Sunday, 25 February 2018

THILLAIYADI VALLIYAMMAI , FREEDOM FIGHTER WHO SAVED GANDHI LIFE DIED FEBRUARY 22,1914



THILLAIYADI VALLIYAMMAI ,
FREEDOM FIGHTER  WHO SAVED 
GANDHI LIFE DIED FEBRUARY 22,1914




கூலித் தொழிலாளியாக, நாகப்பட்டின மாவட்டம், மயிலாடுதுறையை அடுத்த தில்லையாடி என்னும் கிராமத்திலிருந்து தென்னாப்ரிக்காவிற்கு சென்றவர்கள், முனுசாமி - மங்களம் தம்பதி. இவர்களின் மகளாக, 1898ல் தென்னாப்ரிக்காவில் பிறந்தவர் வள்ளியம்மை.

தென்னாப்ரிக்காவில் வாழும் இந்தியர்கள் ஒவ்வொருவரும் தலை வரியாக, மூன்று பவுன் கட்ட வேண்டும் என்றும், இந்தியர்கள், தங்கள் மத வழக்கப்படி செய்து கொண்ட திருமணங்கள் செல்லாது எனவும், அவர்கள் குழந்தைகளுக்கு சட்டப்படியான வாரிசு உரிமை இல்லை என்றும், பதிவுத் திருமணங்கள் மட்டுமே செல்லும் எனவும் வெள்ளைக்கார அரசு அறிவித்தது.


இதை எதிர்த்து, கிளர்ச்சியில் ஈடுபட்டனர், இந்தியர்கள். இதற்கு தலைமை ஏற்றார் காந்திஜி. இந்த அறப்போரில், 16 வயது வள்ளியம்மையும் தன்னை இணைத்துக் கொண்டார். 1913ல் ஜோகன்னஸ்பர்க் நகரில், பெண்களின் சத்தியாகிரகப் போர்ப்படை கூடியது. அணியின் முதல் வரிசையில் நின்ற மூன்று பெண்மணிகள் கஸ்துாரிபா, வள்ளியம்மை மற்றும் அவரது தாய் மங்களம்.

'வெள்ளைய ஏகாதிபத்தியத்தின் விலங்கொடிப்போம் வாருங்கள்...' என்று, வள்ளியம்மை முன் வரிசையில் நின்று முழங்கிய முழக்கம், ஏனைய சத்தியாகிரகிகளை எழுச்சி கொள்ளச் செய்தது. தடையை மீறி, ஊர்வலம் ஜோகன்னஸ்பர்க்கிலிருந்து புறப்பட்டு டிரான்ஸ்வால் நகர எல்லைக்குள் நுழைந்தபோது, எல்லாரும் கைது செய்யப்பட்டனர். மூன்று மாதக் கடுங்காவல் தண்டனை... எல்லாரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.


பதினாறு வயது வள்ளியம்மையும் கடுங்காவல் தண்டனை ஏற்று சிறை சென்றார். சிறுமி என்றும் பாராமல் அவரிடம், கல் உடைப்பது போன்ற கடுமையான வேலைகளை வாங்கினர், வெள்ளைக்கார சிறை அதிகாரிகள். சிறையில் தனி அறையில் அவர் தலைமாட்டில் ஒரு மண் சட்டி, அதற்கொரு மூடி, அதிலேதான் மலஜலம் கழிக்க வேண்டும். காலையில் துாங்கி எழுந்ததும், அதை வெளியில் சென்று கொட்டி விட்டு, சட்டியை சுத்தம் செய்து வரவேண்டும்.

மெலிந்த தேகம் கொண்ட வள்ளியம்மை, நோய்க்கு ஆளானார். உடல்நிலை சீர்கெட்டது. மருத்துவ வசதி ஏதுமில்லை. 'உரிய அபராத தொகையை கட்டிவிட்டு சிறையிலிருந்து விடுதலை பெற்றுச் செல்...' என்றான் சிறை அதிகாரி. 'அது, சத்தியாகிரக போராளிக்கு இழுக்கு...' என்று மறுத்து விட்டார், வள்ளியம்மை.

அடுத்த சில நாட்களில் அவர் உடல்நிலை மேலும் மோசமடைந்தது. அவரை சோதித்த மருத்துவர், 'சீரியஸ் கண்டிஷன்' என்று எச்சரிக்கவே, அவசரமாக அவரை விடுதலை செய்தனர்.

மிகவும் பலவீனமான நிலையில் இருந்த அவரை, ஒரு ஜமுக்காளத்தில் கிடத்தி, வீட்டிற்கு கொண்டு சென்றனர். வீட்டில் கந்தல் துணி போல் கிடத்தப்பட்ட வள்ளியம்மை, அடுத்த பத்து நாட்களில், பிப்ரவரி 22, 1914ல் உயிர் நீத்தார். வள்ளியம்மையின் மரணம், காந்திஜியின் உள்ளத்தை நிலைகுலையச் செய்தது. 'இந்தியன் ஒப்பீனியன்' பத்திரிகையில், 'இந்தியாவின் புனித மகளை இழந்தோம்; அவளது தியாகம் இந்திய சமூகத்திற்கு நிச்சயம் பயனளிக்கும்...' என்று மனமுருகி எழுதினார், காந்திஜி.

ஆம்... அந்த போராட்டத்தின் பயனாக இந்தியர்கள் மீது விதிக்கப்பட்ட வரி ரத்து செய்யப்பட்டது. இந்து திருமணங்கள் சட்டப்படி அங்கீகரிக்கப்பட்டன. ஜோகன்னஸ்பர்க்கில், வள்ளியம்மை அடக்கம் செய்யப்பட்ட இடத்தில், நினைவுச் சின்னம் ஒன்றை எழுப்பினார் காந்திஜி. தம் சுயசரிதையில், பல இடங்களில் வள்ளியம்மையை நினைவு கூர்ந்து எழுதியுள்ளார்.

தன் உயிரைக் காத்த வள்ளியம்மையை, காந்திஜியால் எப்படி மறக்க முடியும்... ஒருமுறை சத்தியாகிரகப் போராட்டத்தின் போது, வெறி பிடித்த வெள்ளையன் ஒருவன், காந்திஜியை சுட, துப்பாக்கியை உயர்த்தியபோது, வள்ளியம்மை திடீரென பாய்ந்து, காந்திஜியின் முன் நின்று, 'இப்போது காந்திஜியை சுடு, பார்க்கலாம்...' என்றார், ஆவேசமாக! அவரது நெஞ்சுரம் கண்டு அந்த வெள்ளையனே திகைத்துப் போனான்.
காந்திஜி, தமிழகத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட போது, எல்லா கூட்டங்களிலும் வள்ளியம்மையின் தியாகம் குறித்து பேசியுள்ளார்.

No comments:

Post a Comment