TREACHEY , DISLOYALTY OF
KAMAL HAASAN
கமலஹாசனின் துரோகத்திற்கு இரையான எழுத்தாளர் ம.வே.சிவக்குமார்
09-01-2017இன்று காலை 3 மணிக்கு காலமாகி விட்டார்
கண்ணைக் கட்டியது போல் இருக்கிறது. எழுத்தாளர் ம.வே.சிவக்குமார் இன்று காலை 3 மணிக்கு காலமாகிவிட்டாராம். நண்பர் Ajayan Bala Baskaran பதித்த நிலைத்தகவலை வாசித்ததில் இருந்து ஒருவகையான தவிப்பு சூழ்கிறது.
கமல் நடிப்பில் பரதன் இயக்கிய ‘தேவர் மகன்‘ படத்துக்கு வசனம் எழுதியது தான்தான் என்றும் ஆனால், தனது பெயரை கமல் இருட்டடிப்பு செய்து விட்டார் என்றும் அவர் குமுறி அழுத காட்சிதான் கண்முன் இப்போது வருகிறது. ‘தேவர் மகன்‘ அனுபவம் குறித்து ஒரு தொடர் எழுத விரும்பினார். பல பத்திரிகைகளிலும் தொடர்பு கொண்டார்.
இறுதியில் வெகுஜன எழுத்தாளர்களை அரவணைப்பதற்காகவே பிறவி எடுத்திருக்கும் அண்ணன் பாக்கெட் நாவல் அசோகன்தான் அதை வெளியிட்டார்.
சந்திக்கும்போதெல்லாம் ‘உன் கண் முன்னாடி ஒரு படத்தை இயக்கி நான் யாருன்னு காட்டறேன் பார்...‘ என கமலிடம் சவால் விட்ட தருணத்தை உணர்ச்சியுடன் நடித்துக் காட்டுவார். கூடவே படத்துக்காக, தான் எழுதியிருக்கும் கதையை காட்சிகளுடன் விவரிப்பார். தயாரிப்பாளர்களை சந்தித்தது / சந்தித்து வருவது குறித்தும் சிகரெட்டை ஊதியபடி சொல்வார்.
நக்கல் அதிகம். நையாண்டியும்தான். 1970களின் பிற்பகுதியில் எழுத ஆரம்பித்த பலரிடமும் இந்த குணங்களை பார்த்திருக்கிறேன். இந்தி எதிர்ப்பு / நக்சல்பாரி எழுச்சி / எமர்ஜென்சி காலகட்டம் ஆகியவற்றை தங்கள் இளம் பருவத்தில் சந்தித்தவர்கள் என்பதால் ஒருவகையான அலட்சியம் அவர்களிடம் தென்படும். அதே நேரம் அன்புக்கு கட்டுப்பட்டவர்கள். துரோகத்தை தாங்க முடியாதவர்கள்.
சிறுபத்திரிகை சார்ந்த இலக்கியத்துக்கும் / வெகுஜன எழுத்துக்கும் இடையில் பாலமாக திகழ்ந்தவர்களில் ம.வே.சிவக்குமாரும் ஒருவர். அபாரமான நடை.
நேரில் எப்படி இருப்பாரோ அப்படித்தான் எழுத்தும்.
அவரது முக்கிய நாவலான ‘வேடந்தாங்கலை்‘ 1980களில் படமாக எடுக்க பலரும் முயன்றிருக்கிறார்கள்.
எம்.ஜி.ஆரை நினைவுப்படுத்தும் வகையில் ‘நாயகன்‘ இருக்கும்.
குறிப்பிடத்தகுந்த பல சிறுகதைகளை எழுதியிருக்கிறார்.
ஆனால், கவனிக்கப்படாமல் அல்லது புறக்கணிக்கப்பட்ட எழுத்தாளர்களில் அவரும் ஒருவராக இருந்ததற்கு தமிழ் சூழல் எப்போது மன்னிப்பு கேட்கப் போகிறதோ தெரியவில்லை.
எடுத்தெறிந்து பேசும் அவரது குணமே மற்றவர்களிடமிருந்து அந்நியப்படுத்திவிட்டதோ?இருக்கலாம். ஆனால், எவ்வளவுக்கு எவ்வளவு மற்றவர்களை திட்டுகிறாரோ அவ்வளவுக்கு அவ்வளவு அவர்களை நேசிக்கவும் செய்வார்.
‘குமுதம்‘ வார இதழில் பணிபுரிந்த போது பா.ராகவன் வழியாக பழக்கமானார். அப்போது ம.செ., ஓவியத்துடன் ‘சோழம் காதலி‘ என்ற ஆறு வார சரித்திர குறுந்தொடரை ‘ரவிவர்மா‘ என்ற பெயரில் எழுதிக் கொண்டிருந்தேன். அதன் முதல் அத்தியாயம் இர்விங் வேலஸ் எழுதிய ‘Second Lady' நாவலின் மையம்தான். ஆனால், தொடரும் போடுவதற்கு முன்பே இளவரசியை அகற்றிவிட்டு அவரைப் போலவே தோற்றம் உடைய வேறொரு பெண்ணை அந்த இடத்தில் எதிரி நாட்டவர் அமர்த்தும் செயலை ஆதித்த சோழன் பார்த்து விடுவான் என முடித்திருந்தேன்.
பா.ரா.,வின் கேபினில் அத்தியாயத்தை படித்தவர் பக்கத்து கேபினில் இருந்த என்னை அழைத்தார்.
‘நீ நேர்மையான திருடன். ஈயடிச்சான் காப்பி அடிக்கலை. இன்ஸ்பையர் ஆகியிருக்க. அதை வெளிப்படையாவும் ஒத்துக்கற. உன்னை எனக்கு பிடிச்சிருக்கு. i am ma.ve.sivakumar‘ என கைகொடுத்தார்.அன்று ஆரம்பித்த பழக்கம். அதன் பிறகு தீபாவளி, பொங்கல், புத்தாண்டு அன்று தவறாமல் அவரிடமிருந்து வாழ்த்து SMS வரும்.
அவ்வப்போது சந்திப்போம். எழுத்து, சினிமா கனவு இந்த இரண்டையும் தவிர்த்து வேறு எதைக் குறித்தும் பேச மாட்டார்.
கூடவே எழுத்தாளர்களை சுரண்டும் சமூகம் குறித்தும் தன் சீற்றத்தை வெளிப்படுத்துவார்...தறிகெட்டு ஓடும் நினைவுகளை அடக்கி ஒழுங்குப்படுத்த முடியவில்லை. இந்த நிலைத்தகவலில் என்ன எழுதியிருக்கிறேன் என்றும் தெரியவில்லை...
ஆழ்ந்த இரங்கல்.
‘தேவர் மகன்‘ படத்தை நிச்சயம் இன்றிரவு பார்க்கிறேன்...
WRITTEN
siva raman
சினிமாவில் வாழ்க்கையைத் தொலைத்த எழுத்தாளனின் கதை!
கடந்த சில நாட்களாக தமிழ் சினிமாவை கலக்கி வருகிறது ஒரு செய்தி. அச்செய்தியின் நாயகன், எழுத்தாளர் ம.வே.சிவகுமார். எழுத்துலகில் ஜெயகாந்தனின் சிஷ்யனாக அறியப்பட்டு, திரையுலகில் நடிகர் திலகம் சிவாஜியோடு பழகி, கமல்ஹாசனால் சினிமாக்காரனாக அடையாளம் காட்டப்பட்ட ம.வே.சிவகுமார், தன் திரைப்பயணத்தை அடிப்படையாக வைத்து ஒரு படம் எடுக்கிறார். அந்தப் படம், ‘என் பெயர் ம.வே.சிவகுமார்’. படத்தின் மூலம் பல சினிமாக்காரர்களின் முகத்திரை கிழியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ‘ஏன் இந்தக் கொலைவெறி’ என்றால், தன் அக்மார்க் சிரிப்போடு தொடங்குகிறார் சிவகுமார்.
‘‘பேங்க்ல கேஷியர் வேலையில இருந்தேன். 4000 பேர் இருந்த பேங்க் யூனியனை உடைச்சு தனியா ஒரு யூனியன் ஆரம்பிச்சு அதையே பெரிய யூனியனா மாத்துனவன். ‘பரிக்ஷா’ குழுவில நாடகத்துல நடிக்கப் போனப்போ, ‘உங்க லெவலுக்கு இதெல்லாம் புரியாதுங்க’ன்னு ஒருத்தர் சொல்லப் போக, ‘என்னடா உங்க லெவல்’னு சொல்லிட்டு எழுத ஆரம்பிச்சேன். முதல் கதையே ‘கணையாழி’ல வந்துச்சு. ‘ரொம்ப நல்லா எழுதுறே, பெரிய எழுத்தாளர்களை வாசிச்சிட்டு எழுது’ன்னு நண்பர்கள் சொன்னதால 30 நாட்களில் இந்தி கத்துக்கிற மாதிரி, 3 மாசத்தில தமிழ் இலக்கியம் கத்துக்கிட்டு எழுதுனேன். என் கதைகளை வாசிச்ச ஜெயகாந்தன், என்னை சிஷ்யனா ஏத்துக்கிட்டார்.
என் புத்தகத்தைப் படிச்சுட்டு ஒரு வாசகர், ‘உங்களை மாதிரி திறமைசாலிகள் சினிமாவுக்குத் தேவை’ன்னு கடிதம் போட்டார். முக்தா சீனிவாசன்கிட்ட உதவி இயக்குனரா சேந்தேன். பேங்க்ல வேலை செஞ்சுக்கிட்டே 2 படங்களுக்கு பணிபுரிந்தேன். ‘நாயகன்’ படம் வெளிவந்த நேரம். ‘150 படங்களுக்குப் பிறகு இந்தப் படத்துலதான் கமல் நடிக்க கத்துக்கிட்டிருக்கார்’னு ஒரு பத்திரிகையில எழுதினேன். அதைப் படிச்சுட்டு, கிரேசி மோகன்கிட்ட விசாரிச்சிருக்காரு கமல். என் புத்தகங்களையும் வாங்கிப் படிச்சிருக்கார். ‘மருதநாயகம்’ வேலை தொடங்கினப்போ, என்னைக் கூப்பிட்டு கதை இலாகாவில சேத்துக்கிட்டார்.
‘குணா’ படத்தை சிவாஜி சாருக்கு பிரிவியூ போட்டப்போ என்னையும் கூட்டிட்டுப் போய் ‘என்னை மாதிரி இவரும் உங்களோட 3வது தலைமுறை ரசிகர். உங்க கால்பட்டு சாபவிமோசனம் பெற காத்திருக்கிற ஆம்பள அகலிகை’ன்னு அறிமுகப்படுத்தினார். ‘கால் என்ன காலு, கையே படட்டுமே’ன்னு சொல்லி ஆசீர்வதிச்சார் சிவாஜி. அதுக்கப்புறம், ‘தேவர் மகன்’ படத்துல என்னை அசிஸ்டென்டா சேத்துக்கிட்டார் கமல்.
ஷூட்டிங்ல தினமும் சிவாஜி சார்கிட்ட போயி, அவர் நடிச்ச படங்கள்ல இருந்து வசனங்களைப் பேசி நடிச்சுக் காமிப்பேன். ஒருநாள் கமல் சார் முன்னாடி என்னை, ‘வாடா ஜூனியர்’னு சிவாஜி அழைச்சுட்டார். கமல் சாரோட முகம் மாறிடுச்சு. ‘இனிமே இப்படி இருந்தா சரிவராது... நாமளே படம் எடுப்போம்’னு வெளியில வந்து, ‘உங்கள் ஜூனியர்’னு பேரு வச்சு பூஜையும் போட்டேன். நான்தான் ஹீரோ. ரேவதி, சுகாசினியை ஹீரோயினா நடிக்கக் கேட்டேன். ரெண்டு பேருமே ஒத்துக்கலே. கீர்த்தனான்னு ஒரு பொண்ணை ஹீரோயினா போட்டேன். கமல் சார், ‘வேணாம்’னு எவ்வளவோ சொன்னார். நான் கேட்கலே. கடைசியில அவரே வந்து குத்துவிளக்கு ஏத்தி படத்தைத் தொடங்கி வச்சார்.
பட வேலைகளுக்காக நண்பர்கள் சில பேர் பணம் கொடுத்தாங்க. அஞ்சு வட்டிக்கு கடன் வாங்கி அவங்களுக்கு பணத்தைக் கொடுத்தேன். சினிமா வெறியில பேங்குக்கு சரியா போகாததால நாலு வருஷம் சம்பளம் இல்லை. அஞ்சு வட்டி, பத்து வட்டியாச்சு. உக்காந்து எழறதுக்குள்ள வட்டியும் முதலும் 35 லட்சமாயிடுச்சு. வேலைக்கு வி.ஆர்.எஸ் கொடுத்தேன். வீட்டை வித்தேன். கடனை அடைச்சுட்டு உக்காந்த நேரத்துல ஹார்ட் அட்டாக்.
இப்போ மீண்டு வந்துட்டேன். பிள்ளைகளுக்கு செய்ய வேண்டிய கடமைகளை செஞ்சு முடிச்சுட்டேன். ‘இனிமே இருந்து என்ன செய்யப்போறோம்... சாமியாரா போகலாம்’னு முடிவு செஞ்சப்போதான் என் மனைவி, ‘இன்னும் நீங்க முடிக்க வேண்டிய வேலை ஒண்ணு இருக்கேÕன்னு ஞாபகப்படுத்துனா. திரும்பவும் களத்துல இறங்கிட்டேன். சினிமாவுக்காக வீடு, வேலை, சந்தோஷம் எல்லாத்தையும் தொலைச்ச என்னோட கதைதான் படம். ஸ்கிரீன்ல நான் மட்டும்தான் வருவேன். இடைவேளை வரைக்கும் நானாவும், அதுக்குப்பிறகு குருநாதர் சிவாஜியாவும் வர்றேன். எஸ்.வி.சேகர் சார் ரூ.1 லட்சம் தர்றார். என் பள்ளி நண்பர்கள் எல்லாரும்உதவுறதா
சொல்லியிருக்காங்க...’’ என்று உற்சாகம் காட்டுகிற ம.வே.சிவகுமார், அடுத்து இன்னொரு படமும் எடுக்கிறாராம். 60 வயதுக்காரருக்கும், 20 வயதுக்காரருக்கும் இடையில் நடக்கும் மோதல்தான் கதை. கதாநாயகன், இவர்தான்; 20 வயது வில்லனாக நடிக்க சமுத்திரக்கனி ஒப்புக் கொண்டிருக்கிறாராம்!
No comments:
Post a Comment