VISWANATHA DASS, FREEDOM FIGHTER
DIED 1940 DECEMBER 31
விஸ்வநாத தாஸ் (1886-1940) இவர் ஒரு இந்திய விடுதலைப் போராட்ட வீரரும் நாடக கலைஞரும் ஆவார்.[2]
சிவகாசியில் 1886-ம் ஆண்டு ஜூன் 16-ம் தேதி சுப்ரமணியம் - ஞானாம்பாள் தம்பதிக்கு மூத்த மகனாக பிறந்த விஸ்வநாத தாஸ், குரல் வளமும், கலை ஆர்வமும் கொண்டிருந்ததால், மேடை நாடகத்தின்பால் ஈர்க்கப்பட்டார். ஆரம்ப காலங்களில் புராண நாடகங்களில் பக்திப்பாடல்களை மட்டுமே பாடி வந்த இவர் தூத்துக்குடியில் அண்ணல் காந்தியடிகளைச் சந்தித்த பின்னர் காங்கிரஸ் பேரியக்கத்தில் இணைந்தார். தெய்வ பக்தியோடு தேசபக்தியும் ஓங்கும் பாடல்களை இடை இடையே பாடினார்.
"கதர்கப்பல் தோணுதே',
"கரும்புத்தோட்டத்தில் போலீஸ் புலிக்கூட்டம், நம் மீது போட்டு வருது கண்ணோட்டம்”
என்பனவும் இவர் மேடையில் பாடிய தேசப்பற்றுப் பாடல்கள்.
"வெள்ளைக்கொக்கு பறக்குதடி பாப்பா.... அதை கோபமின்றி கூப்பிடடி பாப்பா என்ற பாடல் வரிகள் தியாகி விசுவநாததாசை என்றும் நினைவு படுத்துபவை. அவரது பாடல்கள், காங்கிரஸ் கட்சியின் விடுதலை போராட்டங்களில் பரவலாக பயன்படுத்தப்பட்டன. ஜாலியன் வாலாபாக் சம்பவத்தையடுத்து அவர் எழுதிய,
‘பஞ்சாப் படுகொலை பாரில் கொடியது’ என்ற பாடல் விடுதலை போராட்டத்தில் முக்கிய இடம் பிடித்தது. புராண நாடகங்களின் வாயிலாக விடுதலை அரசியலை புகுத்தியது இவரது சிறப்பம்சம் என்று ஆய்வாளர்களால் பாராட்டப்படுகிறது.
இவரின் நாடகங்களுக்கு அரசு விதித்த தடையை மீறி சிறைத் தண்டனை பெற்றவர். ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்துகொண்டு சிறைவாசம் சென்றவர். இவர் திருமங்கலம் வட்ட காங்கிரஸ் கமிட்டியிலும், மதுரை ஜில்லா போர்டிலும், காங்கிரஸின் சார்பில் உறுப்பினராக இருந்தவர். வேடம் தரிப்பதற்கான உடைகளையும், கதர்த் துணியிலேயே தயாரித்து அணிந்து நடந்தவர்.
மறைவு[மூலத்தைத் தொகு]
1940-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி,தனது 54-வது வயதில்,முருகன் வேடத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போது மேடையிலேயே விஸ்வநாத தாஸ் உயிர்நீத்தார். மயில் மீதமர்ந்த முருக வேடத்திலேயே இவரது இறுதி ஊர்வலம் நடைபெற்றது.[3]
சுதந்திர போராட்ட தியாகியும்,மேடை நாடகக் கலைஞருமான எஸ்.எஸ்.விஸ்வநாத தாஸின் பிறந்த தினம் சூன் 16 அன்று கொண்டாடப்படுகிறது.[4] [5]
நினைவு இல்லம்[மூலத்தைத் தொகு]
தமிழ்நாடு அரசு தியாகி விஸ்வநாததாஸ் வாழ்ந்த மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள இல்லத்தை தியாகி விஸ்வநாததாஸ் நினைவு இல்லம் - நூலகம் அமைத்துள்ளது. இங்கு தியாகி விஸ்வநாததாஸ் அவர்களின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. நூலகம் மற்றும் கண்காட்சிக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சுமார் 1000 பேர் அமரக்கூடிய அளவில் திருமண மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.
விஸ்வநாத தாஸ் (1886-1940) விடுதலைப் போராட்ட வீரரும் நாடக கலைஞரும்
எழுத்தாளர்: முத்தையா வெள்ளையன்
இந்தியாவில் சமூகம் சாதீய ரீதியாக தொழில்வழி சமூகமாகப் பிரிந்து கிடக்கின்றது.
காலனி ஆட்சிக்காலத்தில் வாழ்க்கைமுறை, மதம், கல்வி, வைத்தியம், கூத்து எல்லாமே தாக்குதலுக்கு உட்பட்டு, காலனித்துவ ஆட்சிக்கேற்ற உருமாற்றம் ஏற்படுகின்றன. காலனித்துவ சிந்தனைகளை உள் வாங்கி, அந்த வாழ்க்கை முறையை வாழ்ந்துகொண்டு, காலனித்துவ ஆட்சி முறையை மாற்றவும் போராடி வந்தார்கள்.
கூத்து வடிவங்கள் பரவலாக தமிழகத்தில் அறிமுகமாகி இருந்தாலும் காலனித்துவத்தின் மூலமாக ஸ்பெஷல் நாடக மரபுமுறை நமக்கு அறிமுகமாகியது என்ற கருத்து நாடக ஆய்வாளர்களிடையே உண்டு.
தமிழ் நாடக வரலாற்றைப் பார்க்கும்போது 1891 ஆம் ஆண்டில் நாடகம் பல முக்கியமான நிகழ்வுகளைக் கொண்டதாக அமைந்துள்ளது. சீர்கெட்டு சமூக மதிப்பின்றி இருந்த தமிழ் நாடக உலகம் சங்கரதாஸ் சுவாமிகள் வருகைக்குப் பின் சாமானிய மக்களுக்கான நாடக அரங்காக உருமாறியது. அதே நேரத்தில் சென்னையில் பம்மல் சம்பந்த முதலியார் சுகுணவிலாச சபையினை தோற்றுவித்து, ஷேக்ஸ்பியரின் நாடகங்களையும், சில வடமொழி நாடகங்களையும் தமிழாக்கம் செய்தும், "மனோகரா' போன்ற சொந்த படைப்புகளையும் அரங்கேற்றினார். அன்றைய சமூகத்தில் மதிப்பு பெற்ற, செல்வாக்கு பெற்ற அறிஞர்கள் நாடகத்தின் பக்கம் திரும்பினர். 19ஆம் நூற்றாண்டு இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டு முற்பகுதியிலும் ஏராளமான நாடகக் குழுக்கள் தோன்றின.
இதன் விளைவாக தமிழ் நாடகத்தில் புதிய சிந்தனைகளும், புதிய வடிவங்களும், புதிய உத்திமுறைகளும் பல்வேறு நாடகக் கலைஞர்களால் வரத்துவங்கின. இந்தக் காலத்தில். மரபான கூத்து நடிப்புகளை உள்வாங்கி மேடையில் நாடகங்களை நிகழ்த்தினர். நிகழ்த்துகளுக்கான இடம் வேறுபட்டிருந்தாலும் நிகழ்தலுக்கான அடிப்படை, மரபை ஒட்டியே அமைந்தன.
எந்த ஒரு துறையிலும் செயல்பட்ட செயல்படுகிற மனிதர்களது பங்களிப்புகள் அந்தந்தச் சமூகத்தில் நிலவிய அந்த துறைகளின் இருத்தல் சார்ந்தும் அவர்களது வரலாறு சார்ந்துமே தீர்மானிக்கப்பட்டன.
சாதீய ரீதியாக சில ஆண்களும், அந்த குடும்பத்தைச் சேர்ந்த பெண்களும் மருத்துவ தொழிலைச் செய்து வந்தனர். மக்களுக்கு வந்த சிறு வியாதிகள் முதல் பெரு வியாதிகள் வரை, மகப்பேறு போன்ற மருத்துவத்தை அவர்கள் செய்து வந்தனர். ஆனால் இவர்களை சமூகம் தீண்டபடாதவர்களாக ஒதுக்கிவைத்தது. அதே நேரம் மற்ற பட்டியல் சாதிகளை போல் இவர்கள் முற்றிலுமாக ஒதுக்க முடியாதவர்களாகவே இருந்தனர்.
முன்பு மருத்துவர்கள் என்று சொல்லப்பட்டவர்கள் காலனித்துவ ஆட்சிக்குப் பின் நாவிதர்கள் என்று அழைக்கப்பட்டனர். வைத்தியம் என்ற தொழிலை விட்டு அந்த சமூகம் பின்னோக்கி பயணிக்கிறது. இது ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய விஷயம்.
பழைய இராமநாதபுரம் மாவட்டம், இன்றைய விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியில் ஞானியர் தெருவில் சுப்பிரமணியம் - ஞானம்பாள் என்ற தம்பதியருக்கு தாசரி என்பவர் மகனாக பிறந்தார். சுப்பிரமணியம் நெசவும், இசையும் தெரிந்தவராக இருந்தார்.
மதுரைக்கு அருகில் திருமங்கலத்தில் தன் பாட்டனாருடன் தாசரி வசித்து வந்தார். அந்த வயதில் தன் தோழர்களுடன் விளையாடுவது, ஆற்றுக்குச் செல்வது, தோப்புகளுக்கு செல்வது என்று நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன. திருமங்கலத்தில் ஒவ்வொரு சனிக்கிழமையும் பஜனை கோஷ்டி தெருவில் நடனம் ஆடிக்கொண்டும், பாடிக்கொண்டும் செல்வார்கள். தாசரிக்கு, இனம் புரியாமல் ஒரு ஈர்ப்பு வருகிறது. கொஞ்சம் கொஞ்சமாக பஜனை கோஷ்டியுடன் ஐக்கியமாகிறான்.
சனிக் கிழமைகளில் காலில் சலங்கையுடன், கையில் சப்ளாக் கட்டையுடன் தாசரி வந்துவிடுவான். அந்த கோஷ்டியில் மத்தளம் அடித்துக்கொண்டுவர தாளமும் தட்டிக்கொண்டு பலர் வர தாசரியின் ஆட்டம் உச்சஸ்தாயில் ஆரம்பிக்கும். அந்த ஆட்டத்தைக் கண்டு மயங்காதவர்கள் இல்லை. அந்த ஊர் பெரியவர்கள் மகிழ்ந்து வைத்த பெயர்தான் தாசரிதாஸ்.
தாஸ் என்ற பெயர் அந்தக் காலத்தில் ஓதுவார், பாடகர், கூத்துக் கலைஞர்களுக்கு ஒரு குறியீடாக இருந்தது. அப்போது எல்லாக் கலைஞர்களின் பெயருக்குப் பின்னால் தாஸ் என்ற குறியீடு இருந்தது.
திருமங்கலத்திலிருந்து சிவகாசி செல்கிறார் தாசரிதாஸ். அங்கு அவரை திண்ணைப் பள்ளியில் சேர்த்தனர். அந்தப் பள்ளியில் உள்ள மாணவர்களிடம் தாசரி பஜனைப் பாடல்களையும், கூத்துப் பாடல்களையும் பாடுவார். அங்கு கல்வி கற்பிக்க பாட சாலையில் மிகவும் சிரமமான சூழ்நிலையை உருவாக்கினார். அதனால் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். அவருடைய தந்தையார் தன் குலத்தொழிலை பார்க்குமாறு தாசரிக்குக் கூறினார். அதிலும் ஈடுபாட்டுடன் இல்லை.
சிவகாசியில் உள்ள சிறீ பத்ரகாளி அம்மன் தேர் திருவிழா நடந்தது. உற்சாக மேலீட்டால் தேரின் மேல் ஏறி தாஸ் பாடினார். அங்கு வந்த அவரின் தந்தை சுப்பிரமணியம், தன் மகனை கீழே இறங்கச் செய்து "நாமே தீண்டத்தகாதவர்கள், நீயோ தேர்மேல் ஏறி புனிதத்தை கெடுத்து விட்டாயே'' என்று அடித்தார். மீண்டும் அடிக்க ஓங்கியபோது கோவில் குருக்கள் தடுத்து சரியான பயிற்சியில் தாஸை சேர்த்துவிடச் சொன்னார். பிறகு சுப்பிரமணியம் தன் மகனை தோல் மண்டி வைத்து இருக்கும் தொந்தியப்ப நாடாரிடம் நாடகப் பயிற்சிக்காகச் சேர்த்தார். தொந்தியப்ப நாடார் அந்தக் காலத்தில் சிவாஜி கணேசனை அறிமுகப்படுத்திய பொன்னுசாமி படையாச்சி, பி.ஏ. பெருமாள் முதலியார் என்ற இருவரின் ஆற்றலை ஒரு சேரப் பெற்றவர் என்ற செய்தியும் உண்டு. இவர் தாசரிதாஸுக்கு வழி முறைகளோடு பாடவும், நாடகங்களில் நடிக்கவும் பயிற்சி அளித்தார்.
தாசரிதாஸ் நாடகக் கம்பெனிகளில் சேர்ந்து நடித்தார். பெண் வேடங்களிலும் சிறுவர் வேடங்களிலும் நடித்தார். பெண் குரல் தூர்ந்து குரலில் மரக்கட்டு ஏற்பட்டது. ஆண்குரல் கணீரென்று வந்தது. 1894 ஆம் ஆண்டு சிறந்த தொழில்முறை நடிகரானார். அப்போது தாசரிதாஸ் என்ற பெயரை விஸ்வநாததாஸ் என்று மாற்றிக் கொண்டார். இந்த நேரத்தில் பெண்கள் நாடகங்களில் நடிக்க வந்தனர். வள்ளித் திருமண நாடகத்தில், தாழ்த்தப்பட்ட சாதியில் பிறந்த விஸ்வநாததாஸ் முருகன் வேடம் அணிந்து நாடகம் நடிக்கக் கூடாது என்று சாதி இந்துக்கள் கலவரம் செய்தனர். நாடகத்தை நடத்தவிடாமல் செய்தனர். தாழ்த்தப்பட்ட சாதியில் பிறந்த விஸ்வநாத தாசுடன் நடிக்க எந்த பெண் நடிகைகளும் முன்வரவில்லை. இதை முறியடிக்க விஸ்வநாத தாசின் நாடகங்களில் ஆண் நடிகர்களே பெண் வேடம் அணிந்தனர்.
இவருடைய தந்தை, தன் மகன் நாடகத்திற்கு சென்று கூத்தாடி ஆகிவிட்டான். சவகாசம் சரியில்லை என்று வருந்தி மகனுக்கு உடனே திருமணம் செய்து வைத்தார். திருநெல்வேலியைச் சேர்ந்த சண்முகத்தாய் என்ற பெண்ணை மணமுடித்தனர். அப்போது தாசுக்கு வயது 20. சண்முகத்தாயிக்கு 15 வயது.
இந்தச் சூழ்நிலையில் பிராமண சாதியைச் சேர்ந்த முத்துலெட்சுமி அம்மையார், விஸ்வநாத தாசுடன் விரும்பி நடித்தார். அதன் பிறகு மற்ற நடிகைகள் நடிக்க ஆர்வம் கொண்டனர். முத்துலெட்சுமி அம்மையாரை அடுத்து எஸ்.ஆர்.கமலம், மதுரை ஜானகி, காந்திமதி, நெல்லை கிருஷ்ணவேணி, கே.பி.ஜானகியம்மாள் என்று பட்டியல் நீண்டது.
அக்கால நாடகங்களில் கோமாளியாக நடிப்பதிலிருந்து கதாநாயகன் வரை எல்லா யுக்திகளும் ஒரு நடிகர் பெற்று இருக்க வேண்டும். எந்தப் பாத்திரத்திற்கு நடிகர் வரவில்லையோ அந்தப் பாத்திரத்தை நடிகர்கள் ஏற்று நடிக்க வேண்டும். காலப் போக்கில்தான் பெண் நடிகர்கள் நுழைந்தனர்.
சாதீய ஆதிக்கம் பற்றி விஸ்வநாத தாஸ் கவலைப்படவில்லை என்றாலும், சாதிக்கு ஒரு மிருகபலம் உண்டென்பதை அனுபவ ரீதியாக உணரவே செய்தார்.
1925 ஆம் ஆண்டு காந்திஜி தூத்துக்குடிக்கு வருகை தந்தார். காந்திஜி முன்னிலையில் பக்க வாத்தியக்காரர்களோடு மேடையேறி நாலரைக்கட்டை சுருதியோடு "காந்தியோ பரம ஏழை சந்நியாசி' என்ற பாடலைப் பாடினார். அதை சுத்தானந்த பாரதியார் மொழி பெயர்த்து காந்திக்குச் சொன்னார். "தேச சேவைக்காக என்னுடன் பணியாற்ற வேண்டும்' என்று காந்தி விஸ்வநாத தாசுக்கு அழைப்பு விடுத்தார்.
காந்தியை சந்தித்த பிறகு நாடகக் கலைஞர்களுக்கு உரிய பிற நடைமுறைகளை உதறித் தள்ளினார். முருகன், கோவலன் என்று எந்த வேடமானாலும், அந்த வேடம் கதர் ஆடையை அணிந்திருந்தது. விஸ்வநாத தாசுடன் குழுவில் இருந்த மற்ற நடிகர்களும் இதைப் பின்பற்றினர்.
நாடகத்தில் தன் பாட்டின் வழியே சாதியைச் சாடினார். தேச விரோதிகளை தோலுரித்துக் காட்டினார். அடக்கு முறைகளைக் கண்டித்தார். குடிப்பதை எதிர்த்தார். ஒரு சராசரி நாடகக் கலைஞனாக இருந்த விஸ்வநாத தாஸ் தேசிய விடுதலை போராட்டக் கலைஞனாக உருமாறினார்.
சண்முகானந்தம் கலைக்குழு என்ற பெயரில் ஒரு நாடகக் குழுவை அமைத்துக் கொண்டு, புராண நாடகத்தில் அரசியல் பிரசாரத்தை நுழைக்க முடியும் என்று வழிகாட்டிய முதல் கலைஞர் இவரே ஆவார். இந்த பிரசார முறைக்கு பிறகு கோவலன், வள்ளித் திருமணம், அரிச்சந்திரமயான காண்டம் போன்ற நாடகங்கள் எல்லாமே நாட்டு விடுதலை முழகங்களை பிரதானமாகப் பேசின.
1936 ஆம் ஆண்டு நேரு தன் மகள் இந்திரா பிரியதர்சனியுடன் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். விஸ்வநாத தாஸின் சண்முகானந்தா கலைக்குழு அப்போது சிங்கப்பூர், மலேசியா, பர்மா, இலங்கை போன்ற நாடுகளில் புகழ் பெற்றிருந்தது. விஸ்வநாத தாஸ் தன் குழுவினருடன் இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டார். நேரு சென்ற கப்பலிலே பயணம் செய்தார். கப்பல் தலை மன்னாரை வந்தடைந்ததும், காவல் துறையினரால் முற்றுகையிடப்பட்டது. இலங்கை அரசு அவருக்கு தடை விதித்தது. விசுவநாத தாஸ் நேரில் சென்று காவல்துறையிடம் கேட்டபோது, "நீங்கள் வந்தால் கொந்தளிப்பும், குழப்பமும் உண்டாகும். வன்முறை நடக்கும். ஆகவே இலங்கை அரசு உங்களுக்கு தடைவிதித்தது'' என்று கூறினர். நேருவுக்கு அனுமதி கொடுத்து இருக்கிறீர்களே என்று கேட்டபோது, "அவர் வருவதால் எந்த பிரச்சினையும் ஏற்படப் போவதில்லை. நீங்கள் வந்தால் குழப்பமும், வன்முறையும் ஏற்படும்'' என்று சொன்னதால் விஸ்வநாத தாஸ் இந்தியா திரும்பினார்.
1919 முதல் 1945 வரை விடுதலை உணர்வுக்கு நாடகமே உரமாக இருந்தது. அந்த முறையில் (1) நேரடியாக அறிவித்தல் (2) மறைமுகமாக உணர்த்துதல் (3) பாடல் வழியாகவும் வசனம் வழியாகவும் தெரிவித்தல் என்ற மூன்று வழிகளில் நாடகக் கலைஞர்கள் விடுதலை உணர்வை வளர்த்தனர்.
வள்ளித் திருமண நாடகத்தில், கதிர்களை தின்ன வரும் பறவைகளை விரட்ட கவண் ஏறியும் ஆலோலப்பாட்டில் ஆங்கிலேய வெள்ளைக் கொக்குகளைப் பாடுவார். காதலின் வெற்றி என்ற நாடகத்தில் காதலியிடம் கதர் உடுத்துவதை வலியுறுத்தியும், அந்நிய ஆடையால் வருடந்தோறும் கோடி ரூபாய்க்கு மேல் வெளிநாட்டவருக்கு கொடுத்து வருகிறோம் என்கிற செய்தியைச் சொல்லுவார். இன்னொரு நாடகத்தில் "அடிமை முத்திரையான திவான் பகதூர் பட்டத்தை வாபஸ் வாங்கி விடுவீர்களா?'' என்ற கேள்விக்கு, "இரண்டு இலட்சம் செலவு செய்து இந்த பட்டத்தை வாங்கினேன். அடைந்த பலன் ஒன்றுமில்லை'' என்ற காட்சி வரும்.
"கொக்கு பறக்குதடி பாப்பா - நீயும்
கோபமின்றி கூப்பிடடி பாப்பா'
"கதர் கப்பல் கொடி தோணுதே', "கரும்புத் தோட்டத்திலே', "பஞ்சாப் படுகொலை பாரினில் கொடியது', "கெருவம் மிகுந்த ஜீவன்', "தாழ்த்தப்பட்ட சகோதரரை தாங்குவார் உண்டோ', போன்ற பாடல்கள் நாடகங்களில் பாட மறந்தாலும் மக்கள் பாடச் சொல்லிக் கேட்டனர். இந்தப் பாடல்களை எழுதியவர் பாஸ்கரதாஸ்.
அவருடைய நாடகத்தில் விடுதலை உணர்வுப் பாடல்களும், தீண்டாமையைப் பற்றிய பாடல்களும் பாடுவது வாடிக்கையாயிற்று. மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. நாடகத்தின் ஆரம்பத்திலேயே பாடச் சொல்லி ஆரவாரம் செய்தார்கள் மக்கள். எந்த நாடகமாக இருந்தாலும் விடுதலை உணர்வு பாடல்களை பாடாமல் இருக்க முடியவில்லை. மக்களும் விடுவதாக இல்லை. காவல் துறையின் கெடுபிடி அதிகமாகிக் கொண்டிருந்தது.
ஒரு நாடகம் நடத்திக் கொண்டு இருக்கும்போது காவல் துறையினர் கைது செய்தனர். ஆறுமாத சிறை தண்டனை. தண்டனை முடிந்ததும் வீட்டுக்குச் செல்லாமல் நேரடியாக நாடகக் கொட்டகைக்கே வந்து நாடகத்தை நடிப்பார். காவல் துறையினர் கைது வாரண்ட் கொண்டு வந்தால் "யாருக்கு வாரண்ட்?'' என்பார். "விஸ்வநாத தாசுக்கு'' என்பர் காவல் துறையினர். "நா இப்ப முருகன். முருகனுக்கு கைது வாரண்ட் இருக்கா?'' என்பார் தாஸ். கைது செய்தாலும் நாடகத்தில் உள்ள ஒப்பனையோடு கைது செய்ய வேண்டும் என்று காவல் துறையினரிடம் வலியுறுத்துவார் தாஸ்.
1932 ஆம் ஆண்டு திருநெல்வேலியில் கணபதி விலாஸ் தியேட்டரில் விஸ்வநாத தாஸ் நாடகம் நடக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. தாஸ் மேடை ஏறுவதற்கு முன்பே அவரை காவல்துறை கைது செய்ய திட்டமிட்டிருந்தது.
தாஸின் இளவல் எஸ்.எஸ்.சண்முகதாஸ் அண்ணன் விஸ்வநாத தாஸ் நாடகத்திற்கு ஆர்மோணியம் வாசிப்பார் என்று அறிவிக்கப்பட்டது. நேரம் அதிகமாவதால் விஸ்வநாத தாசின் மகன் சுப்பிரமணியதாஸ் நடிப்பார். அனைவரும் அமைதியாக இருந்து ஆதரவு தரவேண்டும் என்று அறிவித்தனர். காவல் துறையினரும் பெருமூச்சுவிட்டு நாடகத்தைப் பார்த்தனர்.
வேலன் வேடத்தில் நடித்தவரின் பேச்சும் பாடலும், தாஸின் பாடல் பேச்சு போலவே இருந்தது. தந்தையைப் போலவே தனயனும் இருக்கிறானே என்று கூட்டத்தில் அரசல் புரசலாகப் பேசிக் கொண்டனர். அவர் விஸ்வநாத தாசுதான் என்று உறுதி செய்து கொண்டபின் காவல் துறையால் கைது செய்யப்பட்டார்.
நாடகங்களை நடத்தி வரும் குத்தகைதாரர்களை காவல்துறையினர் மிரட்டியதால் தாஸை வைத்து நாடகம் நடத்தத் தயங்கினர்.
விஸ்வநாத தாஸை அடுத்து அவரது சகோதரியின் மகன் சின்னுசாமியும், தாஸின் மூத்த மகன் சுப்பிரமணிய தாசும் நாடகங்களில் பணி புரிந்தனர்.
நாடகம் முதல் நாள் என்றால் அடுத்தநாள் சிறை. சில நேரங்களில் நாடகம் நடத்தி முடித்தவுடன் மாதக் கணக்கில் சிறை என்றே அவரது வாழ்க்கை நகர்ந்து கொண்டிருந்தது.
1933-இல் திருநெல்வேலியில் தாஸின் மூத்த மகன் சுப்பிமணியதாஸ் கைது செய்யப்பட்டார். "இனி சுதந்திரப் போராட்டப் பாடல்களை பாடுவதில்லை என்றும் இதுவரையில் பாடியதற்கு மன்னிப்பு கேட்டு கடிதம் தந்தால் விடுதலை செய்வதாகவும் நீதிபதி கூறினாராம். இந்தச் செய்தியை கடலூரில் இருக்கும் தந்தை விஸ்வநாத தாசுக்கு அனுப்பினார்.
சுப்பிரமணிய தாசு மன்னிப்பு கேட்பதைவிட சிறையில் மடிவதே மேல் என்று சொன்னார் விஸ்வநாத தாஸ். இதனால் சுப்பிரமணிய தாஸ் ஓராண்டு சிறை தண்டனை பெற்றார். இரண்டாவது மகன், மருமகன், சகோதரியின் மகன் ஆகியோரும் போராட்டங்களில் பங்குகொண்டு சிறை தண்டனைப் பெற்றனர்.
இதனால் வாய்ப்புகள் குறைந்தது. வருமானம் குறைந்தது. வறுமை தாண்டவமாடியது. அந்த நிலையில் ஜனசக்தி வளர்ச்சி நிதிக்காக திண்டுக்கல்லில் ஒரு நாடகம் நடித்தார்.
19.6.1938 ஞாயிற்றுக்கிழமை அன்று திண்டுக்கல்லில் ஜனசக்தி நிதிக்காக நாடகமொன்று பல நடிகர்களால் இலவசமாக நடித்துக் கொடுக்கப்பட்டது. செலவுபோக ஜனசக்தி நிதியாக ரூ.100 கிடைத்தது. அந்த நாடகத்தில் விஸ்வநாத தாஸ், கே.டி.நடராஜபிள்ளை, கே.பி.ஜானகி, வி.எஸ்.சிவம்ஐயர், பி.எம்.காதர்பாட்சா, என்.பி.லட்சுமிபாய், கே.கே.நாராயணன், எம்.கே.துரைசாமி பிள்ளை, எம்.ஆர்.பாலசுந்தரம், டி.எஸ்.அருணாசலம், ஏ.என்.நடராஜன், டி.என்.மேனகா, ஏ.பேபி முதலியோர் நடித்தனர். இந்த நாடகம் நடத்த பேருதவியாக இருந்தவர் தோழர் எஸ்.குருசாமி ஆவார் என்று ப.ஜீவானந்தம் 2.7.1938 ஜனசக்தியில் எழுதி இருக்கிறார்.
விஸ்வநாத தாஸ் ஜில்லாபோர்டு உறுப்பினராக இருந்தார். அவருடன் நடித்த கே.பி.ஜானகி அம்மாள் விருதுநகர் ஊராட்சி மன்றத் தலைவராக பின்னாளில் இருந்தார். ஜானகி அம்மாள் பின்னாளில் ஜனநாயக மாதர் சங்கத் தலைவியாகவும் இருந்தார்.
குடும்பச் செலவுக்காக தாஸ் தடுமாறினார். வழக்குகளை நடத்த பணத்தேவை அதிகமாயிற்று. அதனால் திருமங்கலத்தில் இருந்த வீட்டை 2500 ரூபாய்க்கு அடமானம் வைத்தார்.
விஸ்வநாத தாஸ் மீது ராஜதுவேஷக் குற்றம் சாட்டப்பட்டது. திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர்முன் வழக்கு நடந்தது. தாசுக்கு வாதாட வ.உ.சி.வந்திருந்தார். அன்று வ.உ.சி.யின் நிலைமையும் நன்றாக இல்லை. பொருளாதார அடிப்படையில் விஸ்வநாத தாஸ் நிலையிலேயே வ.உ.சி.யும் இருந்தார்.
"தேச சேவை என்பது நம்மோடு தொலையட்டும். நமது சந்ததியினரை வேறு நல்ல மார்க்கத்துக்கு திருப்பிவிட வேண்டும். நாட்டுக்காக மட்டுமின்றி, நமது குடும்பத்திற்காகவும் உழைப்பதற்கு கொஞ்சம் பழகிக் கொள்ள வேண்டும். இதை மிகவும் நொந்துபோய் சொல்கிறேன்' என்று விஸ்வநாத தாஸிடம் வ.உ.சி. சொல்கிறார்.
அவர் அடமானம் வைத்த வீடு ஏலத்திற்கு வருகிறது. அதை எப்படியும் திருப்பிவிட வேண்டும் என பல முயற்சிகள் செய்கிறார். கேட்ட இடத்தில் எல்லாம் பணம் கிடைக்கவில்லை. இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டிருந்த நேரம் அது. போர் நிகழ்ந்து வருகிற நேரத்தில் ஆங்கிலேயர்களுக்கு சாதகமாக நடித்தால், கடன்கள் அனைத்தும் அடைத்து, ஆயிரக் கணக்கில் பணமும் தருவதாக அப்போதைய கவர்னர் எர்ஸ்கின் துறை விஸ்வநாத தாசுக்கு செய்தி அனுப்பினார். "நான் காங்கிரஸ்காரன், யாரிடமும் கையேந்த மாட்டேன்' என்று கூறிய விஸ்வநாத தாஸ் எட்டயபுரம் ராஜா உதவி செய்ய வந்தபோதும் மறுத்தார்.
1940 ஆம் ஆண்டு திரும்பவும் நாடகங்களை நடத்தத் திட்டமிட்டார். இந்த நாடகங்களினால் வரும் வருமானத்தை வைத்து ஏலத்திற்கு வரும் வீட்டை மீட்டு விடலாம் என எண்ணினார்.
உடல் நலம் குன்றியதோடு ஊரிலிருந்து வந்து சென்னையில் பழைய வண்ணாரப் பேட்டையில் சாக்கு வியாபாரியான தாமஸ் வீட்டில் தங்கினார்.
சென்னை ராயல் தியேட்டரில் ஏற்பாடு செய்யப்பட்ட முதல் மூன்று நாடகங்களில் விஸ்வநாத தாசுக்கு உடல் நலம் இல்லாததால் நடிக்க முடியவில்லை. 1940 ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதி இரவு சிறீவள்ளித் திருமண நாடகத்தில் சிறீ முருகன் வேடத்தில் நடிப்பதாக விளம்பரம் செய்யப்பட்டது. ராயல் தியேட்டரே நிரம்பி வழிந்தது. போலீஸாரும் வந்திருந்தனர்.
வள்ளித் திருமணத்தில் எடுத்ததுமே கழுகாசலக் காட்சி. முருகனாக அமர்ந்து காட்சிக் கொடுத்தார். வழக்கத்திற்கு மாறாக நாலறை கட்டை சுதியில் "மாய உலகம் இம் மண் மீதே' என்ற பல்லவியை பாடத் தொடங்கினார். அதற்கு மேல் குரல் ஒலிக்கவில்லை. ஆர்மோனியம் வாசித்துக் கொண்டிருந்த தம்பி, துவண்ட தலையை தாங்கி பிடித்து, விஸ்வநாத தாஸின் மரணத்தை உறுதி செய்தார்.
நாடகம் முடிந்தவுடன் அரங்கை பிரித்துவிட வேண்டும் என சென்னை மாநகராட்சி நாடகத்திற்கு அனுமதி வழங்கும்போதே உத்தரவிட்டிருந்தது. நீதிக்கட்சி மேயரான வாசுதேவ் ஈமச் சடங்குகள் முடியும் வரை அரங்கை பிரிக்க வேண்டாம் என்று மறு உத்தரவு இட்டார். அரங்கின் உரிமையாளர் கண்ணையா உடையார் இனிமேல் இந்த அரங்கில் எந்தக் கலை நிகழ்ச்சியும் நடக்காது. தாஸின் நிகழ்ச்சியே கடைசியாக இருக்கட்டும் என்றார்.
என்னைப் பற்றி தவறான தகவல் வந்தால் நம்ப வேண்டாம் என்று தாஸ் சொல்லி இருந்ததால் அவர்கள் குடும்பத்தினர் இறுதி யாத்திரையில் கலந்துகொள்ள வரவில்லை. 1941 ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி மயில்மீது அமர்ந்த முருகன் வேடத்தில் இறுதியாத்திரை நடந்தது.
யானைக்கவுனி, சைனா பஜார், செளகார்பேட்டை, தங்கசாலை வழியாக இறுதி ஊர்வலம் சென்றது. இரவு 7 மணி அளவில் மூலக்கொத்தலம் மைதானத்தில் தாஸின் மகன் சுப்பிமணியம் சிதைக்கு தீ மூட்டினார்.
விஸ்வநாததாஸ், புறக்கணிப்பு, அடி, உதை என்று நிறையவே எதிர்க் கொண்டார். அவருடைய நாடகம் பிரச்சாரம் நிறைந்தது. கலைக்கான விஷயங்கள் குறைவு என்று சொல்வோரும் உண்டு. கடவுளின் உருவ வாயிலாக விடுதலை உணர்வை ஊட்டி வளர்த்தார். இந்திய தேசியம் என்பதில் அன்றைக்கு எல்லாரையும் போல் நம்பி செயல்பட்டார். அடையாள அரசியல் அறிமுகமான பிறகு விஸ்வநாத தாஸை மறு வாசிப்புக்கு உட்படுத்தும்போது பார்பனீய தேசியத்தை கட்டமைத்தவர்களில் ஒருவர் என்றும் தலித்து பண்பாடுகளை மறந்து பார்ப்பனீயத்தை இந்துத்துவாவை தூக்கிப்பிடித்தார் என்று சொல்வதற்கு அதிக நேரமாகாது. இந்தப் பார்வையில் உடனடியாக தாஸை நிராகரிக்கவும் முடியும்.
எல்லாரும் மறந்து போனதற்கும், இவர்கள் மறந்து போனதக்கும் அதிக வித்தியாசமில்லை போலும்.
No comments:
Post a Comment