Tuesday, 10 April 2018

THAKAZHI SIVASANKARA PILLAI , MALAYALA WRITER DIED 1999 APRIL 10






THAKAZHI SIVASANKARA PILLAI ,
MALAYALA WRITER
DIED 1999 APRIL 10




தகழி சிவசங்கரப் பிள்ளை (Thakazhi Sivasankara Pillai, மலையாளம்: തകഴി ശിവശങ്കര പിള്ള, ஏப்ரல் 17, 1912 - ஏப்ரல் 10, 1999)[1] மலையாள மொழியின் யதார்த்தவாத முற்போக்கு எழுத்தாளர்களில் முக்கியமானவர். ஞானபீட விருது பெற்றவர். [2] மலையாள மொழியில் 36 நாவல்களையும் 500க்கு மேற்பட்ட சிறுகதைகளையும் ஒரு நாடகத்தையும் எழுதியிருந்ததால் பரவலாக அறியப்பட்டார்.
வாழ்க்கைக் குறிப்பு
சிவசங்கரப்பிள்ளை கேரளாவிலுள்ள ஆலப்புழா அருகே தகழி என்ற கிராமத்தில் பிறந்தார். அப்பா பொய்ப்பள்ளிக்குளத்து சங்கரக்குறுப்பு. அம்மா பார்வதியம்மா. பிரபல கதகளி நடிகரான குரு குஞ்சுக்குறுப்பு தகழி சிவசங்கரப்பிள்ளையின் சித்தப்பா.

அம்பலப்புழா கடற்கரை ஆங்கிலப்பள்ளியில் ஏழாம் வகுப்பு வரை படித்தார். வைக்கத்திலும் கருவாற்றாவிலும் பள்ளியிறுதிப் படிப்பை முடித்தார். பின்னர் திருவனந்தபுரம் சட்டக் கல்லூரியில் பிளீடர் படிப்பை முடித்தார். அப்போது கேரளத்தின் முக்கியமான இலக்கிய விமர்சகரான கேசரி பாலகிருஷ்ணபிள்ளையின் மாணவரானார். கேரளகேசரி இதழின் நிருபராக பணியாற்றினார். 1934ல் காத்தம்மாவை மணந்துகொண்டார். நெடுமுடி தெக்கேமுறி செம்பகச்சேரி சிறைக்கல் வீட்டில் கமலாட்சியம்மா என்பது காத்தம்மாவின் முழுப் பெயர்.

அம்பலப்புழா நீதிமன்றத்தில் பி பரமேஸ்வர பிள்ளை என்ற வழக்கறிஞரின் கீழே பணியாற்றினார். அப்போது கம்யூனிஸ்டுக் கட்சி ஈடுபாடு வந்தது. முற்போக்கு எழுத்தாளர் சங்க ஊழியராக பணியாற்றினார். கேரளத்தில் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை நிறுவி நிலைநாட்டியவர் தகழி.

இவர் கேரள சாகித்ய அக்காதமி என்ற அமைப்பை தலைமை ஏற்று திறம்பட நடத்தியிருக்கிறார்.

இலக்கிய வாழ்க்கை
தகழி தன் 13 ஆம் வயதில் முதல்கதையை எழுதினார். கேசரி பாலகிருஷ்ணபிள்ளை வழியாக முற்போக்கு எழுத்தில் ஈடுபட்ட தகழி யதார்த்தவாத அழகியல் கொண்ட முற்போக்கு படைப்புகளை எழுதினார். அவர் பிறந்த நிலப்பகுதி குட்டநாடு என்று அழைக்கப்பட்டது. அதைப்பற்றி விரிவாக எழுதியமையால் குட்டநாட்டின் இதிகாசக்காரர் என்று அவர் சிறப்பிக்கப்பட்டார்

1934ல் வெளிவந்த தியாகத்தின் விலை என்ற நாவல் அவரது முதல் பெரும் படைப்பாக அமைந்தது. 600 சிறுகதைகளை எழுதினார். வெள்ளப்பொக்கத்தில் என்ற அவரது கதை மிகப்பிரபலமான ஒன்று. 1954ல் வெளிவந்த செம்மீன் அவரது மிகப் புகழ் பெற்ற நாவல். இதை ராமு காரியாட்டு 1965ல் திரைப்படமாக தயாரித்தார். அந்தப் படம் தேசிய விருது பெற்றது. அதற்கு சிவசங்கரப் பிள்ளையே திரைக்கதை எழுதினார். இவரது பெரும்பாலான நாவல்கள் திரைப்படங்களாக வந்தன. இரண்டு இடங்கழி, அனுபவங்ஙள் பாளிச்சகள், அடிமகள், ஏணிப்படிகள் போன்றவை முக்கியமான படங்கள்.

ஏணிப்படி என்ற நாவலுக்காக கேந்திர சாகித்திய அக்காதமி விருது வழங்கப்பட்டது. 1984ம் ஆண்டுக்கான ஞானபீட விருதை கயிறு என்ற நாவலுக்காக பெற்றார்.

தலைமறைவு வாழ்க்கை
விடுதலைப் போராட்ட இயக்கத்திலும் பங்கு பெற்ற இவரது செயல்பாடுகள் அனைத்தும் காவல்துறையினரின் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டன. எனவே திருச்சூர் அருகிலுள்ள “தடக்கன்சேரி” எனும் ஊரில் இவர் தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்டார்.

நூல்கள்

தோட்டியின் மகன் [தமிழில் சுந்தர ராமசாமி]
செம்மீன் [தமிழில் சுந்தர ராமசாமி]
ஏணிப்படிகள் [தமிழில் சி ஏ பாலன்]
அனுபவங்கள் பளிச்சகள்
ரண்டிடங்கழி [இரண்டுபடி. தமிழில் சி ஏ பாலன்]
கயிறு [தமிழில் சி ஏ பாலன்]
ஔசேப்பின்றே மக்கள்
பலூனுகள்
ஒரு மனுஷ்யன்றே முகம்

No comments:

Post a Comment