Sunday, 24 June 2018

HOTELS AND LADIES - SHORT EELAM -CANADA STORY



HOTELS AND LADIES -
SHORT EELAM -CANADA STORY


ஈழத்து தமிழில் 
சோத்துக்கடைச் சிங்காரிகள் -சிறுகதை



சோத்துக்கடைகளுக்கும் கியூறியஸ்க்குமான பந்தம் பூர்வீகமானது. பஸ் ஏறி யாழ்ப்பாணம் போவதாயினும், முடி துறக்க அடுத்த ஊரில் உள்ள சந்திக்கு செல்வ தாயினும் சரி... சோத்துக்கடைகளில் ஐந்து இடியப்பம் வாங்கித் தந்தால் தான் கியூறியஸின் இழுபட்ட மூஞ்சி நேராகும் என்ற விசயம் பேரனாருக்குத் தெரியும்.

பிழிந்த தேங்காய்ப் பூவில் மிளகும் கறிவேப்பிலையும் போட்ட பச்சை மிளகாய்ச் சம்பலும் சாம்பாரும் சேர்த்து ஐந்து இடியப்பம் சாப்பிடுவதற்குள்ளேயே பசியாறி, தலைமயிரை 'ஒட்ட மொட்டையாய் வெட்டிய கவலை' எல்லாம் போய்விடும். மலாயன் கபே, அம்பாள் கபே இடியப்பங்கள் எல்லாம் கியூறியஸ் ஊரில் இருந்த காலத்திலேயே பட்டினியால் மெலியத் தொடங்கி விட்டன.

அந்தச் சோத்துக் கடைகளில் எல்லாம் சிங்காரிகள் யாரும் இருப்பதில்லை. மலைநாட்டுப் பக்கம் இருந்து வந்து டிப்ஸ் என்பதை கனவிலும் காணாத சர்வர் சிங்காரங்கள், கை துடைத்தே பழுப்படைந்த வெள்ளைச் சாரங்களை முழங்காலோடு மடித்துக் கட்டி, சுட்டு விரலை உள்ளே வைத்துக் கொண்டு வந்து வைத்த தண்ணீரை இலையில் புழுதி போகத் தெளித்துக் கழுவி, வாளியில் கொண்டு வந்த சம்பல், சாம்பார், சொதியுடன் சாப்பிட்ட பின்னால், கிளாசில் காலம் போகப் போக உயரம் குறைந்தே வரும் தேத்தண்ணியால் கழுவி உள்ளே தள்ளல் நடக்கும்.

இடியப்பம் தவிர்ந்த, தோசையும் இட்லியும்... நேற்று அவித்ததில் மிஞ்சிய பச்சையரிசிச் சோற்றின் மறு பிறப்பாய் இன்று உதித்தவையாய் இருக்கும். All you can eat சாப்பாடு என்றாலும், அதிகம் சாப்பிடத் தோன்றா மல் 'கயர்ப்பு' ருசி ஊட்ட பாக்குப் போட்டு அவித்த பின்னாலும், 'ஒரு பிடி' பிடிக்கும் சாப்பாட்டு ராமன்களை 'ஏலே, அண்ணைக்கு நாலாம் தரம் சோறு போடடா' என்று மானத்தை வாங்கும் சர்வர் சிங்காரங்களின் கிண்டலையும் பொருட்படுத்தாமல் கொடுத்த காசுக்கு இலையையும் வழித்துத் துடைத்து ஏப்பம் விடும் ஜாம்பவான்கள் நிறைந்த பூமி அது.

இந்தியாவில் கூட போகும் வழியில் நின்ற நிலையில் சாப்பிடும் கையேந்தி பவன்கள் இருந்தாலும் நம் ஊரில் அவ்வாறான பவன்கள் இருக்கவில்லை. ஆனந்தபவன் தான் இருந்தது.

இந்த சோத்துக்கடைகளையும் விட, ஆங்காங்கே கமலஹாசனும் ரஜனிகாந்தும் ஹிப்பித்தலையுடன் காட்சியளிக்கும் படங்கள் கொண்ட போர்டுகள் மேலே தொங்கும் டீக் கடைகளில், தேயிலை இல்லாவி ட்டாலும் வெறும் வடியை சுடுதண்ணீரில் வைத்தே தேநீர் போடக்கூடிய தேயிலைவடிகள் முன்னால் தொங்க, முன்னால் கானின் அருகில் உள்ள மாநகரசபை வினியோக நீரில் கழுவிய கிளாஸ்கள் தலைகீழாய் காத்திருக்க, நீராவிப் புகையிரதக் கணக்கில் கொதிக்கும் தண்ணீர் பொயிலரின் பின்னால் நிற்கும் 'டீ மேக்கர்' ஒருபுறமும், அங்குமிங்குமாய் டியூட்டரிக்கு போகும் கன்னியர்களுக்கு சைட் அடித்தவாறே பெல்பொ ட்டமும், பொலியெஸ்டர் சேட்டும் மணிக்கூடுமாய் விரல்களில் தொங்கும் பட்டை மோதிரங்கள் மினுங்க, கல்லாவில் உட்கார்ந்திருக்கும் மூனா மறுபுறமுமாய், தூக்கியிருந்த வாழைக்குலைகளுக்கு குனிந்து, கண்ணாடிப் பெட்டியில் கிடக்கும் வடை, வாய்ப்பன், மோதகம், பற்றிஸ், றோல்கள் அடுக்கிய சோஸர்க ளையும் கடந்து, இலையான் கலைத்து, நான்கு மாதமாய் கழுவியறியாத் துணியால் துடைத்த மேசையில் உட்கார, கேட்காமலேயே, முன்னே யாரோ நிராகரித்த வடைகள் கண்ணாடிப் பெட்டியில் இலையான் படாமல் காத்திருந்து, முன்னால் வந்திறங்கி, பாவச் சோதனை செய்யும்.

மூனா பெருமையோடு வாங்கி வைத்திருக்கும் திறீ இன் வண்ணிலிருந்து கிளம்பும் அவ்வாரத்து இசைச்செ ல்வத்துப் பாடல்களை ரசிப்பதா? மானத்தைக் காப்பாற்ற இதில் ஏதாவதை எடுத்துக் கடிப்பதா? என்ற சந்தேக ங்களை நிவர்த்தி செய்ய, பொக்கட்டை தட்டி, பொக்க ட்டில் உள்ள பணத்தை உறுதி செய்து நிமிர்வதற்குள் கூட்டி வந்தவர்கள் ஆளாளுக்கு ஒன்றைக் கடித்துக் கொண்டே, விருந்தோம்பலை நினைந்து நன்றியோடு பெருமையாய் சிரிக்க....

சே.. இப்படியெல்லாம் அனுபவப்படுவதற்கு கியூறியஸிடம் பணம் இருந்ததில்லை. நான் வெறும் விருந்தாளி மட்டும் தான். (விருந்துக்கு அழைத்து என் வயிற்றை நிறைத்த என் பாடசாலை நண்பர்கள் இன்றும் என் நினைவில் நிறைந்திருக்கிறார்கள். டேய் மச்சான், சொறிடா... நான் நினைச்சன் நீ காசு வைச்சி ருக்கிறாய் எண்டு!). இருந்தாலும் வடையில் கடிபட்ட மிளகாய் உறைப்போடு, சுடச் சுடக் குடிக்கும் பிளேன் டீயின் சுவையே தனி!

பின்னால் வந்த கோப்பிக் கடைகளில் சிங்காரிகள் பரிமாற வந்ததால், வயதுக் கோளாறுக்குள்ளாகிய இளவட்டங்கள் அந்தக் கோப்பிக் கடைகளை வட்டமிட்டதும் உண்டு. கியூறியஸ் அவ்வாறு வழிந்ததில்லை என்பதற்கு கியூறியஸின் கண்ணியம் மட்டும் அல்ல, அவனது பொக்கட்டுக்களில் காசு இல்லாததும் ஒரு காரணம்.

இவற்றை விட, சந்திகளிலும் பஸ்தரிப்புகளிலும் இரண்டு மேசை மட்டும் வைத்த தேத்தண்ணிக் கடைகள் இருக்கும். பஸ் பயணிகளினதும் பாதசாரிகள், சைக்கிள் வழிப்போக்கர்களின் நலன்கருதி ரேடியோ சிலோன் பாட்டும் கட்டித் தூக்கிய கதலிக் குலையும், மூக்குப் பேணிகளில் வரும் தேநீரும், சுருட்டும், பாக்குச்சீவல், வெத்திலையும் காத்திருக்கும்... அத்தோடு வடையும் வாய்ப்பனும் வாரக்கணக்கில் காத்திருக்கும்.

கனடா வந்த பின்னால் இப்படியான சோத்துக்கடைகள் இல்லை என்பது கியூறியஸ்க்கு பெரும் குறை... இங்கே றெஸ்ரோறன்ட்கள் என்ற பெயரில் ஆங்காங்கே 'தமிழ் மகன்களின் நிர்வாகத்தில்' உணவகங்கள் தோன்றி னாலும், யாழ்ப்பாணத்துக் கபேக்களின் வாழையிலைச் சாப்பாட்டு மகிமை இங்கு கிடைக்கவில்லை. மேசை யில் உட்கார்ந்து எந்தக் காலத்தில் தட்டில் சாப்பிட்டுப் பழகினோம்? disposable இலை தானே நம்ம பழக்கம்.

பின்னால் வாழையிலையில் சாப்பாடு கட்டி 'கிராமத்து விருந்து' வைத்து ஓகோ என்று வியாபாரம் நடந்தாலும் அது கூட, கொஞ்ச நாளில் தலைமறைவாகியது. தனியாய் டேக் அவுட் கடைகள் தொடங்குமுன்பாய், வாழையிலையில் பார்சல் கட்டி, மீன் பொரியல் சகிதம் கடை கடையாய் வினியோகிக்க, வழி மேல் விழி வைத்துக் காத்திருந்து வாங்கிச் சென்று உண்டு மகிழ்ந்தனர்.

அந்தக் கடைகளை விட தற்போது மூலைக்கு மூலை விரவிக் கிடக்கும் ரேக் அவுட் உணவகங்கள் தான் கியூறியஸின் தற்போதைய அறு(சு)வைக்கு உண்டி கொடுத்து உயிர் கொடுப்பன. முன்பு ஒரே ஒரு கடை தான் இடியப்பத்திற்கு என்று இருந்தது. இதற்காகவே, அடுத்த ஊருக்கு பயணம் செய்யும் வழிப்போக்கன் மாதிரி... நீண்ட பயணம் மேற் கொண்டு, பிளாஸ்டிக் பைகளில் அடைத்த சம்பல், சொதி சகிதம் இடியப்ப த்தைக் கொண்டு வந்து சேர்த்து, தாய்மார்கள், சகோதரிகளின் சமையல்களுக்கு செய்த விமர்சனத் துன்பங்களுக்குப் பிராயச் சித்தமாக, கியூறியஸ் உட்பட்ட பல பிரம்மச்சாரியர்கள் தாயகக் கனவுகளை மீட்டி உண்டு மகிழ்ந்தனர்.

பின்னால், வாடிக்கையாளர்களின் நலன் கருதியும், யார் எந்த லாபகரமான தொழிலைச் செய்தாலும் அதற்குப் போட்டியாக கீரைக் கடை போடும் பாரம்பரியத்திலும், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்த இடியப்ப மெஷின்களுடன் ஆங்காங்கே ரேக் அவுட் இடியப்பக் கடைகள் கீரை போல் வேகமாய் முளைக்கத் தொடங்கின.

போட்டியின் ஆரம்பக் கட்டத்தில் சீனிச் சம்பல், குழம்புக் கறிகள் என்றெல்லாம் இலவச இணைப்புகள் வந்தன. இடியப்பக் கடைகள் பின்னால் சோற்றுக்கடைகளாக விஸ்தரிக்கப்பட, ரேக் அவுட் உணவகங்கள் இஷ்ட தெய்வங்கள், பிறந்த ஊர், வாயில் புகாத பிள்ளைகள் பெயர்களில் எல்லாம் திறந்தன.

ஊரில் சட்டி பானை கழுவியறியா பிரமச்சாரிகள் எல்லாம் அவித்து விழுங்கிய கஷ்டம் நீங்க, தெய்வ கடாட்சம் கிடைத்த கணக்கில் தோன்றிய இந்தக் கடைகள் பெரும் வரப்பிரசாதமாய் அமைந்தன.

கனடியக் கடைகளில் எல்லாம் கிடைக்கவே முடியாத, இரண்டு நேரமோ, இரண்டு பேரோ சாப்பிடக் கூடிய, நாலு டொலர் சாப்பாடுகள் தமிழ்க்கடைகளில் அன்றி வேறெங்கு கிடைக்கும்? டேக் அவுட் சாப்பாடுகளுடன் அப்பளம், மிளகாய்ப் பொரியல், ஊறுகாய், தயிர், பாயாசம், ரசம் என்றெல்லாம் விசேட போனஸ்கள் நீள... ஒரே கொண்டாட்டம் தான்.

இந்தக் கடைகளின் சாப்பாடுகளை விட, அவர்கள் பத்திரிகைகளிலும் வானொலிகளும் செய்யும் விளம்பரங்கள் சுவையானவை. அது இன்னொரு கதை.

ஆனாலும், இந்த டேக் அவுட் கடைகள் எல்லாமே ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் ஓகோ என்று மக்கள் படையெடுப்பவைகளாகவும் பின்னர் மங்கிப் போய் இலையான் கலைப்பவைகளாகவுமே இருக்கின்றன என்பது கியூறியஸின் மனதை உறுத்தும் விசயம். கொஞ்சம் பெயர் கிடைத்து வாடிக்கையாளர் பெருகியதும் தரத்தைக் கவனிக்காமல் விடுவதும் தலைக்கனம் ஏறி ஆட்களை மதிக்காமல் விடுவதுமாக இருப்பவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். ஏனோ இந்தத் தொழிலில் நீண்ட காலம் இருப்பவர்கள் அதிகமில்லை.

கியூறியஸின் வீட்டுக்கு அருகில் ஒருவர் ஒரு கடை வைத்திருந்தார். கியூறியஸ் அந்தப் பகுதிக்கு செல்லும் நாட்களில் யாரும் அங்கே உணவு வாங்கிக் கொண்டிருப்பதைக் கண்டதும் இல்லை. ஒருநாள் போனால், அவர் மூலையில் கதிரையில் உட்கார்ந்தி ருந்து, 'ஏன் வந்தாய்?' என்று கேட்காத குறையாக ஒரு பார்வை. வருவோரை வரவேற்கும் இயல்புக்கும் அவருக்கும் எந்தச் சம்பந்தமும் இருந்ததாகத் தெரியவில்லை.

'விரும்பினால் வாங்கு, இல்லாட்டிப் போ' என்பது போன்ற பார்வையையும் மீறி வாங்கியதன் பின்னால் அவர் கடைப் பக்கமே போகவில்லை. கொஞ்ச நாளில் அவர் கடையை விற்றுப் போக, இன்னொருவர் வாங்கி அவரும் நட்டப்பட்டு, இன்னொருவர் தலையில் கட்ட, அவர் வாங்கி இலையான் கலைத்துக் கொண்டு இருக்கிறார். எப்படிக் கட்டுப்படியாகிறதோ என்ற சந்தேகம் இன்று வரை கியூறியஸிற்கு..

அப்புறமாய் இன்னொரு கடை... சனம் கொஞ்ச நாளாய் ஓகோ என்று அடிபட்டது. கடைக்காரர் பெண்களைக் கண்டதும் 'அக்கா' என்று பல்லிளிக்கும் போதே, எஞ்சியிருக்கும் பற்களைக் குத்தி உடைக்க வேண்டும் போலிருக்கும். அடிக்கடி, வாங்கிய உணவின் தொகையைக் கூட்டிப் பார்த்தால், அவசரத்தைச் சாதகமாக்கி, அதிகமாய் அறவிட்டது தெரிந்தது.

அதையும் விட, சம்பலோ, சொதியோ இல்லாவிட்டால், தெரியாமல் கட்டித் தலையில் கட்டி அனுப்பி விடுவார். பின்னர் போன் அடித்தால், 'அடுத்த முறை வரேக்கை தாறம்' என்ற விளக்கம்... இதன் பின்னால், கியுறியஸ் பகிஷ்கரிப்பு.. சாப்பாட்டு விடயத்தில் ஏமாற்றுபவர்கள் எந்த விடயத்திலும் நம்பத் தகுந்தவர்கள் இல்லை. இது கியூறியஸ்க்கு மட்டுமல்ல, பலருக்கும் நடந்திரு க்கிறது. பசியில், அவசரத்தில் வருபவர்களுக்கு இப்படிச் 'சுத்தி தலையில் கட்டி' அடித்தால்.... எப்படி வாடிக்கையாளர் நிலைப்பார்?

வாழையிலைக்காரரும் பெண்கள் தேவை என்று பத்திரிகையில் விளம்பரம் போட்டு, பெண்களை கடையில் வைத்தால்... ஊரிலிருந்து புதிதாய் வந்து 'பஞ்சாபியுடன்' பரிதாபத் தோற்றத்தில் 'உங்களுக்கு என்ன வேணும்?' என்று கேட்கும் போது, அந்தப் பரிதாபத்தைப் பார்த்து வயிறு எரியும். ஒருநாள், சாப்பாடு வாங்கப் போக, கடையில் அவருடைய வாழையிலைச் சாப்பாட்டுக்குக் காத்திருந்து தாமதமானதால், போன் அடித்த இன்னொரு வாடிக்கையாளருடன் தொலைபேசியில் கதைத்த திமிர்த்தனமான கதையை கேட்க அவர் அதிக காலம் நிலைக்க மாட்டார் என்பதைச் சொல்லி நின்றது.

இந்த வியாபார தந்திரங்கள் ஒருபுறம்.. இந்தக் கடைகளை நம்பியே ஒரு கூட்டம் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டு இருக்கிறது. 'காப்புக் கையால்' சமைப்பித்து வாய்க்கு ருசியாய் மணக்க, மணக்க சாப்பிடலாம் என்ற எதிர்பார்ப்பில்,

கிரெடிட் காட்டில் இறக்கிய... 'தொட்டாலும் கை மணக்கும்' சிங்காரிகள் எல்லாம் இப்போது 'சமைச்சால் வீடு மணக்கும்' என்று சொல்லி, சண் டிவி தொலை க்காட்சித் தொடர்களுடன் டேக் அவுட்டும் எடுத்து வீடு சேர்கிறார்கள். 'மலிவான விலை, பல்வேறு தெரிவுகள், நேரச் செலவும் இல்லை. பல இல்லத்தரசிகளுக்கு இது ஒரு வரப்பிரசாதம்' தான். சமையலே இல்லாமல் ஊர் செழிக்கிறது.

இந்தச் சோத்துக் கடைச் சிங்காரிகளில் கியூறியஸ்க்குப் பிடித்தது... கவுண்டரின் பின்னால் சதா ஓடிக் கொண்டேயிருக்கும் தமிழ்ப் படப் பாடல் டிவிடி களில், ஆடுகின்ற சினிமா சிங்காரிகள் தான்.

பின்னே என்னவாம்? பசியில் சாப்பாடு வாங்கப் போய், கியூவில் நின்று இழுபட்டுக் கொண்டிருக்கும் போது, 'உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கழகு' என்று சொல்லிச் சேமித்த பணத்தில் நூறு ரூபாய்க்கு பேஷியல் செய்து மேக்கப் அப்பிய 'சிவந்த முகத்தில் பொட்டு வைத்த' 'சீவி முடித்த சிங்காரிகள், கவுண்டரில் நின்று 'வெள்ளை இடியப்பமா? சிவப்பு இடியப்பமா?' என்ற கேள்விக்கு, ஏதோ தமிழர் பிரச்சனைக்கான தீர்வுக்கான கேள்வி போல், 'பொறுங்கோ, அவருக்கு அடிச்சுப் போட்டுச் சொல்லிறன்' என அதிலிருந்தபடியே, 'கணவனே, கண்கண்ட தெய்வம்' என்று, 'இஞ்சேருங்கோ, நீங்கள் இண்டைக்கு சமைக்க வேண்டாம், நான் இடியப்பம் வாங்கிக் கொண்டு வாறன், சிவப்போ? வெள்ளையோ?' என்று, பின்னால் வரிசையில் நிற்போர் பற்றி எந்தக் கவலையுமே இல்லாமல் செல்போனில் குழை(க்கு)யும் பத்தினித் தெய்வங்கள் வெறுப்பூட்ட...

தமிழ்ப் படப் பாடல்களில் பின்னால் நின்றாடும் துணை நடிகைகள் போல, பியூட்டிசியனிடம் புருவமும் மீசையும் பிடுங்கிய பெண்கள் கியூறியஸைப் புடைசூழ நின்று, கல்லாவில் நின்று விலாசம் காட்டும் சிங்காரி பற்றி கியூறியஸின் கண் நோக்கி, பதிலை எதிர்பார்த்து நளினமாக நெளித்துச் சுழிக்கும் உதடுகளை, முகத்தில் எந்தச் சஞ்சலமோ, உணர்ச்சி பாவங்களோ இல்லாமல் பார்த்துக் கொண்டே முன்னால் நகர..சோமாலியாவிலிருந்து வந்திருக்கக் கூடிய தோற்றத்தில் மெலிந்திருக்கும் நோஞ்சான்களும், கல்யாண வயசில் பெண் பிள்ளைகளை வைத்திருக்கக் கூடிய வயதில் இருந்து கொண்டு, அங்கு மிஞ்சிய உணவுகளைக் கொண்டே உருப்பெருத்திருக்கக் கூடிய பெண்களுமாய், கவுண்டரில் நின்று கியூறியஸைப் பார்த்து 'அண்ணை, சொல்லுங்கோ' என்று புண்ணில் புளி தடவ..
மேலே டி.வியில் அரைகுறை ஆடைகளுக்குள்ளால் காட்டக் கூடாததுகளை எல்லாம் காட்டி, தளுக்கி குலுக்கும் சிலுக்குச் சிங்காரிகள் கிறங்கும் கண்களுடன் கியூறியஸைப் பார்த்து 'பருவத் திருடா, பருவத் திருடா, பசிக்குதாடா, ருசிக்க வாடா' என்று அழைக்கும் போது, இருக்கும் பசியில் கவுண்டரின் மேலாய் பாய்ந்து ஏறி எதைக் கொடுத்தாலும் புசிக்கத் தோன்றும்.

வயிற்றுப் பசி ஒரு பக்கம் பிடுங்க.. இந்த வயிற்றெரிச்சல் மறுபக்கம் பிடுங்க... பேசாமல் வீட்டிலேயே அவித்(ததை)து விழுங்கியிருக்கலாம் என்று தோன்றும்.
மாலைகளிலும் வார இறுதிகளிலும் வாங்கிய சாப்பாட்டுப் பார்சல்களைக் 'கையேந்தி பவான்களும், பவானிகளும்' கண் நிறைய கனடாவில் நடமாடும் அளவுக்கு... இந்த டேக் அவுட் கடைகள் வந்து எங்கள் வாழ்வுமுறையை எவ்வளவு தூரம் மாற்றியிருக்கி ன்றன என்பது நாங்கள் எதிர்பார்க்காத ஒன்று தான்.

யாழ்ப்பாணம் போலவே, பிழிந்த தேங்காய்ப் பூவில்
சம்பல் செய்யும் தொழில்நுட்பம் கூட மாறாமல் இங்கேயும் வரும் என்பதும் நாங்கள் எதிர்பார்க்காத ஒன்று தான்.

No comments:

Post a Comment