Tuesday, 3 April 2018

என்ன அற்புத உணர்வைத்தந்த காவியம் "ஆண்டவன் கட்டளை".







என்ன அற்புத உணர்வைத்தந்த காவியம் 
"ஆண்டவன் கட்டளை".

முதல் வெளியீட்டின்போது (1964) பார்க்கவில்லை. அப்போது சின்னஞ்சிறுவன். பின் எப்போது முதலில் பார்த்தேன்?. 1971-ல் ஊரிலிருந்து வந்திருந்த உறவினர் சிலரை வழியனுப்ப எக்மோர் ரயில் நிலையம் சென்றபோது (போகும்போது டாக்சி, வரும்போது இரண்டே பேர் என்பதால் புறநகர் ரயில்) புறநகர் ரயிலுக்கு டிக்கட் எடுக்குமிடதுக்கு வெளியில் பளிச்சென்ற போஸ்ட்டர் 'இப்பொழுது நடைபெறுகிறது சன் தியேட்டரில்' என்ற வாசகத்துடன் அட்டகாசமான 'ஆண்டவன் கட்டளை' போஸ்ட்டர். அதைப்பார்த்ததும் முடிவு செய்து விட்டேன். நாளை போய்விட வேண்டுமென்று. காரணம் மறுநாள் வியாழக்கிழமை.கடைசி நாளாக இருக்கலாம் என்பதால் அவசரப்பட்டேன்.


மறுநாள் நண்பர்களிடம் சொன்னபோது அதில் ஒருவன் சொன்னான்.. 'டேய் அவசரக்காரா, இதுக்காக மன்னடியிலிருந்து தேனாம்பேட்டை போறேங்கிறியே. இதைப் பார்த்தியா' என்று கையிலிருந்த தினத்தந்தி பேப்பரை விரித்துக் கட்டினான். அதில் 'நாளை முதல் பிரபாத்தில் தினசரி 3 காட்சிகள் ஆண்டவன் கட்டளை' என்ற விளம்பரம் வெளியாகியிருந்தது. அவ்வளவுதான் மனம் குதியாட்டம் போட்டது. பின்னே விட்டுக்குப் பின்புறம் உள்ள தியேட்டரிலேயே வருகிறதென்றால் வேறென்ன வேண்டும்?.
'அப்படின்னா நாளைக்கே போயிடுவோம்' என்று நான் சொன்னதும் 'இப்பவும் அவசரப்படுறான் பாரு. நாம எல்லோரும் இந்தப்படத்தை முதல் முறையாக பார்க்கபோறோம். அதை ஹவுஸ்புல் காட்சியில் பார்த்தால்தான் நல்லாயிருக்கும். சண்டே ஈவ்னிங் ஷோ போவோம்' என்றான் இன்னொருத்தன். சரியென்று பட்டதால் அதுவே முடிவாயிற்று. இருந்தாலும் வெள்ளி சனியில் தியேட்டர் விசிட் தவறவில்லை எனக்கு.

முதல் நாளில் இருந்தே நல்ல கூட்டம். கடைசி இரண்டு கிளாஸ் புல்லானது மற்ற கிளாஸ்களிலும் கௌரவமான கூட்டம். அப்படீன்னா ஞாயிறு நிச்சயம் ஹவுஸ்புல் என்று முடிவு செய்து கொண்டேன். ஞாயிறு அன்று மாலை நாலரைக்கெல்லாம் சென்றுவிட்டோம், எப்படியும் சுவர் தடுப்புக்குள் போய் நின்றுவிட வேண்டும் என்பதற்காக. அப்போதே நாலைந்து பேர் உள்ளே நின்றனர். நேரம் ஆக ஆக கூட்டம் சேரத்தொடங்கியது. மனம் சந்தோஷத்தில் துள்ளியது.

கியூவில் நிற்கும்போதே ஒரு பெரியவர், 'நான் இந்தப்படத்தை பத்து தடவைக்கு மேல் பார்த்திருக்கிறேன்' என்று ஆரம்பித்து படத்தின் சிறப்புக்களை அள்ளிக்கடாசினார். அப்போது இன்னொருவர் 'பெரியவரே கதையைச் சொல்லிடாதீங்க' என்று உஷார்படுத்தினார் (அவரும் முதல் தடவை பார்க்கிறார் போலும்). அவ்வப்போது வெளியில் எட்டி எட்டி பார்த்துக்கொண்டோம் நல்ல கூட்டம். மேட்னி ஷோ முடிந்ததும் டிக்கட் விநியோகம் துவங்கியது. இடையில் நுழைந்தவர்கள் எல்லாம் வாங்கியது போக, கிட்டத்தட்ட 25 வது டிக்கட் கிடைத்தது. பால்கனிக்கு அடுத்த கிளாஸ். உள்ளே போய் இடம் போட்டு, அங்கிருந்தவரை பர்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு, வெளியில் வந்து நின்று பார்த்துக் கொண்டிருந்தோம். எதிர்பார்த்தது போலவே ஹவுஸ்புல் போர்டு போட்டதும் மன்றத்தினர் பட்டாசு வெடித்தனர். உள்ளே ஓடினோம். விளம்பரம் ஓடிக்கொண்டிருந்தது.


'இந்தியன் நியுஸ் ரிவியூ' ஓடி முடிந்ததும் படம் தொடங்கியது. (தொலைக்காட்சிகளில் செய்திகள் துவங்கப்பட்டபின் தியேட்டர்களில் நியூஸ் ரீல் காட்டும் வழக்கம் நிறுத்தப்பட்டது). சென்சார் சர்டிபிக்கேட்டை அடுத்து பி.எஸ்.வி. பிக்சர்ஸ் எம்ப்ளம் பார்த்ததுமே கைதட்டல். ப்ரொபசர் கிருஷ்ணன் தரிசனத்தின்போது உச்சகட்ட கைதட்டல். இம்மாதிரி ஆரவாரத்தோடு பார்ப்பதை மிஸ்பண்ண இருந்தோமே என்று ஒருகணம் நினைத்தேன். ப்ரொபசர் கிளாஸில் பாடம் நடத்தும் போது அவரது ஒவ்வொரு அசைவும் ரசிக்கப்பட்டது. அப்போது கேமரா திரும்பி மாணவர்களைக் காட்டும்போது, முதல் வரிசையில் அமர்ந்திருந்த இரட்டை ஜடைபோட்ட தேவதையைக் கண்டதும் கைதட்டல். பக்கத்திலிருந்தவன் என் விலாவில் இடித்து 'டேய் உங்காளுடா' என்றான். எனக்கு அதெல்லாம் கவனமில்லை. பத்து ஈக்கள் உள்ளே போனால் கூட தெரியாதவண்ணம் வாய் பிளந்திருக்க,
'இப்படி ஒரு அழகா, இதற்கு முன் எத்தனையோ படத்தில் பார்த்திருக்கிறோமே. இவ்வளவு கியூட் தெரியலையே' என்ற யோசனையுடன் இமை மூடாமல் பார்த்துக்கொண்டிருந்தேன். (இத்தனைக்கும் இதற்கு முன் எங்கிருந்தோ வந்தாளில் தலைவருக்கு அண்ணியாக, யாருக்கோ ஜோடியாகவெல்லாம் பார்த்தாகி விட்டது). ப்ரொபசர் கிருஷ்ணனைக் கவர்வதற்காக அவர் அடிக்கடி தனது இரட்டை ஜடையை முன்னால் இழுத்துவிட்டுக் கொண்டு காந்தப்பார்வை பார்க்கும்போது தியேட்டரில் உற்சாகமான கலகலப்பு. ப்ரொபசர் தடுமாறுகிறாரோ இல்லையோ நாம் கிளீன் போல்ட்.

நடிகர்திலகம் தன தாயாருடன் பேசும் காட்சி படத்தின் ஜீவனான காட்சிகளில் ஒன்று. அதில் ஒவ்வொரு வசனத்துக்கும் கைதட்டல் கிடைத்தது. ஹாஸ்டல் விசிட் சென்ற இடத்தில் மாணவிகள் விளைக்கை அணைக்க, சக மாணவி என்று நினைத்து ப்ரோபசரைக் கட்டிப்பிடிக்க, அந்த ஸ்பரிசத்தை எண்ணியபடியே தடுமாறும் இடத்தில் தலைவரின் பெர்பாமன்ஸுக்கு ரசிகர்களிடையே நல்ல ரெஸ்பான்ஸ். அதன்பிறகு தலைவரின் மனசாட்சி உலுக்கி எடுக்கும் இடம்தான் ராகவேந்தர் சார் வர்ணித்த இடம். அந்தக்காட்சி முழுக்க அடங்காத கைதட்டல். ஒரு பழைய படத்துக்கு புதுப்படம் போல வரவேற்பு கிடைத்ததைப்பார்க்க உற்சாகம் தாளவில்லை.


'அலையே வா' பாடலைப்பற்றி எழுதி உணர்த்த முடியாது. பார்த்து உணர வேண்டும். உணர்ந்தோம். இப்போது தொலைக்காட்சி வசதியிருப்பதால் அடிக்கடி பார்ப்பதால் அதன் அருமை பலருக்குத் தெரியவில்லை. தியேட்டரை விட்டால் வேறு கதியில்லை என்ற அந்த காலகட்டத்தில் நின்று உணர்ந்து பார்த்தால் அதன் அருமை தெரியும்.

ஆவலுடன் காத்திருந்த அடுத்த பாடல்..

விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையுடன் புதருக்குள் இருந்து ரயில் தோன்றி பாலத்தில் பயனிக்கத்தொடங்கியபோதே கைதட்டல் எழுந்தது. அப்படியே கேமரா திரும்பி படகில் இருக்கும் லட்சிய ஜோடியை காட்டும்வரை கைதட்டல் ஓயவில்லை. கருப்பு வெள்ளையிலேயே இவ்வளவு அற்புத ஒளிபபதிவா என அசர வைத்தது. என்ன ஒரு நேர்த்தி.

ஒரு தத்துவப்பாடலையே டூயட் பாடலாக்கிய கவியரசர் கண்ணதாசனின் திறமை. அதற்கு ஏற்ற இசையை வழங்கி உச்சத்துக்கு கொண்டு சென்ற மெல்லிசை மன்னர்களின் சாதனை. அதனை கணீரென்று பாடி கலக்கிய சௌந்தர்ராஜன் சுசீலாவின் அற்புதம். நடித்தவர்களைப் பற்றி சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை ஐயாமார்களே... இயக்குனர் சங்கர் ஆயிரம் டூயட்டுகளைப் படமாக்கி இருக்கலாம். ஆனால் அவரது சிறந்த பத்துகளில் இதுவும் ஒன்று என்றால் அது மிகையில்லை. பாடல் முழுக்க கைதட்டலும் விசிலும் கேட்டுக் கொண்டேயிருந்தன. நானோ வேறொரு உலகத்தில், ஏனென்றால் இதில் பங்கேற்ற அனைவரும் எனக்கு வேண்டப்பட்டவர்கள். அழகான பாடலின் முடிவில் தாங்கவொண்ணா துயரம்.


அடுத்த பாடல்.... தன்னுயிர் தந்து மன்னன் உயிர்காத்த அந்த வாயில்லா ஜீவனின் உடலை அடக்கம் செய்துவிட்டு மன்னர்களின் இசைக்கேற்ப தளர்நடை நடக்கும் மன்னனைக் கண்டு கூட்டம் ஆர்ப்பரித்தது. "ஆறு மனமே ஆறு" என்று தொடங்கியதும் ஆறு தெருக்களுக்கு கேட்கும் வண்ணம் கைதட்டல். ஒவ்வொரு படைவீட்டுக்கும் செல்லும்போது விவேகானந்தர், ராமகிருஷ்ண பரமஹம்சர் என கெட்-அப் மாறும்போதும் கைதட்டல் அடங்கவில்லை. கடைசியில் கடலை தின்னும் காட்சியில் எப்படியிருந்திருக்கும் என்று சொல்லணுமா. முன்சீட்டிலிருந்து ஒருவர் எழுந்து இரண்டு கைகளையும் உயர்த்தியவாறு கத்தினார் "பாவி, இதுக்கெல்லாம் நீதான்யா, நீ மட்டும்தான்யா".

என்ன அற்புத உணர்வைத்தந்த காவியம் "ஆண்டவன் கட்டளை".
WRITTEN BY
mr_karthik

No comments:

Post a Comment