MGR , PHILANTHROPIC ,HELPER
BORN 1916 JANUARY 11
வண்டுக்கு வாழ்வளித்த எம்.ஜி.ஆர்..!
பழந்தமிழ் இலக்கியங்களில், தலையேழு வள்ளல்கள் இடையேழு வள்ளல்கள் மற்றும் கடையேழு வள்ளல்கள் என்று படித்திருக்கிறோம். அவர்களுள், கடையேழு வள்ளல்களில் ஒருவரான பாரிவள்ளல், கொம்பின்றித் தவித்த முல்லைக்கொடிக்கு வேலையாளிடம் சொல்லி ஒரு பந்தல் போடச் சொல்லாமல், உடனே தன் தேரை அங்கே நிறுத்தி, அந்த முல்லைக்கொடியை அதில் படர விட்டுவிட்டுத்தான் நடந்தே இல்லம் வந்து சேர்ந்தான் என்று படித்திருக்கிறோம். அதுபோல, துன்பப்படுவோரைப் பார்த்தவுடன், அவர்களுக்கு உடனே உதவுவது எம்.ஜி.ஆரின் சிறந்த பண்பாகும் . எம்.ஜி.ஆர், தானே வலியப் போய் உதவிகள் செய்வார் என்பதால், திருமுருக கிருபானந்த வாரியார் இவருக்கு பொன்மனச் செம்மல் என்று பட்டம் வழங்கினார். எம். ஜி. ஆர் வலியப் போய் உதவியதற்குப் பல சான்றுகளைக் காட்டலாம். இந்த ஓர் அத்தியாயம் மட்டுமே ஒரு நூலாக விரிவடையும் என்றாலும், சில சான்றுகளை மட்டும் இங்கு காண்போம்.
வண்டுக்கு வாழ்வளித்த எம்.ஜி.ஆர்
மனிதர்களுக்கு உதவியதைப் பார்ப்பதற்கு முன், வண்டுக்கு உதவிய ஒரு நிகழ்ச்சியை அறிந்துகொள்ளலாம். ஒருநாள் தேவர் படத்தின் ஷூட்டிங் நடந்துகொண்டிருந்தபோது, மேக்கப் அறையிலிருந்து எம்.ஜி.ஆர் வெகு நேரமாக வெளியே வரவில்லை. தேவர் பொறுத்துப் பொறுத்துப் பார்த்துவிட்டு, நேரே எம்.ஜி.ஆரைத் தேடிப்போய்விட்டார். அங்கே, எம்.ஜி.ஆர், பாத்ரூமுக்குள் இருந்தார். வெகு நேரம் காத்திருந்துவிட்டு, பின்பு கதவைத் தட்டிவிட்டார். சிறிது நேரம் கழித்து எம்.ஜி.ஆர் சிரித்தபடி ஏதோ சாதித்துவிட்டதைப்போல வெளியே வந்தார். தேவரைப் பார்த்து, “ஒரு வண்டு தண்ணிக்குள்ள விழுந்துகிடந்தது. எவ்வளவோ முயற்சிபண்ணியும் அதை வெளியே கொண்டுவர முடியல. கடைசியில் கையைவிட்டு எடுத்து வெளியில் விட்டுட்டேன். பாவம்ண்ணே அது. இப்பப் பறந்துபோயிருச்சு என்றார். தேவர் நொந்துகொண்டார். எத்தனை பேர் அங்கே காத்துக்கொண்டிருக்கிறார்கள். இவர் வண்டைப் பிடித்து வெளியே விட்டேன் என்கிறார்’’ அவர் ஒன்றும் சொல்லவில்லை. போய்விட்டார். இதுதான் மற்றவருக்கும் எம்.ஜி.ஆருக்கும் உள்ள வேறுபாடு. எம்.ஜி.ஆருக்கு அந்த வண்டு சாகக் கூடாது என்பது முக்கியமாக இருந்தது.
குதிரைவண்டிக்காரரின் துயர் துடைத்த எம்.ஜி.ஆர்
எம்.ஜி.ஆர், ஒரு நாள் இரவில் காரில் வந்துகொண்டிருந்தபோது, ஓர் இடத்தில் 10 பேர் கூடி நின்றனர். அங்கு, அழுகைச் சத்தமும் கேட்டது. உடனே என்ன நடந்தது என்று போய் பார்த்துவிட்டு வா என தன் உதவியாளரை அனுப்பினார். அவர் வந்து, ஒரு குதிரை செத்துவிட்டது. குதிரைவண்டிக்காரரின் மனைவி அழுதுகொண்டிருக்கிறாள் என்றார். உடனே, எம்.ஜி.ஆர் அந்தக் குதிரைவண்டிக்காரரிடம் புதுக் குதிரை வாங்க எவ்வளவு பணம் வேண்டும் என்று கேட்டு, அதற்குப் பணம் கொடுத்தார். அவர், குதிரை வாங்கி வண்டியில் பூட்டி ஓடவைப்பது வரை அவர்களுக்குச் சாப்பாட்டுக்குப் பணம் வேண்டுமே, அதற்கும் தனியாகப் பணம் கொடுத்தார். குதிரைவண்டிக்காரர் புதுக் குதிரை வாங்கியதும் வண்டியில் பூட்டிக்கொண்டு வந்து, எம்.ஜி.ஆரிடம் காட்டிவிட்டுப் போனார்.
காலில் காயம் பட்ட ஊழியருக்கு உதவி
ஒரு நாள், படப்பிடிப்பு தளத்தில் ஓர் ஊழியர் காலை நொண்டியபடி வேலைபார்த்துக்கொண்டிருந்ததை எம்.ஜி.ஆர் பார்த்துவிட்டார். அவரை அழைத்து, அவருக்கு சிகிச்சைக்குப் பணம் கொடுத்து, ‘கால் குணமடையும்வரை வேலைக்கு வரவேண்டாம்' என்று கூறி அனுப்பினார். அப்போது அவர் அருகில் இருந்தவர்களிடம், “எனக்கு வசதி இருந்ததால் என் கால் முறிந்தபோது நல்ல சிகிச்சைபெற்று குணமானேன். பாவம் அவர் வசதி இல்லாத காரணத்தால்தானே இவ்வாறு காலில் கட்டோடு வேலைக்கு வந்துள்ளார். அவருக்கு நாம்தானே உதவ வேண்டும்’’ என்றார். ஏழை எளியோருக்கு உதவுவதை எம்.ஜி.ஆர் தன் கடமை என்று நினைத்ததால் மட்டுமே அவருக்கு இப்படி வலியச் சென்று உதவும் மனமும் குணமும் அமைந்தது.
கேமராக்காரருக்குக் கேட்காமல் அளித்த உதவி
தினமும் எம்.ஜி.ஆரின் படப்பிடிப்பு முடிந்ததும், ஸ்டில்ஸ் போட்டோ எடுத்துவந்து கொடுக்க புகைப்படக்காரர்கள் படப்பிடிப்புத் தளத்திலேயே இருப்பார். அந்தப் படங்களைப் பார்த்து விக், மேக்கப், உடை ஆகியன சரியாக இருந்தால் மட்டுமே படப்பிடிப்பைத் தொடர்வார்கள். காலையில் எடுத்த படங்கள் இரண்டு மூன்று மணியளவில் தளத்துக்கு வந்துவிடும். ஒரு நாள், நாகராஜராவின் அக்காள் மகன் சங்கர் ராவ், அந்தப் பணியில் ஈடுபட்டிருந்தார். திடீரென எம்.ஜி.ஆரின் உதவியாளர் அவரை வந்து தளத்திலிருந்து தனியறைக்கு அழைத்துக்கொண்டுபோனார். அங்கு, எம்.ஜி.ஆரின் மருத்துவர் பி.ஆர்.எஸ் இருந்தார். சங்கருக்கு ஒன்றும் புரியவில்லை. டாக்டர் சங்கரின் உடலைப் பரிசோதித்தார். சங்கருக்கு ஹெர்னியா இருப்பதால், உடனே அறுவைசிகிச்சை செய்ய வேண்டும் என்றார் எம்.ஜி.ஆரிடம். அதற்கு எம்.ஜி.ஆர், சரி ஏற்பாடுசெய்யுங்கள் சிகிச்சைக்குவேண்டிய முழுச்செலவையும் நான் ஏற்றுக்கொள்கிறேன் என்றார். சங்கர் பயந்துவிட்டார். எம்.ஜி.ஆர், அவர் மாமாவிடமும் விஷயத்தை எடுத்துச்சொன்னார். சிகிச்சை முடிந்து சங்கர் நலம் பெற்றார். எம்.ஜி.ஆர் மருத்துவமனையில் வந்து சங்கரைப் பார்த்துச்சென்றார்.
சங்கர், செட்டில் நின்றுகொண்டிருந்தபோது, அவரைக் கவனித்த எம்.ஜி.ஆர், அவர் ஏதோ வலியால் அவதிப்படுவதைப் புரிந்துகொண்டார். சங்கரின் முகபாவத்தைவைத்து வலியின் தீவிரத்தை எம்.ஜி.ஆரால் உணர முடிந்தது. இவனிடம் கேட்டால் ஏதாவது காரணம் கூறுவான் என்று அவர் உடனே தன் சொந்த மருத்துவரை வரவழைத்துப் பரிசோதிக்கும்படிக் கூறினார். சங்கருக்கு வலி மற்றும் நோயிலிருந்து நிரந்தர நிவாரணம் கிடைத்தது.
நடன இயக்குநருக்கு பாக்கி கிடைத்தது
எம்.ஜி.ஆர் படப்பிடிப்பில் இருக்கும்போது, சுற்றி நடக்கும் விஷயங்களைக் கவனித்துக்கொண்டே இருப்பார். இதனால்தான் வெளிப்புறப் படப்பிடிப்பின்போது லதா (மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்), சரோஜாதேவி (அன்பே வா), நம்பியார் (ஆயிரத்தில் ஒருவன்), மனோகர் (அடிமைப்பெண்), வீரப்பா (ஜெனோவா) போன்றோருக்கு ஆபத்து ஏற்பட்டபோது, எம்.ஜி.ஆரால் அவர்களைக் காப்பாற்ற முடிந்தது. எம்.ஜி. ஆரின் இந்தப் பண்புகுறித்து டான்ஸ் மாஸ்டர் சுந்தரம் ஒரு பேட்டியில் தெரிவித்தார். ஒருநாள், டான்ஸ் மாஸ்டர் சுந்தரம் முகம் வாடிப்போய் இருப்பதைப் பார்த்த எம்.ஜி.ஆர், உடனே அவரைத் தனியாக அழைத்து காரணத்தைக் கேட்டார். அவருக்கு மைசூரில் டான்ஸ் ஷூட் செய்ததற்குரிய சம்பள பாக்கி இன்னும் வரவில்லை என்பதை அறிந்ததும், தயாரிப்பாளரிடம் சொல்லி உடனே சம்பளத்தைப் பெற்றுத் தந்தார். 'அப்போதெல்லாம், மாதத்துக்கு ஐந்து பாடல்கள்தான் வரும். அதற்கும் சம்பளம் வராமல் இருந்துவிட்டால், குடும்பம் நடத்துவது கஷ்டம். இதை உணர்ந்த எம்.ஜி.ஆர், வாடிய என் முகத்தைப் பார்த்தே உதவிவிட்டார்' என சுந்தரம் தன் பேட்டியில் கூறினார்.
ஸ்டன்ட் மாஸ்டர் குழுவிற்கு வாழ்வளித்தல்
பலராம் என்றொரு ஸ்டன்ட் மாஸ்டர், தன் குழுவினருடன் சினிமாவில் கோலோச்சி வந்தார். அந்தக் குழுவினர், படங்களில் நடனமும் ஆடுவார்கள், சண்டையும் போடுவார்கள். ஒரு நாள், பலராம் மாஸ்டர் காலமாகிவிட்டார். துக்கம் விசாரிக்க வந்த எம்.ஜி.ஆர், தாயிழந்த பிள்ளைகள் போல அங்கு நின்றுகொண்டிருந்த மாஸ்டரின் மாணவர்களைப் பார்த்தார். அவர்களைத் தன்னிடம் வந்து சேர்ந்துவிடுமாறு அழைத்தார். மறுவாழ்வு கிடைத்த அவர்கள், அகமகிழ்ந்தனர். அப்படி வந்தவர்கள், கடைசி வரை எம்.ஜி.ஆருடனேயே இருந்தனர். எம்.ஜி. ஆர் அரசியலுக்கு வந்த பின்பும் அவருடன் மெய்க்காப்பாளர்களாகத் தொடர்ந்தனர். இவர்களில் யாரும் எம்.ஜி.ஆரிடம் வந்து உதவி கேட்கவில்லை. ஆனால், பார்த்த மாத்திரத்திலேயே அவர்களின் அனாதரவான நிலையை உணர்ந்து, அவர்களைத் தன்னுடையவர்களாக எம்.ஜி.ஆர் ஏற்றுக்கொண்டார்.
எம்.ஜி.ஆர், வடபழனியில் ஓர் இடம் வாங்கி, அதை ஸ்டன்ட் மாஸ்டர்கள் பயிற்சிபெறுவதற்காகக் கொடுத்தார். பின்பு அவர் முதல்வரானதும், அவர்களுக்குத் திருமங்கலத்தில் 48 வீடுகள் கட்டிக்கொடுத்து, அவற்றில் 47ஐ குடியிருக்கவும் ஒன்றை மட்டும் அலுவலகமாகப் பயன்படுத்தும்படியும் கூறினார். ஆனால், திருமங்கலம் அவர்களின் பணித்தளமான கோடம்பாக்கத்திலிருந்து வெகு தொலைவில் இருப்பதால், வேண்டாம் என்று மறுத்துவிட்டனர். அவர் காலத்தில்தான் ஸ்டன்ட் மாஸ்டர்களுக்கென்று தனிச் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது.
வெயிலில் நடந்தவர்களுக்குச் செருப்பு
அண்ணா, ஒரு கட்டுரையில் காலில் செருப்புகூட இல்லாமல் நடந்துபோகும் ஏழை, தன்னருகே காரில் பறந்துபோகின்றவனை நின்று திரும்பிப்பார்த்துச் செல்வான். ஆனால் காரில் போகிறவனோ, அந்த ஏழையைப் பற்றி கனவிலும் நினைக்க மாட்டான் என்பார். ஆனால் எம்.ஜி.ஆர், அதற்கு விதிவிலக்கு. அவர், எப்போது காரில் போனாலும் படப்பிடிப்பில் இருந்தாலும் அவர் கண்ணில் படும் கஷ்டங்களைப் பற்றி கவலைப்படுவார். அதற்கு தன்னால் முடிந்த அளவுக்குப் பரிகாரம் தேடவும் முயல்வார். ஒரு நாள் கர்நாடக முதலமைச்சரைச் சந்தித்துவிட்டு, அவர் மைசூரிலிருந்து மனைவி ஜானகி அம்மையார் மற்றும் ஜானகி அம்மையாரின் தம்பி மகளோடும் சென்னை திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது, சாலை ஓரத்தில் ஒரு பாட்டியும் இளம்பெண்ணும் தலையில் விறகுச் சுமையுடன் கால் சூடு பொறுக்காமல் நின்று நின்று நடந்துசென்றனர். உடனே எம்.ஜி.ஆர், தன்னுடன் காரில் பயணித்த இருவரிடமும் உங்கள் செருப்பைக் கழற்றுங்கள் பாவம் அந்தப் பாட்டி வெயிலில் நடக்க முடியாமல் கஷ்டப்படுகிறார் என்றார். உடனே ஜானகியின் செருப்பு பாட்டிக்கும் ஜானகியின் தம்பி மகள் செருப்பு பாட்டியுடன் வந்த இளம்பெண்ணுக்கும் வழங்கப்பட்டன. அவர்கள், அதன் பின்பு நிம்மதியாக நடந்து சென்றனர். அந்தச் சாலையில் எத்தனை பேர் காரில் போயிருப்பார்கள். யாருக்காவது இந்தச் சிந்தனை வந்ததா?
இளநீர்க்காரருக்கு மருத்துவ உதவி
எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த நேரம். அவர் கோட்டைக்குப் போகும்போது, அவ்வழியே தினமும் ஒருவர் கையில் இளநீர் வைத்துக்கொண்டு அதை நீட்டியபடியே நிற்பார். எம்.ஜி.ஆரின் கார் நிற்காது. ஒரு நாள் எம்.ஜி.ஆர், இங்கு ஒருவர் இளநீர் வைத்தபடி நிற்பாரே அவரைச் சில நாள்களாகக் காணோமே, அவருக்கு என்னவாயிற்று என்று பார்த்துச்சொல்லுங்கள் என்றார். அந்த இளநீர்க்காரர் விஷயம் அப்போதுதான் அவர் உதவியாளருக்குத் தெரிந்தது. விசாரித்துப் பார்த்ததில், இளநீர்க்காரருக்கு மஞ்சள் காமாலை வந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது தெரிந்தது. எம்.ஜி.ஆர், அவருக்கு நல்ல மருத்துவ சிகிச்சை கிடைக்கும்படிச் செய்து, அவருக்கு மேலும் பல உதவிகள் செய்தார்.
போலீஸ்காரருக்கு லிஃப்ட் கொடுத்த எம்.ஜி.ஆர்
எம்.ஜி.ஆர் காரில் வரும்போது, வழியில் ஏதாவது கார் நின்றிருந்தால் உடனே தன் ஆட்களை அனுப்பி என்ன பிரச்னை என்று கேட்டு அவர்களுக்கு உதவுவார். ஒரு நாள், வழியில் ஒரு போலீஸ்காரர் பேருந்துக்காக நிற்பதைப் பார்த்து, அவரைத் தன் காரில் வரும்படி கூறினார். ஆனால், அந்த போலீஸ்காரரோ, தனக்கு அடுத்தவரிடம் தேவையில்லாமல் உதவியோ சலுகையோ பெறுவது பிடிக்காது. தானொரு நேர்மையான போலீஸ்காரர் என்றார். எம்.ஜி.ஆர் திரும்பவும் அவரிடம், இந்த வழியே இனி பஸ் கிடையாது. நீங்கள் காரில் வாருங்கள், அடுத்து வரும் பஸ்ஸ்டாப்பில் இறங்கிக்கொள்ளுங்கள். பஸ் வராவிட்டால், காலையில் டூட்டிக்குப் போக முடியாதே என்றார். போலீஸ்காரருக்கு காரில் வர மனமேயில்லை. இருந்தாலும் இப்போதைக்கு வேறு வழியில்லையே என்று காரில் ஏறி உம்மென்று உட்கார்ந்துகொண்டார்.
எம்.ஜி.ஆருடன் பேச விரும்பாதவர் போல நடந்துகொண்டார். ஆனால் எம்.ஜி.ஆர், தனக்குக் கடமை உணர்ச்சியுள்ள கண்டிப்பான போலீஸ்காரர்களை மிகவும் பிடிக்கும் என்று சொல்லி, அவரது ஸ்டேஷன் மற்றும் டூட்டி விவரங்களை எல்லாம் மெள்ள விசாரித்தார். மன இறுக்கத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விடுபட்ட போலீஸ்காரர், எம்.ஜி.ஆர் தனக்கு உதவும் நோக்கத்துடன்தன் காரை நிறுத்தி தன்னை ஏற்றிக்கொண்டார் என்பதைப் புரிந்துகொண்டு, பின்பு சகஜமாகப் பேசினார். விரைவில் இருவரும் நல்ல நண்பர்களாகிவிட்டனர். அவர் பின்னர், தன் இரண்டு மகள்களின் திருமணத்துக்கும் எம்.ஜி.ஆரை அழைத்தார். எம்.ஜி.ஆரும் நேரில் சென்று வாழ்த்தினார்.
வேற்று மாநிலங்களில் உதவி
எம்.ஜி.ஆர், 'பணம் படைத்தவன்' படப்பிடிப்புக்கு கொல்கத்தா போயிருந்தபோது அங்கு வாழ்ந்த தமிழர்களுக்கு நிதி உதவி அளித்தார். 'அடிமைப்பெண்' படப்பிடிப்புக்கு ராஜஸ்தான் போயிருந்தபோது, முதல் நாளே அங்கு நடந்த தீவிபத்துக்கு நிவாரணமாக 50,000 உதவினார். 'அன்பே வா' மற்றும் 'இதய வீணை' படப்பிடிப்புகளுக்கு காஷ்மீர் போனபோது, உடன் வந்த நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு ஸ்வெட்டர், சாக்ஸ் மற்றும் மஃப்ளர் வாங்கிக் கொடுத்தார். இதை, டான்ஸ் மாஸ்டர் புலியூர் சரோஜா தனது பேட்டியில் தெரிவித்தார்.
ரிக்ஷாக்காரருக்கு மழைக்கோட்டு
1964-ம் வருடம். அப்போது காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. நல்ல மழை. எம்.ஜி.ஆரின் கார், கோடம்பாக்கம் ரயில்வே கேட்டில் நிற்கிறது. ஒரு ரிக்ஷா ஓட்டி, வேகமாகத் தன் வண்டி நனையாமல் இருக்க பாடுபடுகிறார். வண்டி சீட் நனைந்துவிட்டால், யாரும் வண்டியில் ஏற மாட்டார்களே என்ற கவலை அவருக்கு. தான் மழையில் நனைந்தாலும் வண்டி நனையக் கூடாது என்று கவலைப்படும் அந்தத் தொழிலாளிக்காக எம்.ஜி.ஆர் கவலைப்பட்டார். அதனால்தான் அவர், 'ஏழைப் பங்காளன் எம். ஜி.ஆர்' என்று வாழ்த்தப்படுகிறார்.
எம்.ஜி.ஆர், உடனே சென்னையில் எத்தனை ரிக்ஷாக்கார்கள் இருக்கிறார்கள் என்ற விவரம் கேட்டறிகிறார். மொத்தம் 3000 என்கின்றனர். இவர், தன் தையல்காரரிடம் சொல்லி ஒரே வாரத்துக்குள் 5000 மழைக்கோட்டுகளைத் தைக்கும்படி உத்தரவிடுகிறார். எத்தனை தையல்காரர் வேண்டும் என்றாலும் வாடகைக்கு வைத்துக்கொள்ளுங்கள் என்கிறார். தைத்து முடித்ததும், அறிஞர் அண்ணாவை அழைத்து, அவர் கையால் ரிக்ஷாக்காரர்களுக்கு மழைக்கோட்டுகளை வழங்கும்படிச் செய்தார். மீதி 2000 கோட்டுகள் மதுரை, திருச்சி போன்ற ஊர்களில் வாழ்ந்த ரிக்ஷாக்காரர்களுக்கு வழங்கப்பட்டன.
சாலைப் பணியாளருக்குக் காலுறை
கணவன்' படத்தில் ஜெயலலிதாவும் எம்.ஜி.ஆரும் தார்ச்சாலை போடும் பணியாளர்களாக நடித்திருப்பார்கள். அப்போது, ஜெயலலிதா காலில் தார் கற்கள் ஒட்டிக்கொள்ளும். அவற்றை எம்.ஜி.ஆர் மெள்ள மெள்ள ஒவ்வொன்றாக எடுத்துவிட்டு, தன் கால் செருப்பைக் கொடுத்து போட்டுக்கொள்ளச் சொல்வார். அவர், தார்ச்சாலைமீது சமப்படுத்தியபடி வரும் புல்டோஸரோடு அதன் சக்கரத்தில் தண்ணீர் ஊற்றியபடி ஓடி வருவார். புதிதாகப் போடப்பட்ட தார், காலில் ஒட்டாதபடி அப்போது காலில் சாக்குத்துணி கட்டியிருப்பார். இந்த நிலை பிறகு மாறிவிட்டது. எம்.ஜி.ஆர், சாலைப் பணியாளருக்கு ரப்பர் கால் உறைகள் வழங்கி, அவர்களின் கண்ணீர் துடைத்தார்.
No comments:
Post a Comment