர்வுகள் வழியாக ஒழுகிச்செல்லும் அனுபவத்தை அளிக்கிறது இது.

திரைப்படங்கள் ஒவ்வொன்றையும் ஒரு ’ஃபிலிம் பிரேம்’ என்று உவமிக்கலாம். சமகாலம் என்பது அந்த புரஜக்டரின் ஒளிச்சட்டம். அந்தச் சதுரத்தின் வழியாக அவை வேகமாக ஓடிக்கொண்டே இருக்கின்றன. கணநேரம் மட்டுமே அவற்றின் ஆயுள். தன்னைக் காட்சியாக விரித்ததுமே அடுத்ததற்கு இடம் விட்டு அவை மறைகின்றன. ஆனால் அவற்றில் ஆயிரத்தில் ஒன்று நிரந்தரம் பெறுகிறது. விளக்கொளியில் எப்போதுமிருக்கிறது. அப்படிப்பட்ட படங்களில் ஒன்று இது.

மரணப்படுக்கையில் டானியேல் கிடக்கிறார். மார்பைத் தடவிக்கொடுக்கிறார் ஜேனெட். எதிர்ச்சுவரில் இரவின் ஒளியில் நிழல்கள் ஆடுகின்றன. அதை ஒரு சினிமாவாகப் பார்த்துக்கொண்டே இறக்கிறார் டானியேல். அந்த ஒரு காட்சி மலையாள சினிமா உள்ளவரை அழியாமலிருக்கும்.

படம் பார்த்தபின் இயக்குநர் கமலிடம் தொலைபேசியில் பேசினேன். ’உங்கள் கருத்துக்காக எதிர்பார்த்திருந்தேன்’ என்று சொன்னார். ’ஒரு குமரிமாவட்டத்தினனாகப் பெருமைப்படுகிறேன். நன்றி சொல்கிறேன்’ என்று சொன்னேன்.




No comments:

Post a Comment