Monday, 12 February 2018

சூரத் காப்பிக் கடை



СУРАТСКАЯ КОФЕЙНАЯ : சூரத் காப்பிக் கடை
மூலம் : லியோ டால்ஸ்டாய்
தமிழில் : மா. புகழேந்தி

ஒரு காலத்தில் சூரத் நகரத்தில் ஒரு காபிக் கடை இருந்தது, அங்கே உலகின் எல்லா மூலையில் இருந்தும் பல வெளி நாட்டு வணிகர்கள் வந்து சந்தித்து தங்களுக்குள் அளவளாவிக் கொள்வார்கள்.

ஒரு நாள் ஒரு பாரசீக தத்துவ ஞானி அங்கு வந்தான். தன்னுடைய வாழ்வின் பெரும்பகுதியைக் கடவுளைப் பற்றிப் படித்தும் பேசியும் ஆராய்ந்தும் எழுதியும் கழித்திருந்தான். இவ்வாறு அதிகப்படியாகச் செய்ததினால், சிந்திக்கும் திறனில் பிறழ்ந்திருந்தான், குழப்பமுற்றிருந்தான், கடவுள் என்ற ஒன்று இருப்பதையே நம்ப முடியாமல் போனான். இதைக் கேள்விப்பட்ட ஷா பாரசீகத்திலிருந்து அவனைத் துரத்திவிட்டான்.

வாழ்க்கை முழுதும் தர்க்கம் செய்தே களைத்துவிட்ட இந்தத் தத்துவ ஞானி எல்லாவற்றையும் சந்தேகம் கொள்ளலானான். அவைகளைப் புரிந்து கொள்வதற்குப் பதிலாக தனது சொந்தக் கருத்தையே மறந்து விட்டான்.
அவன் கருத ஆரம்பித்தான், இந்தப் பேரண்டத்தினை வேறு எந்தச் சக்தியும் இயக்குவிக்கவில்லை என்று.

அந்தப் பாரசீகன் ஓர் ஆப்பிரிக்க அடிமையைக் கொண்டிருந்தான், அந்த அடிமை அவனது முதலாளியை எல்லா இடத்திற்கும் பின் தொடர்ந்தான்.
தத்துவ ஞானி காப்பிக் கடைக்குள் நுழைந்த போது அடிமை வெயிலில் கடையின் வாயிலில் கதவருகே உள்ள கல்லில் அம்ர்ந்து கொண்டு தன்னருகே பறந்து கொண்டிருந்த ஈக்களை ஓட்டியபடி இருந்தான். பாரசீகன் சாய்வாக அமர்ந்து கொண்டு தனக்கு ஒப்பியம் வெண்டுமென்று கேட்டான்.
அதை அவன் குடித்து முடித்த போது, ஒப்பியம் தனது வேலையைச் செய்ய ஆரம்பித்தது, அவனது மூளையை அது தூண்டிவிட்டது, அவன் தனது அடிமையைப் பார்த்துக் கேட்டான்:
"எனது அடிமையே, இப்போது சொல் , நீ என்ன நினைக்கிறாய் கடவுள் இருக்கிறாரா இல்லையா?"
"ஆமாம் இருக்கிறார் அய்யா ," உடனே தனது இடுப்புக் கச்சையில் இருந்து மரத்தாலான ஒரு சிறிய கடவுள் சிலையை எடுத்துக் கட்டினான்.
"இது தான்," அவன் சொன்னான் "என் கடவுள், என்னைப் பிறந்ததிலிருந்து காப்பற்றிக்கொண்டு வருகிறார்! எங்கள் நாட்டில் இதைப் போலவே எல்லோரும் புனித மரத்தாலான ஒரு கடவுள் சிலையை வைத்திருப்பார்கள் "
காப்பிக் கடையில் இருந்தவர்கள் எல்லாம் தத்துவஞானிக்கும் அவனது அடிமைக்கும் இடையில் நடந்துகொண்டிருந்த இந்த உரையாடலை ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர். பாரசீகனின் கேள்வியையும் அவனது அடிமையின் பதிலையும் கண்டு மிரண்டு போயினர்.
அதைக் கேட்டுக் கொண்டிருந்த ஓர் அந்தணன் அடிமையைப் பார்த்து பதிலளித்தான்:
"அட முட்டாளே! கடவுள் என்ன இடுப்புக் கச்சையில் கட்டி எடுத்துச் செல்லப்படும் பொருளா? உலகில் ஒரே ஒரு கடவுள் தான் உண்டு அவர்தான் பிரம்மா. அவர்தான் எல்லாவற்றையும் விட மிகப் பெரியவர், ஏனெனில் அவர் தான் இப்பூமியைப் படைத்தார். அவர்தான் வல்லமை மிக்கவர், அவரைப் போற்றுவதற்காகத் தான் கங்கைக் கரையில் பல கோயில்கள் கட்டப்பட்டிருகின்றன. அவரின் உண்மைச் சேவகர்களான அந்தணர்கள் அவரை அங்கு வழிபடுகிறார்கள். அவர்களுக்குத் தான், அவர்களுக்கு மட்டும் தான் தெரியும் உண்மைக் கடவுள் யாரென்று. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் கடந்து விட்டது, புரட்சி மேல் புரட்சி வந்தது ஆனாலும் அந்தணர்களை ஒன்றும் செய்ய முடியவில்லை, பிரம்மா தான் அவர்களைக் காத்துக் கொண்டிருக்கிறார்."
அவ்வாறு அந்த அந்தணன் பேசி எல்லோரையும் சரிக்கட்ட முற்பட்ட போது அங்கிருந்த ஒரு யூத வணிகன் குறுக்கிட்டு பதிலுரைத்தான் :
"இல்லை, கடவுளின் கோவில் இந்தியாவில் இல்லை. அவர் அந்தணர் சாதியினரையும் காப்பவரில்லை. உண்மையான கடவுள் அந்தணர்களின் கடவுள் அல்ல, அவர் அப்ரகாம், ஐசாக் மற்றும் ஜேகோபின் கடவுளாவார்.
"அவர் தன்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட இஸ்ரேலியர்களைத் தவிர வேறு யாரையும் காக்க மட்டார். உலகம் தோன்றிய நாளில் இருந்து அவர் எங்கள் நாட்டை மட்டுமே விரும்புகிறார். நாங்கள் இப்போது உலகம் முழுவதும் சிதறி இருப்பதும் கடவுளின் திருவிளையாடலே. எங்கள் மக்களை எல்லாம் ஜெருசலத்தில் ஒன்று கூட்டி ஒரு நாட்டை உருவாக்கித் தருகிறேன் என்று கடவுள் உறுதியளித்து இருக்கிறார். பிறகு ஜெருசலக் கோவிலால் பண்டைய பெருமைகள் மீண்டும் நிலைநாட்டப்படும், இஸ்ரேலியர்கள் இந்த உலகை ஆள்வார்கள்."
அந்த யூதன் பேசப்பேசக் கண்ணீர் விட்டு அழுதான். இன்னும் அதிகம் பேச ஆசைப்பட்டான், ஆனால் இத்தாலிய கிறிஸ்தவ ஊழியன் ஒருவன் அவனை இடை மறித்தான்.

"நீ என்னவெல்லாம் சொல்கிறாயோ அதெல்லாம் உண்மையில்லை, " அவன் யூதனிடத்தில் சொன்னான். " நீ கடவுளுக்குக் களங்கம் கற்பிக்கிறாய். அவர் மற்ற நாடுகளை எல்லாம் விட்டு விட்டு உன் நாட்டை மட்டும் நேசிக்க மாட்டார். அப்படியே அது உண்மை என்றாலும் அது பழைய இஸ்ரேலாகத் தான் இருக்கும். இப்போது பத்தொன்பது நூற்றாண்டுகள் ஆகிவிட்டது. நீங்கள் அவரைக் கோபம் கொள்ள வைத்து விட்டீர்கள். அதனால் தான் உங்கள் நாட்டை அழித்து உலகம் முழுவதும் உங்களைச் சிதற விட்டிருக்கிறார். அதனால் தான் அவர்களது மதத்தில் புதிதாக யாரும் சேர்வதில்லை, இருப்பவர்களும் ஆங்காங்கே செத்துக் கொண்டிருக்கிறார்கள்."
"கடவுள் எந்த ஒரு நாட்டையும் தனியாக விரும்புவதில்லை, அதனால் யாரெல்லாம் காப்பாற்றப்பட வேண்டுமோ அவர்களெல்லாம் ரோமன் கத்தோலிக்கத் திருச் சபைக்கு வாருங்கள், அதற்கு வெளியே யாருக்கும் முக்தி கிடையாது."
இத்தாலியன் அவ்வாறு பேசிக்கொண்டு போனான். ஆனால் அங்கு இருந்த ஒரு ப்ரோட்டஸ்டன்ட் கிறிஸ்த்தவன் கத்தோலிக்கனைப் பார்த்து ஆச்சரியத்துடன் கேட்டான் :
"எப்படி நீ உன்னுடைய மதம் மட்டும் முக்தி தரும் என்ரு சொல்லலாம்? கிறிஸ்த்துவே சொல்லியிருக்கிறார் கடவுளுக்கு உண்மையான அன்புடன் ஊழியம் செய்யும் தூய உள்ளம் கொண்டவர்கள் மட்டுமே முக்தி அடையமுடியும் என்று."

சூரத்தில் ஒரு சுங்கச் சாவடியில் அலுவலரான ஒரு துருக்கியன் அங்கே அமர்ந்து புகைத்துக் கொண்டிருந்தான், இரண்டு கிறிஸ்த்தவர்களையும் ஏளனமாகப் பார்த்தபின்பு பேச ஆரம்பித்தான்.
"ரோமன் கத்தோலிக்க மதத்தின் மீது உங்களது நம்பிக்கை வீணானது," அவன் சொன்னான். "அது முகம்மதுவின் வரவால் ஓராயிரத்து இரு நூறு ஆண்டுகளுக்கும் முன்னரே முறியடிக்கப்பட்டது. உங்களால் அது மறுக்கமுடியாது கவனிக்க வேண்டும், முகம்மதுவின் போதனைகள் இப்போது ஐரோப்பா, ஆசியா மட்டுமல்லாது கற்றரிந்தோர் இருக்கும் சீனாவிலும் பரவிக்கொண்டிருக்கிறது."
நீங்கள் பேசிக்கொண்டீர்கள், கடவுள் யூதர்களை கைவிட்டு விட்டார் என்று; அப்புறம், ஆதாரத்துக்காக, நீங்கள் சொன்னீர்கள் யூதர்கள் தண்டிக்கப்பட்டார்கள் என்றும் அவர்களது மதம் வளரவில்லை என்றும். ஒத்துக்கொள்ளுங்கள் முகம்மதின் பெருமைகள், இப்போது அங்கிங்கெனாதபடி எங்கும் பரவியிருக்கிறது. யாரும் காப்பாற்றப் படமாட்டார்கள், முகம்மதின் தொண்டர்களைத் தவிர. அவர்தான் கடவுளின் தற்போதைய தூதர். அதில் ஒமரைப் பின்பற்றுபவர்களை மட்டும் எடுத்துக் கொள்ளவேண்டும், அலியைப் பின்பற்றுபவர்களை அல்ல. அலியைப் பின்பற்றுபவர்கள் தவறான வழியில் போகிறவர்கள்."
இதைக்கேட்ட அலியைப் பின்பற்றும் பாரசீகத் தத்துவ ஞானி, பதிலுரைக்க முற்பட்டான்; அதே நேரம் அங்கே இருந்த அனைத்துத் தரப்பு மத நம்பிக்கையாளர்களும் பெரும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். அங்கே அபிசீனியக் கிறிஸ்தவர்கள், திபெத்திய லாமாக்கள், இஸ்லாமியர்கள் மற்றும் சவ்ராஷ்டிரர்கள் குழுமியிருந்தனர். அவர்களெல்லாம் கடவுளைப் பற்றியும் அவரை வழிபடும் முறையைப் பற்றியும் விவாதித்துக் கொண்டிருந்தனர். ஒவ்வொருவரும் தன்னுடைய நாட்டில் மட்டுமே உண்மையான கடவுள் அறியப்பட்டாரென்றும் சரியாக வழிபடப்படுகிறாரென்றும் கூறிக்கொண்டனர்.
ஒவ்வொருவரும் கூச்சலிட்டு வாதம் செய்துகொண்டு இருந்தனர், ஒரே ஒரு சீனப் பயணியைத்தவிர, அவன் கன்ப்யூசியசின் மாணவன், காப்பிக் கடையின் ஒரு மூலையில் அமைதியாக அமர்ந்து இந்த விவாதங்களில் கலந்து கொள்ளாமல் இருந்தான். அங்கே அமர்ந்து தேனீர் அருந்திக்கொண்டு மற்றவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று கவனித்துக் கொண்டிருந்தான், ஆனால் அவனாக எதுவும் பேசவில்லை.
இதை துருக்கியன் கவனித்து விட்டான், அவனிடம் இவ்வாறு ஒரு வேண்டுகொள் விடுத்தான்:
"நான் சொன்னது சரிதானே, என்னருமை சீனப்பயணியே. நீங்கள் ஏனோ அமைதி காக்கின்றீர்கள், நீங்கள் பேசினால் என்னுடைய கருத்தினை ஒத்துக்கொள்வீர்கள் என்று நினைக்கிறேன் உங்கள் நாட்டு வணிகர்கள், என்னிடம் உதவிக்காக வருவார்கள், சொல்லுங்கள் உங்கள் சீன நாட்டில் எவ்வளவோ மதங்கள் அறிமுகம் செய்யப்பட்டன, ஆனால் சீனர்கள் முகம்மதுவின் வழியை மிகச் சிறந்ததென்று கருதி மனமுவந்து ஏற்றுக் கொண்டிருக்கிறீர்கள். என் வார்த்தைகளை உறுதிப்படுத்துங்கள், எங்களிடம் உங்களது கருத்தினைச் சொல்லுங்கள் கடவுளையும் அவரது தூதரையும் பற்றி."
"ஆமாம், ஆமாம்," மற்றவர்கள் சொன்னார்கள், சீனப்பயணியைப் பார்த்து, " நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கின்றோம்."
கன்ப்யூசியசின் மாணவனான சீனப்பயணி கண்களை மூடி சிறிது நேரம் சிந்தனையில் மூழ்கினான். பிறகு கண்களைத் திறந்தான், தனது உடையிலிருந்து கைகளை நீட்டி மார்புக்குக் குறுக்கே கட்டிக்கொண்டு மென்மையான குரலில் பின்வருமாறு பேச ஆரம்பித்தான்.
"கணவான்களே, எனக்குப்புரிகின்றது என்னவென்றால், கடவுள் நம்பிக்கையை வைத்துப் பார்க்கும் பொழுது, வெறும் வீண் தற்பெருமைதான் ஒவ்வொருவரின் நம்பிக்கையும் மற்றவர்களின் நம்பிக்கையுடன் ஒத்துப்போகாமல் தடுக்கின்றது. நீங்கள், நான் சொல்வதைக் கவனமுடன் கேட்க முடிந்தால், உங்களுக்கு ஒரு கதை சொல்லப்போகிறேன் அது எடுத்துக்காட்டுடன் உங்களுக்கு விளங்கும்.
" நான் சீனாவிலிருந்து உலகைச் சுற்றிவரும் ஓர் ஆங்கில நீராவிக்கப்பலின் மூலம் இங்கு வந்து சேர்ந்தேன். வரும் வழியில் சுமத்ரா தீவில் நல்ல தண்ணீருக்காக நின்றோம். அது நண்பகல் நேரம், எங்களில் சிலர் கீழே இறங்கினோம், கடற்கரையில் இருந்த தென்னை மரங்களின் நிழலில் இளைப்பாறினோம், அந்த இடமொன்றும் பக்கத்திலுள்ள கிராமத்திலிருந்து ரொம்பத்தூரத்தில் இல்லை. நாங்களெல்லாம் வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களாக இருந்தோம்.
" நாங்கள் உட்கார்ந்திருந்த இடத்திற்கு கண்பார்வையற்ற ஒருவர் வந்தார். பிற்பாடு அவரைப்பற்றி எங்களுக்குத் தெரியவந்தது என்னவென்றால், அவர் நீண்ட நாட்களாக தீவிரமாக சூரியனை உற்று நோக்கிக் கொண்டு அதிலிருந்து வரும் ஒளியை ஆராய்ச்சி செய்து கொண்டிருந்ததால் அவருக்குப் பார்வை பறிபோனது என்று.
"அவர் அதை நீண்ட நெடு நாட்களாக ஆராய்ந்து கொண்டிருந்தார், பார்வை மாறாமல் சூரியனையே கவனித்துக் கொண்டிருந்தார், முடிவில் அந்த ஒளியினால் அவரது கண்கள் பாதிக்கப்பட்டு பார்வையை இழந்தார்.
"அவர் தனக்குள் சொல்லிக்கொண்டார்:"
"கதிரவனின் ஒளி நீர்மம் அல்ல; அப்படி இருந்தால் அதை ஒரு பாத்திரத்தில் இருந்து இன்னொரு பாத்திரத்துக்கு மாற்ற முடியும், அதை ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குக் கொண்டு செல்ல முடியும். அது நெருப்பும் அல்ல அது அப்படி இருந்தால் தண்ணீரைக்கொண்டு அணைத்து விட முடியும்.
"அது அரூபம் அல்ல ஏனென்றால் அதைக் கண்ணால் பார்க்க முடிகிறதே; அது வேறு வகை தின்மப் பொருளும் அல்ல, அதை நகர்த்த முடியவில்லை அல்லவா. எனவே கதிரவனின் ஒளி என்பது நீர்மமோ நெருப்போ அரூபமோ தின்மமோ அல்ல, சொல்லப்போனால் அது எதுவுமே அல்ல!"
"இவ்வாறு அவர் தர்க்கம் செய்தார், முடிவாக சூரியனையே பார்த்துக் கொண்டு அதைப்பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்ததால் அவர் தனது பார்வையையும் தனது அறிவையும் இழந்தார். அவர் தனது பார்வையை இழந்ததால் முழுதாக நம்பத்தலைப்பட்டார், சூரியன் என்ற ஒன்றே இல்லை என்று.
"இந்த மனிதருடன் ஓர் அடிமையும் வந்தான், தென்னை மரத்தடியில் அவரை அமர வைத்தான், தரையில் கிடந்த தேங்காயை எடுத்தான், இரவுக்கான விளக்கினைச் செய்தான், தேங்காயின் நாரைக்கொண்டு திரி செய்தான், கொப்பறையிலிருந்து எண்ணெயெடுத்தான், திரியை ஊறவைத்துக் கொழுத்தினான்.
" அடிமை இவ்வாறு செய்தபோது பெருமூச்சு விட்டபடி அந்த மனிதர் சொன்னார்:
" நல்லது அடிமையே, நான் சொன்னது சரி தானே சூரியன் என்ற ஒன்றே இல்லை என்று? நீ பார்க்கிறாயா இருள் என்றால் என்ன வென்று? இன்னும் கூட மக்கள் சொல்கிறார்கள் சூரியன் இருக்கிறதென்று...அப்படி இருந்தால், அது என்ன?"
"எனக்குத் தெரியாது சூரியன் என்ன வென்று", அடிமை சொன்னான், "அது என்னுடைய வேலை இல்லை. ஆனால் எனக்குத் தெரியும் ஒளி என்றால் என்னவென்று. இங்கே நான் இரவுக்கான வெளிச்சத்தை உருவாக்கி விட்டேன். இதன் உதவியுடன் உங்களுக்கு நான் சேவை செய்யமுடியும். என்னால் குடிசைக்குள் என்ன இருக்கின்றது என்று இப்போது தெளிவாக கண்டறிய முடியும்.
அடிமை இப்போது தேங்காய்த் தொட்டியை எடுத்துக் கொண்டு சொன்னான் : "இது தான் எனது சூரியன்."
ஊன்றுகோலுடன் அங்கு அருகில் அமர்ந்திருந்த ஒரு முடவன் இந்த வார்த்தைகளைக்கேட்டுச் சிரித்தான்: " நீங்கள் உங்கள் வாழ்க்கை முழுதும் குருடாகி விட்டீர்கள்," அவன் பார்வை இழந்தவரைப் பார்த்துச் சொன்னான், "சூரியன் என்றால் என்ன வென்று தெரியாமல். நான் உங்களுக்குச் சொல்கிறேன் அது என்னவென்று. சூரியன் ஒரு நெருப்புப் பந்து, ஒவ்வொரு நாள் காலையிலும் கடலில் இருந்து எழுகிறது பிறகு ஒவ்வொரு மாலையிலும் நம் தீவின் மலைகளை எல்லாம் தாண்டிச் சென்று கீழே போய் மறைகிறது. நாங்கள் எல்லாம் அதைப் பார்த்திருக்கிறோம், நீங்கள் கூடக் கண்பார்வை கொண்டிருந்தால் அதைப் பார்த்திருப்பீர்கள்.

இந்த உரையாடலைக் கேட்டுக்கொண்டிருந்த மீனவன் ஒருவன் சொன்னான்:
" இங்கே தெளிவாகத் தெரிகிறது நீங்கள் இந்தத் தீவை விட்டு வேறு எங்கேயும் போயிருக்க மாட்டீர்கள் என்று ஏனென்றால் நீங்கள் முடமானவர். அவ்வாறு இல்லை என்றால், என்னைப் போல நீங்களும் படகில் சுற்றி இருப்பீர்கள். உங்களுக்கும் தெரிந்திருக்கும் சூரியன் மலைகளுக்கிடையில் மறைவதில்லை என்று. ஆனால் அது காலையில் கடலில் தோன்றி இரவில் கடலில் மறைகின்றது. நான் என்ன சொல்கிறேனோ அது உண்மை. நான் அதை ஒவ்வொரு நாளும் என் கண்களால் காண்கிறேன்.
பிறகு எங்களுடன் வந்திருந்த ஓர் இந்தியன் அவனை இடை மறித்துப் பேசினான்:

" இப்படிப்பட்ட பகுத்தறிவாளன் மூடத்தனமாகப் பேசுவதைக் கண்டு நான் அதிர்ந்து போனேன். எப்படி ஒரு நெருப்புக் கோளம் நீரில் மூழ்கி எழுந்து அணைக்கப்படாமல் இருக்க முடியும்? சூரியன் ஒரு நெருப்புக் கோளம் அல்ல, அது சூரியதேவன், ஓய்வில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் தேரில் அமர்ந்திருக்கின்றார், அது மேரு மலையை வலம் வருகின்றது. சில நேரங்களில் கெட்ட பாம்புகளான ராகு கேது போன்றவை அவரைக் கவ்வும், அப்போது பூமி இருளடையும்.

"ஆனால் எங்கள் மத குருக்கள் தேவரை விடச்சொல்லி வேள்வி நடத்தி வேண்டுவார்கள். உங்களைப்போன்ற அறிவற்றவர்கள், இந்தத் தீவை விட்டு வேறு எங்கேயும் போகாதவர்கள் தான், சூரியன் தங்களது நாட்டுக்கு மட்டுமே வெளிச்சம் கொடுக்கிறார் என்று சொல்வார்கள்.
பிறகு அங்கிருந்த ஓர் எகிப்துக் கப்பல் தலைவன் தன் பங்கிற்குப் பேசினான்
"இல்லை," அவன் சொன்னான், " நீங்களும் தவறாகவே சொல்கிறீர்கள். சூரியன் தேவரல்ல, இந்தியாவையும் மேரு மலையையும் மட்டுமே அவர் சுற்றி வரவில்லை. நான் கருங்கடல் முதல் , அரேபியக் கடல் எல்லைகள் எல்லாம் பார்த்து விட்டு , மடகாஸ்கர் முதல் பிலிப்பைன்ஸ் வரை எல்லாம் சென்றுள்ளேன். சூரியன் அங்கேயும் தான் ஒளிர்கின்றார், இந்தியாவில் மட்டுமல்ல.
"அது ஒரு மலையை மட்டும் சுற்றிவர வில்லை, அது கிழக்கே நெடுந்தொலைவில் எழு கின்றது, அது எழும் இடம் ஜப்பானையும் தாண்டி இருக்கின்றது, அது மேற்கில் ரொம்ப தூரத்தில் , இங்கிலாந்தையும் தாண்டிச் சென்று மறைகின்றது. அதனால் தான் ஜப்பானியர்கள், தங்கள் நாட்டை 'நிப்பான்' என்கிறார்கள், அதன் பொருள் சூரியனின் பிறப்பிடம் என்பதாகும். எனக்கு இது நன்கு தெரியும், நான் என் கண்ணாலேயே இதைப் பல முறை பார்த்திருக்கிறேன், என் தாத்தாவால் பல முறை சொல்லக் கேட்டிருக்கிறேன், அவர் கடலின் முடிவு வரை சென்று வந்தவராக்கும்."

அவன் அத்ற்கும்மேலே சொல்லியிருப்பான், ஆனால் ஆங்கிலேய கடல்பயணி அவனை இடைமறித்தான்:
"சூரியனின் பயணத்தை இங்கிலாந்து மக்கள் அறிந்ததைப்போல அறிந்தவர்கள் உலகில் எந்த ஒரு நாட்டிலும் இல்லை. சூரிய்ன் எங்கும் உத்திப்பதோ மறைவதோ இல்லை. அது பூமியை வலம் வருகின்றது. நாம் இதை உறுதியாகச் சொல்ல முடியும், நாம் உலகை சுற்றி வந்தோமானால், நாம் எங்கேயும் சூரியனை முட்டி நிற்க முடியாது. எங்கெங்கு நாம் சென்றாலும் அறியலாம், இங்கிருப்பதைப்போலவே சூரியன் காலையில் தோன்றி மாலையில் மறைகின்றது."
அந்த ஆங்கிலேயன் ஒரு குச்சியை எடுத்து மணலில் வட்டங்கள் வரைந்து சூரியன் எப்படி வான வீதியில் சுழல் கிறது என்று விளக்க முற்பட்டான். ஆனால் அவனால் சரியாக விளக்க முடியாமல் தடுமாறினான் காப்பலின் தலைவனைச் சுட்டிக்காட்டிச் சொன்னான்:
"இந்த மனிதர் என்னை விட நன்கு தெரிந்தவர். இவர் தெளிவாக அதை விளக்குவார்."

கப்பல் தலைவன் புத்திக்கூர்மையானவன், தன்னைப் பேசச் சொல்லும் வரை அமைதியாக அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்தான். எல்லோரும் அவனை ஆர்வத்துடன் நோக்கினார்கள், அப்போது அவன் பேசலானான்.
"நீங்கள் எல்லாம் ஒருவரை ஒருவர் தவறாக வழி நடத்துகிறீர்கள், ஒருவரை ஒருவர் ஏமாற்றிக் கொள்கிறீர்கள். சூரியன் உலகத்தைச் சுற்ற வில்லை, மாறாக உலகம் தான் சூரியனைச் சுற்றுகிறது, பூமி இருபத்தி நான்கு மணி நேரத்துக்கு ஒரு முறை தன்னைத்தானே சுற்றிக்கொள்ளவும் செய்கிறது, இது ஜப்பானுக்கு மட்டுமல்ல பிலிப்பைன்சுக்கும் தான் இப்போது நாமிருக்கும் சுமத்ராவுக்கும் தான் ஆப்பிரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் அமெரிக்காவுக்கும் மற்றுமுள்ள எல்லா நாடுகளுக்கும் தான்.
"சூரியன் ஒரு மலைக்கு மட்டும் வெளிச்சம் கொடுக்க வில்லை, ஒரு தீவுக்கு மட்டும் ஒளி கொடுக்காவில்லை, ஓர் உலகத்துக்கு மட்டும் ஒளி கொடுக்கவில்லை, எல்லா கோள்களுக்கும் அதைக் கொடுக்கிறார் நம் உலகத்துக்கு ஒளியை அளிப்பதைப் போலவே. உங்கள் காலடியில் இருக்கும் தரையை விடுங்கள், வானில் உள்ள சொர்க்கத்தைப் பாருங்கள் நீங்கள் எல்லாம் தெளிவாவீர்கள். பிறகு உணர்வீர்கள் சூரியன் உங்களுக்கு மட்டுமே அல்லது உங்களது நாட்டுக்கு மட்டுமே ஒளி கொடுக்கவில்லை என்று.
கப்பல் தலைவன் அவ்வாறு பேசினான், அவன் கடலிலே நீண்ட தூரம் போயிருக்கிறான், நீண்ட நேரம் வானிலுள்ள கோள்களை எல்லாம் கவனித்திருக்கிறான்.
"அதனால், நம்பிகையை அடிப்படையாகக் கொண்டு பேசுவது," சீனப்பயணி தொடர்ந்தான், "வெறும் தற் பெருமையும் மூட நம்பிக்கையும் தான், மனிதர்களுக்கிடையில் தவறு ஏற்படக் காரணமாகிறது. சூரியனைப் போலவே தான் கடவுளும். ஒவ்வொரு மனிதனும் தனக்கென தனியானதொரு கடவுள் அல்லது தன் நாட்டுக்காவது ஒரு கடவுள் வேண்டுமென விரும்புகிறான். ஒவ்வொரு நாடும் கடவுளின் கோவிலைத் தன் நாட்டில் நிறுவ விரும்புகிறது. அவரது பெருமைக்கு இந்த உலகமே போதாது.
"எந்தக் கோவிலாவது கடவுளால் கட்டப்பட்ட கோவிலைப்போல எல்லா மக்களையும் ஒன்று சேர இணைக்கும் ஒரே நம்பிக்கை கொண்ட ஒரே மதத்தைப் போல இருக்கிறதா? ஒவ்வொரு கோவிலுக்கும் ஒரு வழிபாட்டு முறை, பாதுகாக்கப்பட்ட கூறை, அதன் விளக்குகள், ஓவியங்களும் சிற்பங்களும், கல்வெட்டுகள், அதன் சட்ட திட்டங்கள், தான தருமங்கள், அதன் கோபுரங்கள், அதன் பூசாரிகள். எந்தக் கோவிலாவது கடலைப்போலவோ, சொர்க்கத்தைப் போலவோ சூரியனை, நிலவை விண் மீன்களைப் போலவோ ஒளிர்கிறதா, எந்தச்சிலையாவது வாழும் மனிதர்களுக்கு ஒப்பாகிறதா? இவர்களைப்போல அன்பு காட்டுகிறதா? மனிதர்களுக்கு உதவுகிறதா?
"கடவுளின் கருணையை எளிதில் அறிய முடிகிறதா? மனிதனுக்காக பிற உயிர்களுக்காக அவர் அளித்த ஆசீர்வாதங்களைப் புரிந்து கொள்ள முடிகிறதா? மனிதனின் இதயத்தில் எழும் கருணையை விடத் தெளிவாக எங்காவது சட்டங்கள் எழுதப்பட்டிருக்கிறதா? அன்பு செலுத்தும் ஓர் ஆணும் பெண்ணும் தங்களுக்குள் விட்டுக் கொடுக்கும் பேரன்புக்கு ஈடாக எந்த ஒரு தியாகம் இருக்கிறது? ஒரு நல்ல மனிதனின் இதயத்தை விட எந்த கோபுரம் சிறந்தது? கடவுள் இதை விட வேறு எதை விரும்புவார்?
"கடவுளைப்பற்றி எவ்வளவு உயர்வாக ஒருவன் சிந்திக்கிறானோ அவ்வளவு அதிகமாக அவரை அறிகிறான். அவரை அவன் தெளிவாக அறியும் போது அவருக்கு அருகில் அவன் செல்கிறான், அவரது நல்லெண்ணம், கருணை, பிறரிடத்தில் காட்டும் அன்பு ஆகிய நற்குணங்கள் இவனுக்கும் வருகிறது.
"சூரியன் ஒளியால் இந்த உலகம் நிறைகிறது, அதனால் சொல்கிறேன் அறியாத மனிதர்களைத் திட்டாதீர்கள், அவன் தனது மூட நம்பிக்கையால் கதிரவனின் ஒரே ஒரு ஒளிக்கீற்றினை மட்டுமே காண்கிறான். அதே போல ஆத்திகரையும் திட்டாதீர்கள் அவர்களும் பார்வை இழந்தவர்களைப் போல சூரியன் இல்லை என்று சொல்பவர்களே."
அவ்வாறு அந்த சீனப்பயணி சொல்லிமுடித்த போது, அந்த காப்பிக்கடையில் இருந்த அனைவரும் அமைதியானார்கள், அதற்குப் பிறகு அவர்கள் யாருடைய நம்பிக்கை பெரிது என்று தங்களுக்குள் வாதிட்டுக் கொள்ளவில்லை.

No comments:

Post a Comment