Sunday, 20 May 2018

IS MARRIAGE A POISON OR NECTOR





IS MARRIAGE A POISON OR NECTOR


திருமணம் என்பது உங்களைப் பொறுத்தவரை அமுதமா? விஷமா? நீங்களே யோசித்து முடிவெடுங்கள்!

கேள்வி 
நான் ஒரு பெண். எனக்கு இருபத்தேழு வயதாகிறது. எதனாலோ, எனக்குத் திருமணத்தில் நாட்டமே இல்லை. திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்வது குறைபாடுள்ள வாழ்க்கையா?

சத்குரு: 
புனித யாத்திரை செல்லும் குழுவில், ஒரு பெண் மட்டும் அடிக்கடி பின் தங்குவதைக் குரு கவனித்தார். அவளை அருகே அழைத்தார். அந்தக் குழுவிலிருந்தே தன்னை விலகச் சொல்லப் போகிறார் என்று அவள் பயந்து போனாள். ‘இனி வேகமாக நடக்கிறேன். மறுபடி இப்படி நேராது’ என்று மன்னிப்பு கோரும் குரலில் சொன்னாள். குரு புன்னகைத்தார். “இலக்கு எது என்றும், பாதை எது என்றும் உனக்குத் தெரியும். மற்றவர்கள் போகும் அதே வேகத்துடன் போட்டியிட்டால், உன் கால்கள் விரைவில் களைத்துப் போகும். வலி தாளாமல், பயணத்தையே கைவிடும்படிகூட நேரலாம். அதனால், உன் வேகத்தில் நீ வருவதுதான் புத்திசாலித்தனம். அப்போதுதான் பத்திரமாக வந்து சேர்வாய். தனித்து நடப்பதால் தப்பில்லை!” அதையேதான் நானும் சொல்கிறேன்… மற்றவர்களைப் பார்த்து அவர்களைப் போலவே உங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. உங்களுக்கு எது விருப்பமாக இருக்கிறதோ, வசதியாக இருக்கிறதோ அதுதான் உங்களுக்கு உகந்தது.

கேள்வி “ஆனால், ஒரு பெண் திருமணம் செய்யாமல் வாழக்கூடாது. அதனால், பல சங்கடங்கள் நேரும் என்று உறவினர்கள் திருமணத்தை வற்புறுத்துகிறார்களே?”


சத்குரு: 
நீங்கள் ஒன்றைக் கவனித்திருக்கலாம். எங்கே கலவரம் வெடித்தாலும், பெண்கள் தாமாகவே பாதுகாப்பாக பின்னணிக்கு ஒதுங்கிவிடுவார்கள். போர் என்று வந்தால், ஆண்கள்தான் முன்னணிக்கு வருவார்கள். சுய பாதுகாப்புக்கு உடல் பலம் முக்கியமாக இருந்த ஆதிகாலத்தில் ஒரு பெண் அவள் குடும்பத்தைச் சேர்ந்த ஆண்களால் பாதுகாக்கப்பட்டு வந்தாள். ஒரு தகப்பன் தனக்குப் பின் தன் மகள் பாதுகாப்பின்றிப் போய்விடக்கூடாது என்பதற்காக வேறொரு நம்பிக்கைக்குரிய இளைஞனிடம் அவளை முழுமையாக ஒப்படைத்த காரணத்தால்தான், அது கன்னிகாதானம் என்று அழைக்கப்பட்டது. பெண்ணைப் பாதுகாக்க அவளுக்குக் கல்யாணம் என்பது வாழ்க்கையின் அத்தியாவசியம் என்று இந்த சமூகம் நினைத்ததன் காரணம் அதுதான். ஒரு பெண்ணுக்குக் குறிப்பிட்ட வயதில் திருமணம் நடக்கவில்லை என்றால், அது அந்தக் குடும்பத்துக்கே ஓர் அவமானமாக கருதப்பட்டது. முக்கியமாக நிகழ்ச்சிகளில், திருமணம் ஆகாத முதிர்கன்னிகள் பங்குபெறுவது கடினமானது. அவளுடைய குணநலனே கேலிக்கு உரியதாகப் பேசப்பட்டது. திருமணம் என்பது ஒருவரது வாழ்க்கையில் நிகழக்கூடிய மிக அற்புதமான விஷயம் என்று சமூகம் காலங்காலமாக நம்ப வைக்கப்பட்டிருக்கிறது. இதனால்தான் எப்பாடுபட்டாவது தங்கள் மக்களுக்குத் திருமணம் செய்து கொடுத்துவிட வேண்டும் என்ற அச்சம் பெற்றோர்களிடம் உருவானது. இன்றைக்கும் சிலருக்குத் திருமணம் என்பது முக்கியமான ஒன்றாக இருக்கலாம். அதுவே வசதியாக இருக்கலாம். சந்தோஷம் தருவதாக இருக்கலாம். அவரவர் மனப்பாங்கைப் பொறுத்தது அது. ஆனால், அதுவே பொதுவான விதி அல்ல. ஒரு வாழ்க்கை முழுமை பெற திருமணம் ஆகியிருக்க வேண்டும் என்பது கட்டாயம் அல்ல. விருப்பம் இல்லாதவர்களும் புதிய உறவுகளை கவனமாகக் கையாளத் தெரியாதவர்களும் திருமணத்துக்கு வற்புறுத்தப்பட்டு, அதில் தள்ளப்படுவது பரிதாபமானது. ஒரு கம்பெனியில் புதிதாக ஆட்களை நியமிப்பது பற்றிய விவாதம் நடந்து கொண்டிருந்தது. “எத்தனை திட்டினாலும் பொறுத்துக்கொண்டு, எதிர்த்துப் பேசாமல் வாய் பொத்தி, வேலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்து பழகியவர்கள்தான் நம் கம்பெனிக்குத் தேவை” என்றார் முதலாளி. “அட, இவ்வளவு ஏன் சார்? சுருக்கமாக, திருமணம் ஆனவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என்று சொல்லுங்களேன்” என்றார் சங்கரன் பிள்ளை. ஆண்கள் பெண்களிடமும், பெண்கள் ஆண்களிடமும் பெரும்பாலும் இப்படி எதிர்பார்த்துதான் திருமணம் செய்கிறார்கள். திருமணத்தால் தங்களது வாழ்க்கை அர்த்தமற்றுப் போனவர்கள்கூட அடுத்தவரைத் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்துவதுதான் இந்தச் சமூகத்தில் நடக்கிறது.

கேள்வி 
“நான் கொண்டு வரும் சம்பளம் குடும்பத்துக்கு உதவியாக இருக்கிறது என்பதால்தான், என்னைக் கல்யாணம் செய்து கொடுக்காமல் பொறுப்பற்று இருக்கிறார் என்று தன் மீது குற்றச்சாட்டுகள் வரும் என அப்பா பயப்படுகிறாரே?” 

சத்குரு: 

பொருளாதாரம் எத்தனையோ தந்திரங்களைக் கையாளக்கூடும். எங்கோ ஒன்றிரண்டு குடும்பங்களில், மகள் கொண்டுவரும் வருமானம் பறிபோகாமல் இருக்க, சில அப்பாக்கள் அப்படிச் செய்யக்கூடும். ஆனால், மகளை உடைமை என்று நினைத்த காலம் மாறிவிட்டது. தான் சாவதற்குள், யாரிடமாவது அவளைப் பத்திரமாக ஒப்படைத்துவிட்டுப் போக வேண்டும் என்ற அவசியம் இப்போது இல்லை. சொல்லப்போனால், ஒரு பெண் யாருடைய உடைமையும் இல்லை. அவள் ஒரு தனி உயிர். சுதந்திரமான உயிர். அவளுக்குத் தேவையான கல்வியும், சமூக தளமும் அமைத்துக் கொடுத்தால் போதும்… அவளே தன்னைப் பாதுகாத்துக் கொள்வாள். தன் வாழ்க்கையை எப்படி நடத்திக் கொள்ள வேண்டும் என்று அவளுக்குத் தெரியும். ஓர் இளவரசன் முன் தேவதை தோன்றி, “விரும்பியதைக் கேள் தருகிறேன்” என்றது. “கலைகள் யாவிலும் நான் சிறந்து விளங்க வேண்டும்” என்றான் இளவரசன். தேவதை அப்படியே அருளி மறைந்தது. அழகு, செல்வம், அன்பான துணை என எல்லாம் இளவரசனுக்கு வாய்த்தன. ஓவியம், சிற்பம், இசை என எல்லாக் கலைகளிலும் அவன் விற்பன்னனாக இருந்தான். ஒருநாள், அரண்மனைக்கு வந்திருந்த துறவியின் முன் அவன் மண்டியிட்டான். “இத்தனை இருந்தும் எனக்கு மனநிறைவு இல்லையே. ஏன்?” என்று கேட்டான். துறவி சொன்னார்…

“உன் இலக்கை நோக்கி, உனக்கான பாதையை நீ தேர்ந்தெடுத்து நடந்தால் போதும்.. பார்க்கும் அத்தனை பாதைகளிலும் நடக்க முயன்றால், குழப்பமும், களைப்பும்தான் மிஞ்சும்!” உங்களுக்குத் தனிமைப் பாதை பிடித்திருக்கிறதா? அதையே தேர்ந்தெடுங்கள். திருமணப் பாதையில் நடந்துதான் ஆக வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை. உங்கள் மகிழ்ச்சிதான் முக்கியம். ஒருவருக்குத் திருமணம் ஆகவில்லை என்றால், அவரைக் குறை உள்ளவராகப் பார்க்கும் மனநிலை, முன் காலம் அளவுக்கு இப்போது இல்லை. சிறிது சிறிதாக மாறி வருகிறது. எனவே திருமணம் என்பது உங்களைப் பொறுத்தவரை அமுதமா? விஷமா? நீங்களே யோசித்து முடிவெடுங்கள்!

No comments:

Post a Comment