Wednesday, 13 June 2018

ABOUT BANUMATHI IN NADODI MANNAN








ABOUT BANUMATHI IN NADODI MANNAN


நாடோடி மன்னன் பற்றி எம்.ஜி.ஆர். 
பானுமதியின் பெருந்தன்மை

இப்போது இன்னொரு முக்கியமான பகுதிக்கு வருகிறேன்...

நடிக நடிகையர்கள் பற்றி எழுதப் போகிறேன் என்பதை நீங்களே அறிந்து கொண்டிருப்பீர்கள். நான் யாரையாவது முதலில் குறிப்பிட்டு எழுதினால் மற்றவர்கள் முதலில் குறிப்பிட்டவர்களைவிடத் தாழ்ந்தவர்கள் என்றோ, திறமை குறைந்தவர்கள் என்றோ கருதக்கூடாது...

முதலில் நடிகையர்களைப் பற்றிக் குறிப்பிடுகிறேன். படத்தில் வந்த வரிசைக் கிரமத்திலே எழுத விரும்புகிறேன். திருமதி பி.பானுமதி அவர்கள் தான் படத்தில் முதலாவதாக வருகிறவர்கள்....

அவர்கள் நடிப்பைப் பற்றியும் ஒத்துழைப்பைப் பற்றியும் எழுதுவதற்கு முன் மூன்று ஆண்டுகட்கு முன்னர் நடந்த ஒரு நிகழ்ச்சியையும் இங்கு குறிப்பிடுவது அவசிய மென்று கருதுகிறேன்.

சேலத்தில் மாடர்ன் தியேட்டர்ஸாரின் ‘அலிபாபா’ படத்தில் நானும் திருமதி பானுமதி அவர்களும் நடித்துக் கொண்டிருந்த நேரம் ‘நாடோடி மன்னன்’ விளம்பரம் - ஜெண்டாவின் கைதி என்ற ஆங்கிலக் கதையின் தழுவல் என்று வெளியிடப்பட்டது. இரண்டு, மூன்று நாட்களுக்கு பிறகு பரணி பிக்சர்சாரின் விளம்பரமும் வெளி வந்தது. அவர்களுடைய விளம்பரம் வெளிவந்த அன்று, எங்கள் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. தொலைபேசியில் என்னுடன் பேசிய திருமதி. பானுமதி அவர்கள் சொன்னார்கள் :

‘நாங்கள் எடுக்கும் கதையையே நீங்களும் எடுக்கப் போகிறீர்களாமே ! நமக்குள் போட்டி வேண்டாம். உங்கள் கதையை மாற்றிக் கொள்ளுங்கள். நாங்கள் பல மாதங்களாகச் செலவு செய்து எல்லாமே தயாராகி விட்டன’ என்றார்.


நான் சொன்னேன் : ‘நான் பல ஆண்டுகளாக உருவாக்கி வந்த உருவம் இது. எனது வாழ்வில் ஒரு திருப்பத்தை விரும்பி அதற்காக இக்கதையைத் தேர்ந்தெடுத்தேன். அதிலும் நானே டைரக்‌ஷன் பொறுப்பையும் ஏற்கப் போகிறேன்’ என்று. இது பற்றி மேலும் பேச்சு நடந்தது. முடிவாகச் சொன்னேன், ‘நான் ஜெண்டாவின் கைதி என்ற கதையில் உள்ள மன்னனாக மாற்றப்படும் காட்சியை மட்டும் தான் வைத்துக் கொள்ளப் போகிறேன் மற்றவை எல்லாமே வேறாகத்தானிருக்கும் ;உங்களுக்கும் கதையை மாற்ற முடியாதிருக்குமானால் நீங்களும் எடுங்கள். நமக்குள் போட்டா போட்டியே வராது. உங்கள் கதை ஜெண்டாவின் கைதியின் நேர்ப்பதிப்பு , எனது கதை வேறு’ என்று சொன்னேன்.

உண்மையில் எனக்கும் குழப்பம் ; அவர்களுக்கும் அந்த நிலை தான்.

சில நாட்களுக்குப் பிறகு சொன்னார்கள் : ‘நாங்கள் அந்தக் கதை எடுப்பதை நிறுத்திவிட்டோம். சந்தேகமில்லாமல் தாங்கள் படத்தை எடுக்கலாம்’ என்று. நன்றி தெரிவித்தேன் உண்மையான உள்ளத்துடன். நாடோடி மன்னனில் தனக்கு நடிக்கும் வாய்ப்பு இருக்கும் என அவர்கள் எதிர்பார்க்கவே இல்லை அப்போது.
எந்த நலத்தையும் எதிர்பாராமல் அவர்கள் விட்டுக் கொடுத்தார்கள் என்பது தான் உண்மை.


தன்னிடமிருக்கும் கதையைத் தருவதாகவும், திரு. ஏ.கே.வேலன் அவர்கள் தான் கதை வசனம் எழுதியிருப்பதாகவும், அதைப் பயன் படத்திக் கொள்ளலாமென்றும் சொன்ன பெருந்தன்மையை எவ்வளவுதான் போற்றினாலும் போதாது....
நான் எங்கு தொழில் செய்தாலும் சுதந்திரமாக இருக்கவும், தொழில் செய்யவும் விரும்புகிறவன். இதே குணத்தைப் படைத்தவர் திருமதி. பானுமதி அவர்கள். இருவரும் விட்டுகொடுக்காத மனோபாவம் உள்ளவர்கள். எம்.ஜி.ஆர்.தானே டைரக்ட் செய்து, தான் சொந்தத்தில் எடுக்கும் இப்படம் ஒழுங்காக முற்றுப்பெறுமா, பானுமதி அவர்கள் படத்தில் இருப்பார்களா படம் வெளிவரும்போது?..... என்றெல்லாம் சந்தேகப்பட்டவர்கள் (அதை விட எனது வீழ்ச்சியைக் காண ஆசைப்பட்டவர்கள் என்றால் பொருந்தும்) வெட்கித் தலைகுனியும்படி ஒத்துழைத்ததோடுமல்ல, தான் ஏற்ற ‘மதனா’ என்ற பாத்திரத்தை, வேறு எவரும் இவர் போல் திறமையாக நடித்திருக்க முடியாது என்று மக்களைச் சொல்லும்படி செய்துவிட்டார். இவ்வாறு புகழப்படுவதைவிட ஒரு நடிகையின் வெற்றிக்கு வேறென்ன சான்று வேண்டும்.

No comments:

Post a Comment