NEPOLEON III OF FRANCE
DIED 1873 JANUARY 9
1851 டிசம்பரில் துவங்கி 1852 மார்ச் வரையில் நான்கு மாத காலமாக காரல்மார்க்ஸ் எழுதிய நூல்தான் ‘‘லூயிஸ் போனபார்ட்டின் 18வது புருமையர்’’. ஏழு அத்தியாயங்களைக் கொண்ட இந்த நூல் முதன்முதலில் 1852ல் நியூயார்க்கிலிருந்து வெளியாகத் துவங்கிய `டை ரெவல்யூசன்‘ (னுநை சுநஎடிடரவiடிn) என்ற ஏட்டின் முதல் இதழில் வெளியிடப்பட்டது. நியூயார்க் நகரில் ஜோசப் வெயித்மெயர் என்ற அறிஞரால் நிறுவப்பட்ட ஜெர்மனி மொழி மாத ஏடுதான் ‘டை ரெவல்யூசன்’.
இந்த ஏட்டில் தனது கட்டுரைத் தொடர் வெளியானது பற்றி, 1869ல் வெளியான இந்த நூலின் இரண்டாவது பதிப்பில் காரல் மார்க்ஸ் தானே எழுதிய முகவுரையில் குறிப்பிட்டிருக்கிறார். ‘‘ பிரான்சில் லூயிஸ் நெப்போலியன் போனபார்ட் கலகம் செய்து தனது சர்வாதிகார ஆட்சியை நிறுவியதைப் பற்றி அரசியல் வார ஏடான டை ரெவல்யூசனில் எழுதுமாறு எனது நண்பர் ஜோசப் வெயித்மெயர் கேட்டுக் கொண்டார்; அதை ஏற்று வாரந்தோறும் நான் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல்’’ என்று மார்க்ஸ் குறிப்பிடுகிறார்.
‘டை ரெவல்யூசன்’ ஏடு அமெரிக்காவில் வெளியானாலும், ஜெர்மனியிலும் குறிப்பிடத்தக்க அளவு விற்பனையைப் பெற்றிருந்தது. இதன் முதல் இதழிலிருந்தே காரல் மார்க்சின் ஆய்வுப்பூர்வமான கட்டுரைகள் வெளியானது, ஜெர்மனியில் பல்வேறு தரப்பு அறிஞர்களை ஈர்த்தது. அவர்களின் வேண்டுகோளை ஏற்றே இந்தக் கட்டுரைகள் தொகுக்கப்பட்டு ஒரு நூலாக வடிவம் பெற்றது.
இந்த நூல் முழுவதும் பிரெஞ்சுப் புரட்சிக்குப்பிறகு, பிரெஞ்சுக் குடியரசை நொறுக்கி நெப்போலியன் என்ற சர்வாதிகாரி ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய வரலாற்றையும் அப்போது நடந்த வர்க்கப் போராட்டங்களையும் தொழிலாளி வர்க்க கண்ணோட்டத்தில் விரிவாக அலசுகிறது.
1851ம் ஆண்டு டிசம்பர் 2 அன்று முதலாம் நெப்போலியனின் ஒன்றுவிட்ட சகோதரனும், பிரெஞ்சுக் குடியரசின் முதலாவது ஜனாதிபதியாக பொறுப்பேற்றவனுமான லூயிஸ் நெப்போலியன் போனபார்ட், தனது அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ளும் நோக்கத்துடன் பிரெஞ்சு நாடாளுமன்றத்தைத் கலைத்து, சர்வாதிகார ஆட்சியை நிறுவினான். ஓராண்டு கழித்து மேற்படி லூயிஸ் நெப்போலியன் போனபார்ட் தன்னைத் தானே பிரெஞ்சுப் பேரரசனாக அறிவித்துக்கொண்டான். பிரெஞ்சுப் பேரரசர் மூன்றாவது நெப்போலியன் என்று தனக்குத் தானே பெயர் சூட்டிக்கொண்டான்.
இந்தச் சம்பவங்களை ஆய்வுப்பூர்வமாக பதிவுசெய்துள்ள காரல் மார்க்ஸ், வரலாற்றில் பின்னோக்கிச் சென்று ஆராய்கிறார். 1799ல் இதேபோல் மகத்தான பிரெஞ்சுப் புரட்சி நடந்து, அதன் முடிவில் அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்கத்துடன் முதலாவது நெப்போலியன் போனபார்ட் மிகப்பெரும் ராணுவக் கலகத்தை நடத்தி, பிரெஞ்சுப் புரட்சியை ரத்தவெள்ளத்தில் மூழ்கடித்து, தன்னைத் தானே பேரரசனாக அறிவித்துக் கொண்டு சர்வாதிகார ஆட்சியை நிறுவினான்.
அந்த வரலாறு மீண்டும் 1851ல் திரும்பியிருக்கிறது என்பதை குறிப்பிடும் விதமாகவே “லூயிஸ் போனபார்ட்டின் 18வது புருமையர்” என்று தனது நூலுக்கு பெயர் சூட்டினார் மார்க்ஸ்.
‘18வது புருமையர்’ என்பது பிரெஞ்சுப் புரட்சிக்குப் பிறகு உருவாக்கப்பட்ட பிரெஞ்சுக் குடியரசின் காலண்டரில் நவம்பர் 9ம்தேதியை குறிக்கும் சொல் ஆகும். பிரெஞ்சு காலண்டரில் வருகிற இரண்டாவது மாதத்தின் பெயர்தான் புருமையர். இது இன்றைக்கு நாம் பயன்படுத்தும் காலண்டரின்படி அக்டோபர் இறுதியிலிருந்து நவம்பர் இறுதி வரைக்குமான காலம் ஆகும். சுருக்கமாகச் சொன்னால் பிரான்சில் இது கடும் குளிர்காலத்தை குறிக்கும் மாதம். 1799 நவம்பர் 9ம்தேதி – அதாவது 1799 புருமையர் மாதம் 18ந்தேதி தான் முதலாவது நெப்போலியன் போனபார்ட், தனது சர்வாதிகார ஆட்சியை நிறுவினான்.
இதேபோல 1851ல் லூயிஸ் நெப்போலியன் போனபார்ட் தனது சர்வாதிகார ஆட்சியை நிறுவி, தன்னை மூன்றாவது நெப்போலியன் என்று அறிவித்துக் கொண்டான்.
இப்படியாகத் துவங்கும் இந்த வரலாற்று நூலைப் புரிந்துகொள்வதற்கு, நாம் பிரெஞ்சுப் புரட்சிக்குப் பின்பு நடந்த நிகழ்வுகளை சுருக்கமாக அறிந்துகொள்வது அவசியம்.
3
மன்னராட்சி கோலோச்சிக் கொண்டிருந்த பிரான்சில் அந்த நிலப்பிரபுத்துவத்திற்கு எதிராக பூர்ஷ்வா வர்க்கம் எனப்படுகிற முதலாளித்துவ வர்க்கம் வெகுண்டெழுந்தது. மன்னராட்சிக்கு எதிராக மிகப்பெரிய சமூக மற்றும் அரசியல் எழுச்சி ஏற்பட்டது. இதன்விளைவாக 1789முதல்1799 வரை பத்தாண்டுக்காலம் பிரான்சில் மிகப்பெரும் அரசியல் புரட்சி வெடித்தது. இதுவே உலகின் முதல் மகத்தான புரட்சியாம் பிரெஞ்சுப் புரட்சி ஆகும்.
இந்தப் புரட்சியின் முடிவில் பிரான்சில் மன்னராட்சி தூக்கியெறியப்பட்டு, பிரெஞ்சுக் குடியரசு உருவாக்கப்பட்டது.
இந்தக் காலக்கட்டத்தில் மிகப்பெரும் அரசியல் கொந்தளிப்பு நிலவியது. கடும் வன்முறைச் சம்பவங்கள் நடந்தன. பல படுகொலைகள் அரங்கேறின. மேற்கு ஐரோப்பா முழுவதும் மட்டுமின்றி, உலகம் முழுவதும் இந்த மகத்தான பிரெஞ்சுப் புரட்சி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
விடுதலை உணர்வும் பகுத்தறிவுச் சிந்தனைகளும் ஒன்று சேர்ந்து ஒரு நவீன வரலாற்றை அரங்கேற்றிய புரட்சியாக இது அமைந்தது. உலகம் முழுவதும் பல நாடுகளில் மன்னராட்சிகளுக்கு எதிராக போராட்டங்கள் வெடிக்கவும் எழுச்சிகள் ஏற்படவும் அதன்விளைவாக குடியரசுகளும் சுதந்திரமான ஜனநாயகங்களுமாக நாடுகள் மலர்வதற்கு அடித்தளமிட்டது.
கரீபியப் பிரதேசம் முதல் மத்திய கிழக்கு நாடுகள் வரை ஏற்கெனவே இருக்கும் மன்னராட்சிகளுக்கு எதிராக புரட்சிகரப் போர்களும் எழுச்சிகளும் வெடிப்பதற்கு இது அடித்தளமிட்டது. மனிதகுல வரலாற்றின் மிக முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றாக பிரெஞ்சுப் புரட்சியை இன்றும் வரலாற்று அறிஞர்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார்கள்.
Add caption |
ஆனால் அத்தகைய மகத்தான பிரெஞ்சுப் புரட்சி நீண்டகாலம் நீடிக்கவில்லை. நிலப்பிரபுத்துவ அமைப்பு முறையின் வடிவமே மன்னராட்சி. அந்த மன்னராட்சிக்கு எதிராக ஒட்டுமொத்த மக்கள் சமூகமும் பங்கேற்கிற குடியரசாக மலர்ந்ததை முதலாளித்துவ வர்க்கமும், நிலப்பிரபுத்துவ வர்க்கமும் முழுமனதோடு ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. அதன் விளைவே, மிகக்குறுகிய காலத்திலேயே -1799ல் நவம்பர் 9ம்தேதி – அதாவது 1799 புருமையர் மாதம் 18ந்தேதி முதலாம் நெப்போலியன் போனபார்ட், மேற்கண்ட புரட்சிகர பிரெஞ்சுக் குடியரசை அராஜகமான முறையில், ஆயுத முனையில் கைப்பற்றினான். பிரெஞ்சுக் குடியரசை தனது அதிகாரத்திற்குட்பட்ட சர்வாதிகார அரசாக மாற்றினான்.
ஒரு அராஜக ஆட்சி நிலைகொண்டது. 1814 வரை பிரெஞ்சுப் பேரரசனாக தன்னை அறிவித்துக் கொண்ட நெப்போலியன் ஆட்சி செய்தான்.
முதலாம் நெப்போலியனின் மறைவிற்குப் பிறகு மீண்டும் பிரான்சில் மன்னராட்சி வந்தது. 1830 வரை போர்பன் வம்சத்தவரின் ஆட்சி நடந்தது. போர்பன் வம்ச அரசர்களின் ஆட்சி மிகப்பெரும் நிலக் குவியல் கொண்ட நிலப்பிரபுக்களின் ஆட்சியாக இருந்தது. 1830க்குப் பிறகு 1848 வரை தொடர்ந்து ஆர்லியன் வம்சத்தாரின் அட்சி நடந்தது. ஆர்லியன் வம்ச அரசர்களின் ஆட்சி பெரும் பணம் குவித்த நிலப்பிரபுக்களின் ஆட்சியாக இருந்தது.
இந்த நிலப்பிரபுக்களின் ஆட்சிக்கு எதிராக 1848ல் மீண்டும் பிரான்சில் புரட்சி வெடித்தது. இது அந்த ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் எழுந்த புரட்சி என்பதால் ‘பிப்ரவரி புரட்சி’ என்றும் அழைக்கப்படுகிறது. சுமார் 50ஆண்டுகள் கழித்து பிரான்சில் ஏற்பட்ட இந்தப் புரட்சியின் அலைகள் ஐரோப்பா முழுவதும் பரவின. 1830முதல் 1848 வரை கோலோச்சிய ஆர்லியன் வம்சத்தவரின் மன்னராட்சிக்கு பிரான்சின் இரண்டாவது புரட்சி முடிவு கட்டியது. பிப்ரவரி மாதத்தில் நடந்த அந்தப் புரட்சி ஆர்லியன்ஸ் வம்ச கடைசி மன்னன் லூயிஸ் பிலிப்பின் ஆட்சியைத் தூக்கியெறிந்தது. இதைத்தொடர்ந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அமைக்கப்பட்டு பிரான்சில் இரண்டாவது குடியரசு ஆட்சி அமுலுக்கு வந்தது.
மன்னராட்சியை தூக்கியெறிந்த போதிலும், இந்தப் புதிய குடியரசு ஆட்சியில் பழமைவாதிகளின் ஆதிக்கமே ஓங்கி இருக்கும் என்பது தெளிவாகத் தெரிந்தது. இது பிரான்ஸ் மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பையே ஏற்படுத்தியது.
இதன் விளைவாக பிரான்ஸ் மக்கள் – குறிப்பாக பாரீஸ் நகரத்தின் தொழிலாளி வர்க்கம் -1848 ஜுன் 23ம்தேதி மிகப்பிரம்மாண்டமான எழுச்சியில் ஈடுபட்டனர். ‘ஜுன் மாத நாட்களின் பேரெழுச்சி’ என்று பிரான்ஸ் வரலாற்றில் பொறிக்கப்பட்ட பாரீஸ் தொழிலாளர்களின் இந்த மகத்தான எழுச்சி, அன்றைக்கு இருந்த பழமைவாதக் குடியரசு ஆட்சியின் ராணுவத்தினரால் ரத்தவெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பாரீஸ் நகரத் தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
இதற்குப் பிறகு 1848 டிசம்பர் 2ம்தேதி பிரெஞ்சுக் குடியரசின் முதலாவது ஜனாதிபதியாக லூயிஸ் நெப்போலியன் போனபார்ட் தேர்வு செய்யப்பட்டு ஆட்சிப் பொறுப்பை ஏற்றான்.
மிகச்சரியாக நான்காண்டு காலத்தில் அவன், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த நாடாளுமன்றத்தைக் கலைத்து, ‘நானே பிரெஞ்சுப் பேரரசன்’ என்று அறிவித்து தன்னைத்தானே முடிசூட்டிக்கொண்டு மீண்டும் பிரான்சில் சர்வாதிகார ஆட்சியை நிறுவினான். 1870ம் ஆண்டு வரை அவனே பிரான்சின் சர்வாதிகாரியாக கோலோச்சினான். அவனே பிரெஞ்சு முடியாட்சியின் கடைசிச் சர்வாதிகாரி.
இந்த வரலாற்றையும் இதற்குப் பின் நடந்த நிகழ்வுகளையும்தான் இயக்கவியல் கண்ணோட்டத்தில் தனது ‘லூயிஸ் போனபார்ட்டின் 18வது புருமையர்’ என்ற நூலில் அலசுகிறார் மாமேதை மார்க்ஸ்.
4
முதலாவது பிரெஞ்சுப் புரட்சியின்போதும் சரி, இரண்டாவது பிரெஞ்சுப் புரட்சியின்போதும் சரி, முடியாட்சிகளுக்கு எதிராகத் தொழிலாளி வர்க்கமே வீறுகொண்டு எழுந்து மிகப்பெரும் கிளர்ச்சியில் ஈடுபட்டது. மனிதகுல வரலாற்றில் முன்னெப்போதும் நடந்திராத அளவிற்கு ஆவேசத்துடன் எழுந்து களத்தில் நின்றது. ஆனால் இரண்டு புரட்சிகளிலுமே ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற முடியாமல் அந்த தொழிலாளி வர்க்கம் ஒடுக்கப்பட்டது.
நிலப்பிரபுத்துவ அமைப்பு முறையின் வடிவம்தான் மன்னராட்சி முறை என்பதைப் பார்த்தோம்.. நிலப்பிரபுத்துவ அமைப்பு முறையைத் தொடர்ந்து வரலாற்று ரீதியாக முதலாளித்துவ ஆட்சி முறையே அமுலுக்கு வரும். ஆனால் அந்த முதலாளித்துவ சக்திகள் ஆட்சிக்கு வருவதற்கே கூட நிலப்பிரபுத்துவ ஆட்சிக்கு எதிராக பாரீஸ் தொழிலாளி வர்க்கம் நடத்திய மிகப்பிரம்மாண்டமான யுத்தமே காரணமாக அமைந்தது என்பதை இந்த நூலில் மார்க்ஸ் சுட்டிக்காட்டுகிறார்.
அதுமட்டுமல்ல, தொழிலாளி வர்க்கத்தை ரத்த வெள்ளத்தில் மூழ்கடித்துவிட்டு லூயிஸ் நெப்போலியன் போனபார்ட் பிரெஞ்சுக் குடியரசின் ஜனாதிபதியாக ஆவதற்கு பிரான்சின் விவசாய வர்க்கம் ஆதரவாக நின்றது என்பதையும் சுட்டிக்காட்டுகிறார்.
பிரான்சின் விவசாய வர்க்கம் ஏன் நெப்போலியனுக்கு ஆதரவாக நின்றது என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இதை விளக்கும் போதுதான், மார்க்ஸ், வர்க்க சமூகங்களின் அடிப்படைக் குணாம்சங்கள் குறித்து ஆய்வு செய்கிறார். இதற்கு முந்தைய மன்னராட்சிகளின் போது, பெரும் நிலக் குவியல் கொண்ட நிலப்பிரபுக்களும், மிகப்பெரும் பணக் குவியல் கொண்ட நிலப்பிரபுக்களுமே ஆளும் வர்க்கமாக இருந்தனர். அவர்கள் சிறிய அளவில் நிலம் கொண்ட விவசாயிகளை ஒடுக்கினர். சிறு அளவில் நிலம் கொண்ட விவசாய வர்க்கமே பிரெஞ்சு சமூகத்தின் பெரும்பான்மை சமூகமாக இருந்தது. இந்த வர்க்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தினார் லூயிஸ் நெப்போலியன் போனபார்ட்.
சிறு அளவில் நிலம் கொண்ட இந்த விவசாய வர்க்கத்தின் தன்மையை இன்னும் நுணுக்கமாக ஆய்வு செய்கிறார் மார்க்ஸ். இந்த விவசாயிகள்–சமூகத்தின் பெரும்பான்மை வர்க்கமாக இருந்தனர் என்ற போதிலும், ஒருவருக்கொருவர் தொடர்பில்லாமல், தனித்தனி குடும்பங்களாக , அவரவர் தேவையை அவரவர் நிலங்களிலிருந்து உற்பத்தி செய்து, சுயமாக பூர்த்தி செய்து கொள்பவர்களாக இருந்தனர். அவர்களது உற்பத்தி முறையே அவர்களை ஒருவரோடு ஒருவர் கை கோர்த்துக் கொள்ளாமல் தடுத்தது. அதுமட்டுமின்றி, தகவல் தொடர்பும் பெரிய அளவில் இல்லை. ஒவ்வொரு குடும்பத்திற்கும் சிறிய அளவில் நிலங்கள் இருந்தது. அதில், ஒரு பெரிய தொழிற்சாலையைப் போல வேலைப் பிரிவினை செய்து, கூலிக்கு ஆள் வைத்து, விவசாய உற்பத்தி செய்யும் நிலை இல்லை. இவர்களது விவசாய உற்பத்தி முறையில் விஞ்ஞானப் பூர்வ அணுகுமுறை ஏதும் இல்லை. எனவே ஒரு வீச்சான வளர்ச்சி ஏற்படவில்லை. அவரவர் நிலத்தில் அவரவர் மட்டுமே பாடுபட்டதால், பல்வேறு விதமான திறமைகள் அந்த நிலத்தில் பயன்படுத்தப்படவில்லை. சமூக உறவுகள் மூலமாக கிடைக்கக் கூடிய திறன்களும் கிடைக்கப்பெறவில்லை. ஒவ்வொரு தனித்தனி விவசாயக் குடும்பமும் அதனளவில் முழுமையாக தன்னிறைவு பெற்றதாக இருந்தது. எனவே சமூகத்தில் பிறரோடு தொடர்பு கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. அவர்கள் இயற்கையுடன் மட்டும்தான் தங்களுடைய தொடர்பை பெற்றிருந்தார்கள். சிறு அளவில் நிலம் வைத்திருக்கிற ஒரு விவசாயியியும் அவரது குடும்பமும் இருப்பார்கள்; பக்கத்திலேயே இதே போல இன்னொரு விவசாயக் குடும்பம். இப்படி பல குடும்பங்கள் சேர்ந்து ஒரு கிராமம்; இப்படி பல கிராமங்கள் சேர்ந்து ஒரு பிரதேசம் என பிரெஞ்சு விவசாய வர்க்கம் இருந்தது. இதைச் சுருக்கமாகச் சொன்னால், ஒரு சாக்கு மூட்டைக்குள் கட்டப்பட்ட உருளைக்கிழங்குகளைப் போல என்று மார்க்ஸ் குறிப்பிடுகிறார். ஒரே சாக்கு மூட்டைக்குள் கட்டப்பட்டிருந்தாலும், அவை வேறு வேறு உருளைக்கிழங்குகளே.
இத்தகைய தன்மை கொண்ட பிரெஞ்சு விவசாய வர்க்கம் தனக்கென்று ஒரு சமூக உணர்வோ, ஒரு தேசிய ஒருமைப்பாட்டு உணர்வோ, அரசியல் உணர்வோ அற்று இருந்தது. எனவே அது, ஒரு வர்க்கம் என்ற முறையில் ஒன்றுபடாமல் இருந்தது. இந்தப் பின்னணியில் புதிதாக மலர்ந்த நாடாளுமன்றத்தில் தங்களுடைய நலன்களைப் பிரதிபலிப்பதற்கு பிரதிநிதித்துவம் இல்லையே என்ற நிலைக்கு தள்ளப்பட்டது.
அந்த நாடாளுமன்றத்தில் முதலாளித்துவ வர்க்கமே கோலோச்சியது. முதலாளித்துவ வர்க்கத்தின் சார்பிலான அந்தக் குடியரசில் மிகப்பெரும் நிலக்குவியல் கொண்ட நிலப்பிரபுக்கள், அதிகார வர்க்கத்தினர், நிதி மற்றும் மிகப்பெரும் தொழில்களை நடத்தும் தொழிலதிபர்கள், ராணுவத்தின் உயர் பீடத்திலிருக்கும் அதிகாரிகள், கல்வியைக் கையில் வைத்திருக்கும் பல்கலைக்கழகங்கள், மதத்தைக் கையில் வைத்திருக்கும் தேவாலயங்கள், நீதியைக் கையில் வைத்திருக்கும் வழக்குரைஞர்களின் மன்றங்கள், இலக்கியத்தைக் கையில் வைத்திருக்கும் ஆளும் வர்க்க எழுத்தாளர்கள் மற்றும் ஆளும் வர்க்க ஊடகங்கள் ஆகியவையே செல்வாக்குப் பெற்றிருந்தன.
சாக்கு மூட்டைக்குள் இருக்கும் உருளைக்கிழங்குகளைப் போன்ற சிறு விவசாயிகளுக்கு அங்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை. அவர்களைக் குறி வைத்தான் லூயிஸ் நெப்போலியன் போனபார்ட். பிரெஞ்சு சமூகத்தின் பெரும்பான்மை வர்க்கமாக இருக்கிற அந்த விவசாயிகளின் பிரதிநிதியாக தன்னை முன்னிறுத்திக் கொண்டான். ஆனால் அவன் உண்மையில் அந்த விவசாய வர்க்கத்தின் புரட்சிகர சக்திகளை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை; மாறாக, அதே விவசாய வர்க்கத்தின் பழமைவாத சக்திகளை பிரதிநிதித்துவப்படுத்தினான். அந்த விவசாயிகள் தங்கள் கையில் உள்ள சிறு அளவிலான நிலங்களை எந்தவிதத்திலும் இழக்க விரும்பவில்லை. மாறாக, அந்த நிலத்தைக் கொண்டு கூடுதல் நிலத்தை சேர்க்கவே விரும்பினார்கள். எனவே அவர்கள் இயல்பாகவே லூயிஸ் நெப்போலியன் போனபார்ட்டுடன் அணி சேர்ந்தார்கள்.
பிரெஞ்சுக் குடியரசில் அவன் ஜனாதிபதியாக ஆனாலும், அதிகாரம் செலுத்தியது பிரெஞ்சு முதலாளித்துவ வர்க்கமே. சாக்கு மூட்டைக்குள் இருக்கும் உருளைக்கிழங்குகளை அவர்கள் பிரித்து மசியல் வைக்க முயன்றார்கள். ஆனால் அதை எதிர்த்து அந்த உருளைக்கிழங்குகள் கலகம் செய்தன. இப்படியாக பிரெஞ்சுக் குடியரசு அரசாங்கத்திற்கு எதிராக விவசாய வர்க்கத்தின் போராட்டம் எழுந்தது. அந்தப் போராட்டத்தை முதலாளித்துவ அரசு கடுமையாக ஒடுக்கியது. பல்லாயிரக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டனர். விவசாய வர்க்கத்தின் மீது முதலாளித்துவ வர்க்கம் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்கு கடுமையான அடக்குமுறையை ஏவியது. அதை எதிர்த்து விவசாய வர்க்கம், உண்மையில் ஒரு வர்க்கமாகத் திரண்டு போராட வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதில் வேடிக்கை என்னவென்றால், மேற்படி முதலாளித்துவ அரசின் பிரதிநிதியாக இருந்து கொண்டு விவசாயிகளை கொடூரமாக ஒடுக்கிய அதே லூயிஸ் நெப்போலியன் போனபார்ட், தன்னை, அந்த ஒடுக்கப்பட்ட விவசாய வர்க்கத்தின் பிரதிநிதியாகவும் முன்னிறுத்திக் கொண்டான். அவர்களைப் பாதுகாப்பதாக உறுதி கொடுத்தான். தாங்கள், அரசாங்கத்தில் செல்வாக்கு செலுத்த முடியாது; அரசாங்கத்தில் இருப்பவன் தங்களுக்குச் சாதகமாக நடந்து கொள்வதாக உறுதியளிக்கும் போது அதை ஏற்றுக் கொள்வதே உசிதம் என்று எண்ணி, விவசாய வர்க்கம் நெப்போலியனைத் தனது பாதுகாவலனாக வரித்துக் கொண்டது.
அதனால்தான், 1851இல் அவன் பிரெஞ்சுக் குடியரசை கலகம் செய்து வீழ்த்திவிட்டு, சர்வாதிகாரமாக ஆட்சியைக் கைப்பற்றிய போதும், இந்த விவசாய வர்க்கம் அவனோடு நின்றது.
இப்படியாக பிரான்சின் வர்க்க சமூகங்களின் குணாம்சத்தை நுணுக்கமாக மாமேதை மார்க்ஸ் இந்த நூலின் ஏழு அத்தியாயங்களிலும் ஆய்வு செய்திருக்கிறார்.
ஏழாவது அத்தியாயத்தில் மொத்த நிகழ்வுகளையும் சுருக்கமாக குறிப்பிடுகிறார் மார்க்ஸ்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு குடியரசு எப்படி சர்வாதிகாரிகளால் கைப்பற்றப்பட முடியும்; சர்வாதிகார ஆட்சியை நிறுவுவதற்கு எப்படியெல்லாம் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்; அரசு அதிகாரத்தில் இருப்பவர்கள் சர்வாதிகார ஆட்சியை கொண்டுவந்தால் எத்தனை கொடிய அடக்குமுறைகளை ஏவுவார்கள் என்பதை மிக விரிவாக, பிரான்சின் அனுபவங்களோடு மார்க்ஸ் விவரிக்கிறார்.
“1848ன் ஜுன் மாத நாட்களின் பேரெழுச்சி – பாரீஸ் பாட்டாளி வர்க்கம் நடத்திய அந்தப் பேரெழுச்சி ரத்தவெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டது; ஆனால் பிரான்சில் அடுத்தடுத்து நடந்த தொடர் நிகழ்வுகளில் ஒரு பிசாசைப்போல அது துரத்திக் கொண்டே இருந்தது. இந்தப் பின்னணியில்தான் பிரான்ஸ் தன்னை ஒரு ஜனநாயகக் குடியரசு என்று அறிவித்துக் கொண்டது.
1849 ஜுன் 13ம்தேதி இந்த குடியரசானது ஏற்கெனவே கைவிடப்பட்ட குட்டி பூர்ஷ்வாக்களை – அதாவது குட்டி முதலாளிகளைச் சேர்த்துக் கொண்டு மக்களின் நம்பிக்கையைச் சிதறடித்தது. நாடாளுமன்றக் குடியரசு என்று தன்னை அறிவித்துக் கொண்டு படிப்படியாக இந்த முதலாளித்துவ வர்க்கத்தினர் ஒட்டுமொத்த அரசையும் தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டனர்; 1851 டிசம்பர் 2 வரை அந்த அதிகாரத்தை அவர்கள் முழுமையாக அனுபவித்தார்கள்; அதற்குப் பிறகு “குடியரசு நீடூழி வாழ்க” என்று முழங்கிக் கொண்டே மன்னராட்சியின் விசுவாகிகளோடு சேர்ந்து – அதாவது நிலப்பிரபு வர்க்கத்தினருடன் சேர்ந்து – அந்தக் குடியரசை குழிதோண்டிப் புதைத்தார்கள்.
பிரெஞ்சு முதலாளித்துவ வர்க்கமானது, தங்களது அரசாங்கத்தில், உழைக்கும் பாட்டாளி வர்க்கத்தின் ஆதிக்கம் எந்தவிதத்திலும் இருந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தனர். இதற்காகவே அவர்கள் ‘உதிரிப் பாட்டாளி’ வர்க்கத்தினருக்கு முக்கியத்துவம் அளிப்பதாகக் கூறி அவர்களைத் தங்கள் பக்கம் சேர்த்துக் கொண்டனர். இந்த முதலாளித்துவ வர்க்கம், ஒட்டுமொத்த பிரான்சையும் பாட்டாளி வர்க்கம் அராஜகமாக கைப்பற்றி அனைத்தையும் பறித்துக் கொண்டுவிடும் என்று கூறி ஒரு கடுமையான பிரச்சாரத்தை நடத்தியது; எதிர்காலத்தில் பெரும் பயங்கரம் நிகழப்போவதாகக் கூறியும் மக்களை அச்சுறுத்தியது.
ஜனாதிபதியாக இருந்த லூயிஸ் நெப்போலியன் போனபார்ட், பிரான்சின் எதிர்காலம் இருளில் சிக்கப்போவதாக அபயக்குரல் கொடுத்து அலறினார். பிரான்சைக் காப்பாற்றுவதற்கு வேறு வழியே இல்லை என்று கூறி முதலாளித்துவ வர்க்கமானது சர்வாதிகார ஆட்சி என்கிற வாளை தெய்வமாக முன்னிறுத்தியது; அந்த வாள் ஆட்சி செய்யத் துவங்கியது. அந்த வாள் புரட்சிகரப் பத்திரிகைகளை – ஊடகங்களை
அழித்தொழித்தது; தனது சொந்த ஊடகங்களையும் கூட நிர்மூலமாக்கியது. பொதுமக்கள் கூடுகிற கூட்டங்கள் அனைத்தையும் காவல்துறையின் கடும் கண்காணிப்புக்கு உள்ளாக்கியது; ஜனநாயகப்பூர்வமான தேசிய பாதுகாப்புப் படையைக் கலைத்தது; முழுமையாக முற்றுகையிடப்பட்ட ஒரு அரசாங்கத்தின் ஆட்சியை நிறுவியது; நீதிமன்றங்கள் அனைத்தையும் ராணுவ தீர்ப்பு மன்றங்களாக குறுக்கியது; நீதிபதிகள் அனைவரும் ராணுவ கமிஷன்களுக்குள் கொண்டுவரப்பட்டனர்; பொதுக் கல்விமுறை முற்றாக மதகுருமார்களால் தீர்மானிக்கப்படும் என அவர்களது கைகளில் ஒப்படைக்கப்பட்டது; இந்த விதிகளையெல்லாம் மீறுகிற மக்களை எந்தக் கேள்வியும் இன்றி, எந்த விசாரணையுமின்றி சிறையில் தள்ளியது; சமூகத்தில் ஒரு சிறிய போராட்டக் குரல் கேட்டால்கூட ஆட்சி அதிகாரத்தைக் கொண்டு கொடூரமாக ஒடுக்கியது; கலகக்குரல் கொடுக்கும் தனது சொந்த அரசியல் வாதிகளையும் இலக்கிய கர்த்தாக்களையும் எழுத்தாளர்களையும், பேச்சாளர்களையும், அவர்களது உணர்வுகளையும் ஒரே அடியாக ஒடுக்கியது; பணத்திற்கு விலைபோகாதவர்களின் வாயை மூடப் பலவிதமான வழிகள் கையாளப்பட்டன; எழுத்துலகின் பேனா முறிக்கப்பட்டது; புரட்சியை, புரட்சிகர சிந்தனையை முற்றாக ஒடுக்குவதற்கு முதலாளித்துவ வர்க்கம் ஓய்வின்றி கடுமையான முயற்சிகளை செய்துகொண்டே இருந்தது.
– இப்படியாக இரண்டாவது பிரெஞ்சுப் புரட்சியை நடத்திய பாரீஸ் தொழிலாளி வர்க்கத்தின் மீது கொடூர ஒடுக்குமுறையை ஏவி அதை முதலாளித்துவ குடியரசாக மாற்றிய வரலாற்றை தனது அழகான வார்த்தைகளில், இலக்கிய நயத்தோடும், ஆக்ரோசத்தோடும் விவரிக்கிறார் மார்க்ஸ்.
அடுத்து என்ன நடக்கும் என்பதையும் முன்கூட்டியே விளக்குகிறார் :
“பிரெஞ்சு முதலாளித்துவம் நீண்ட பல ஆண்டுகளுக்கு முன்பே நெப்போலியனின் சாம்ரஜ்யம் எப்படி மாறும் என்பதை தெரிந்து வைத்திருந்தது. 50 ஆண்டுகளில் ஒட்டுமொத்த ஐரோப்பாவும் குடியரசாகுமா அல்லது கொசாக்குகளின் ராஜ்யமாக – அதாவது நிலப்பிரபுத்துவ – முதலாளித்துவ வர்க்கத்தினரின் ராஜ்யமாக மாறுமா என்ற கேள்வி எழுந்தது. அதற்கு அப்போதே தீர்வும் கிடைத்தது. இது `கொசாக்குகளின் குடியரசாக‘ மாறும் என்று.”
5
வர்க்க சமூகங்களின் தன்மை குறித்து மட்டுமின்றி இந்த நூலில், ஒரு முதலாளித்துவ அரசு எப்படி முழுமையாக வடிவம் பெற்றது என்பதை இயக்கவியல் அடிப்படையில் ஆய்வு செய்கிறார் மார்க்ஸ். அந்த அரசில் கோலோச்சுபவர்கள் யார், ஆளும் வர்க்கத்தின் தன்மை எப்படிப்பட்டது என்பதைப் பற்றி ஆய்வு செய்கிறார். அதனால்தான் இந்த நூல், முதலாளித்துவ அரசு குறித்து பின் நாட்களில் மிகத் தெளிவாக உருவான மார்க்சிய கோட்பாட்டிற்கு அடிப்படை அமைத்துத் தந்த நூல் என்று போற்றப்படுகிறது. அது மட்டுமின்றி, சர்வாதிகாரமும், அதைத் தொடர்ந்து பாசிசமும் எப்படி வடிவம் பெறுகின்றன என்பதை முதன் முதலில் விளக்கிய நூல் இதுவே. அதானல்தான் இன்றைக்கும் மார்க்சிய ஆய்வாளர்களும், அறிஞர்களும் இந்த நூலை மிகப்பெரிய
பொக்கிஷமாகக் கருதுகிறார்கள். 20ஆம் நூற்றாண்டின் பாசிசம் எப்படி இருக்கும் என்பதை முன் கூட்டியே கணித்த மார்க்ஸ், லூயிஸ் நெப்போலியன் போனபார்ட் எப்படி ஒரு சர்வாதிகாரியாக மாறினான் என்பதை இந்த நூலில் மிகத் தெளிவாக விளக்குகிறார்.
“மனிதர்கள் தங்களது சொந்த வரலாற்றைத் தாங்களே உருவாக்குகிறார்கள்; ஆனால் அந்த வரலாற்றை அவர்கள் விரும்புவதைப் போல உருவாக்க முடிவதில்லை; தாங்கள் தீர்மானித்த சூழ்நிலைமைகளின் படி அதை உருவாக்க முடிவதில்லை; ஏற்கனவே இருக்கும் சூழ்நிலைமைகளின் அடிப்படையிலும், கடந்த காலத்திலிருந்து பெறப்பட்ட அனுபவங்களின் அடிப்படையிலுமே வரலாற்றை உருவாக்குகிறார்கள்” என்று இந்த நூலில் குறிப்பிடுகிறார் மார்க்ஸ்.
லூயிஸ் நெப்போலியன் போனபார்ட், ஒட்டுமொத்த அதிகாரத்தையும் தனது கைகளில் கொண்டு வரத் துடித்தான். அதற்கு ஏற்றாற் போல் விவசாய வர்க்கத்தினரைக் கொண்டு வாய்ப்புகளை அமைத்துக் கொண்டான். அதே நேரத்தில் தனது ஆட்சிக் காலத்தில் அரசு என்ற கட்டமைப்பை ஆளும் வர்க்கத்தின் அடக்குமுறைக் கருவியாக இன்னும் வலுப்படுத்தினான்.
மன்னராட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பிறகு, ஏற்கெனவே நிலக்குவியல் கொண்ட பெரும் நிலப்பிரபுக்கள் படிப்படியாக அந்த நிலக்குவியலை பணம் குவிக்கும் தொழிற்சாலைகளாக மாற்றினார்கள். நிலப்பிரபுத்துவம் என்ற கட்டமைப்பு உடைந்தது. அதுவரையிலும் ஆங்காங்கே அதிகாரத்தை கையில் வைத்திருந்த நிலப்பிரபுக்களிடம் அரசாங்கத்தின் அதிகாரம் ஒப்படைக்கப்பட்டது. நிலப்பிரபுக்களின் சேவகர்களாக இருந்தவர்கள் ஊதியம் பெறும் அதிகாரிகளாக மாற்றப்பட்டார்கள். மையப்படுத்தப்பட்ட அதிகாரமாக அரசு என்பது உருவாக்கப்பட்டது. அந்த அரசு, நிலப்பிரபுக்களாக இருந்து, பெருமுதலாளிகளாக மாறிய ஆளும் வர்க்கத்தினரின் அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்கிற கட்டமைப்பாக மாபெரும் வளர்ச்சி பெற்றது. எதிர்ப்போரை ஒடுக்குகிற சகலவிதமான அதிகாரங்களோடு வலம் வந்தாலும், அந்த அரசு ஆளும் வர்க்கத்தின் தேவைகளுக்காக பள்ளிக் கூடங்கள் கட்டியது, பாலங்கள் அமைத்தது, இருப்புப் பாதை போட்டது, நாடாளுமன்ற ஜனநாயகத்தை வலுப்படுத்துவதாகக் கூறியது.
இப்படியாக ஏற்கனவே இருந்த கட்டமைப்பை இன்னும் சீர்திருத்தி புதியதொரு கட்டமைப்பாக மாற்றி அமைத்தது.
“அனைத்துப் புரட்சிகளுமே அரசு என்ற இந்த மாபெரும் இயந்திரத்தை உடைத்து நொறுக்குவது இல்லை; மாறாக, அந்த இயந்திரத்தை ஆளும் வர்க்கத்திற்கு ஏற்ப இன்னும் சரியானதாக மாற்றி அமைக்கும்” என்று மார்க்ஸ் மிக நுணுக்கமாக குறிப்பிடுகிறார்.
இத்தகைய அரசுக் கட்டமைப்பைத்தான் லூயிஸ் நெப்போலியன் போனபார்ட், பின்னாளில் முற்றாக தனது கையில் எடுத்துக் கொண்டு சர்வாதிகாரியானான்.
6
இந்த நூலின் மூன்றாவது பதிப்பு 1885ம் ஆண்டு வெளியிடப்பட்டது. மார்க்சின் உற்ற தோழரும் மனிதகுலத்தின் மகத்தான மேதையுமான பிரடெரிக் ஏங்கெல்ஸ் அந்தப் பதிப்புக்கு ஒரு முகவுரை எழுதியிருக்கிறார். அதில், ‘லூயிஸ் போனபார்ட்டின் 18வது புருமையர்’ என்ற இந்த நூல் மார்க்சால் வெளியிடப்பட்டு 33 ஆண்டுகள் ஆனபிறகும் இன்றைக்கும் அப்படியே பொருந்துகிறது என்று ஏங்கெல்ஸ் குறிப்பிட்டிருக்கிறார்.
அன்றைய பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய ஆட்சிக்காலத்தை குறிப்பிட்டு அப்படி எழுதினார் ஏங்கெல்ஸ்.
18வது புருமையர் நூல் எழுதப்பட்டு இன்றைக்கு 167 ஆண்டுகள் ஆகின்றன. பிரெஞ்சுக் குடியரசு உதயமான வரலாற்றையும் அது முதலாம் நெப்போலியன் மற்றும் மூன்றாம் நெப்போலியானால் சர்வாதிகார ஆட்சியாக மாற்றப்பட்ட வரலாற்றையும் அந்த நூல் விளக்குகிறது. அது அப்படியே இன்றைக்கும் பொருந்துகிறது.
No comments:
Post a Comment