Monday, 2 October 2017

SOMETHING USEFUL ABOUT SEX -FOR INDIANS



SOMETHING USEFUL ABOUT SEX -FOR INDIANS




நமது இந்தியப் பெண்களின் ஏக்கமும், அவர்களது நிலையும் :


காதல் பற்றி, காமம் பற்றி ஆண்கள் பேசும் அளவுக்குப் பெண்கள் பேசுவார்களா என்கிற சந்தேகம் எப்போதும் எனக்கு உண்டு. டீனேஜ் வயதில் இருந்து காதல் அல்லது திருமணம் கைகூடும் வரை, பெண்களின் சிந்தனையை பெரும்பாலும் இந்த இரண்டுமே ஆக்கிரமித்துள்ளன. ஆனால், ஆண்களைப்போல் பொதுவெளியில் எளிதாக அவர்களால் அதைப் பகிர்ந்துகொள்ள முடிவது இல்லை. சினிமாவில் வரும் முதலிரவுக் காட்சிகளைப் பார்த்துவிட்டு அது பற்றி பள்ளியில் பேசிக்கொண்டிருந்தது நினைவுக்கு வருகிறது. கதவைத் திறந்துகொண்டு பெண் வருவார், பால் டம்ளர் கொடுப்பார், ஆண் உடனே கட்டிஅணைப்பார், விளக்கு அணைக்கப்படும். 'அதன் பிறகு என்ன நடக்கும்?’ எனக் கேட்டுவிட்டுச் சிரிப்போம். அந்தச் சிரிப்பு முடிந்ததும், அனைவரும் சில நிமிடங்கள் அமைதியாக இருப்போம். அடுத்து என்ன நடக்கும் என்று கற்பனை செய்வதற்கான பொழுது அது. மீண்டும் அது பற்றி பேசத் தொடங்கும்போது, எங்கள் எல்லோருக்கும் தோன்றும் ஒரே கேள்வி இதுதான்... 'கல்யாணமாகி ரெண்டு பேரும் முதல் தடவையா ஒரு ராத்திரி முழுக்கச் சேர்ந்து இருக்கப்போறாங்க. பேச எதுவுமே இருக்காதா?’ என்று. உண்மையில் இங்கே வீடுகளில் இரவுகள் பேச எதுவும் இல்லாமல் அமைதியாகத்தான் கடந்துகொண்டிருக்கின்றன.

இன்றைக்குப் பெண்கள் பேச முடியாத, ஆனால் பெரிதும் பேச விரும்புகிற சப்ஜெக்ட்... தங்கள் இரவுகள் குறித்துதான். சமையலறை இருட்டில் இருந்து படுக்கையறை இருட்டுக்கு ஒருநாள் மாற்றப்பட்ட முந்தைய பல தலைமுறைகளின் பெண்களுக்கு, செக்ஸ் என்றால் குழந்தை பெற்றுக்கொள்வதற்கான ஓர் ஏற்பாடாக மட்டும் இருந்திருக்கக்கூடும். செக்ஸ் என்பது, ஆண்-பெண் இருவருக்குமான பகிர்தலும் மகிழ்ச்சியும் என்று புரிந்த இன்றைய பெண்களுக்கு, தங்கள் இரவுகளோடு பெரும்பாலும் உடன்பாடே இல்லை. இணையத்தில் கொட்டிக்கிடக்கும் போர்னோ சைட்டுகள் பெண்கள் பார்ப்பதற்குத் தடை ஏதும் சொல்லாததால், விரும்பிய வாழ்க்கைக்கும், வாழ்ந்துகொண்டிருக்கும் வாழ்க்கைக்குமான வித்தியாசத்தை அவர்கள் உணர்ந்தே இருக்கிறார்கள்.
ஒரு மனைவி, தன் கணவரிடம் என்ன விரும்புகிறாள் என வைரமுத்து ஒரு கவிதை எழுதியிருப்பார். 'காலநேரம் பாராமல் காமச்சங்கு முழங்கி, நிராயுதபாணியோடு யுத்தமொன்று தொடங்கி, முத்தமிடத் தெரியாமல் மோகத்தில் குதறி, மின்விசிறி தலைதட்ட மேலேற்றிச் சுழற்றி, சிருங்கார பயத்தில் நான் சில்லிட்டலற, மெத்தை மேல் என் மேனி விசிறியெறிந்து, தேவை தீர்ந்ததும் திரும்பிப் படுத்து, குளித்த கூந்தல் உலர்த்தி வருமுன்னே, குறட்டைவிடும் என் கணவா, இஃதில்லை யான் கேட்டது’ என வரிகள் போகும். குறிப்பிட்ட இந்தக் கவிதையை பல பெண்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். 'பாரேன்... நம்ம வீட்ல நடக்கிறதை அப்படியே எழுதிருக்கார்’ என்ற ஆச்சர்யம் அவர்களுக்கு.

மற்ற நாட்டு சினிமாக்களைப் பார்த்தால், கணவன் - மனைவி இருவரும் அறைக்குள் வந்ததும் பேச ஆரம்பிக்கிறார்கள், அப்புறம் தழுவிக்கொள்கிறார்கள், முத்தமிடுகிறார்கள். உடலுறவு என்ற இலக்கைத் தொட குறைந்தது அரை மணி நேரமாவது ஆகிறது. ஆனால், நம் ஊரில் மட்டும் அறைக்குள் நுழைந்த 10-வது நிமிடத்தில், தூங்கிப் போக முடிகிறது எனில், செக்ஸ் என்ன தூக்க மாத்திரையா? நூலகத்தில் படித்த, தலைப்பு மறந்துபோன புத்தகத்தின் வரிகள் சில நினைவுக்கு வருகின்றன. இந்தியாவைச் சுற்றிப் பார்த்த வெள்ளைக்காரர் ஒருவர், இந்தியாவில் தான் அதிகம் வியந்தது குறித்து இப்படிக் குறிப்பிட்டாராம்... 'இந்த இந்தியர்கள் உடைகளைக்கூடக் கழற்றாமல் எப்படி உடலுறவுகொள்கிறார்கள்?’
நாங்கள் கல்லூரித் தோழிகள் ஒருமுறை சந்தித்தபோது, எங்கள் இரவுகள் குறித்து பகிர்ந்துகொண்டோம். பெண்களின் பேச்சில் இது மிக அபூர்வமாகவே நிகழும். 'உங்களுக்கெல்லாம் வீட்டுக்காரர் முத்தம் தர்றாங்களா?’ எனத் தோழி ஒருத்தி தயங்கித் தயங்கிக் கேட்டாள். 'அது இல்லாம எப்படி?’ எனச் சொல்லத்தான் விரும்பினோம். ஆனால், முடியவில்லை. 'முத்தத்தில் தொடங்கி முத்தத்தில் முடியும் தாம்பத்தியம் எத்தனை பேருக்கு வாய்த்திருக்கிறது?’ என்ற அ.வெண்ணிலாவின் கவிதை வரிகள் எத்தனை சத்தியமானவை. திருமணத்துக்குப் பிறகான முத்தத்தை, யார் பாவக்கணக்கில் சேர்த்தது? கதவை அடைத்ததுமே விளக்கை அணைப்பது, மேலே விழுந்து ஆக்கிரமிப்பது எல்லாம் சரிதான். ஆனால், அதற்கு முன்னால் கொஞ்சம் நேரம் காதலைப் பகிரவும், அது பற்றி பேசவும் பெண்கள் விரும்புகிறார்கள்.

பெண்களுக்கு, தங்கள் உடல் தயாராக வேண்டுமெனில் முதலில் மனம் தயாராக வேண்டும். பெண் மனம் அவர்களே எதிர்பார்க்காதவண்ணம் மிகமிக ரொமான்ட்டிக்கானது; காதல் நிரம்பியது. தலை வருடுதல், விரல் பிடித்தல், அணைத்துக்கொள்ளுதல் போன்றவை மூலம் காமம் தாண்டிய, காமத்துக்கு முந்தைய அக்கறையை பெண்கள் எல்லா வயதிலும் எதிர்பார்க்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் குழந்தைகள் பிறப்பு, ஹார்மோன்களின் மாறுதல்கள்... என வயது அதிகமாக அதிகமாக கணவனோடு இப்படியான நெருக்கமே தேவைப்படுகிறது. ஆனால், இதே நேரத்தில்தான், 'அஞ்சு நிமிஷத்துக்குள்ள முடிக்கலைனா, அடிப்பேன்’ என கட்டில் அருகே யாரோ ஸ்கேலோடு நின்று விரட்டுவதுபோல எல்லாம் நடந்து முடிந்துவிடுகின்றன. இந்த ஏமாற்றத்தில்தான் பெண்கள் அப்படி ஒரு சம்பிரதாய உறவு தேவையே இல்லை என்பதுபோல் அதைத் தவிர்க்கப் பார்க்கிறார்கள். 'அவளுக்கு இன்ட்ரஸ்டே இல்லப்பா. எப்ப போனாலும் எரிச்சலா தள்ளிப் படுக்கிறா... இல்லைனா சிடுசிடுனு விழுறா!’ என ஆண்கள் தன் நண்பர்களிடம் புலம்புவதும், மனைவியைவிட்டு விலகுவதும் இந்தக் காலகட்டத்தில்தான். திருமணமான புதிதில் மாலையில் அழகாக அலங்காரம் செய்துகொண்ட பெண்கள், பின்னாட்களில் சமையலறை வாசனையோடும், காலையில் அணிந்த நைட்டியோடும் இரவுக்குள் நுழைவதும் இதே காலகட்டத்தில்தான்.
வேலையின் அழுத்தங்கள், பெருநகர வாழ்க்கை மாற்றம் எல்லாம் சேர்ந்து, பெண்களின் இரவுகளில் ஏமாற்றத்தின் அடர்த்தியை அதிகரித்துவிட்டன. 

10 மணிக்கு வீடு வந்தால், தூங்குவதற்கு முன் செய்யவேண்டிய ஒரு சம்பிரதாயக் கடமைதான் செக்ஸ். நம்மவர்களுக்கு அது வெறும் 'செக்ஸ்’... அவ்வளவே. ஆனால், அதற்கு 'லவ் மேக்கிங்’ என்ற அழகிய பதம் உண்டு. அழுத்தத்தை வெளியேற்றிய அடுத்த நிமிடம், தூங்கிப்போகும் கணவனை வெறித்தபடி உட்கார்ந்திருக்கும் மனைவிகளைக் கை தூக்கச் சொன்னால், ஆயிரத்தில் தொள்ளாயிரம் பேர் நிச்சயம் கைதூக்குவார்கள். 'உனக்கும் ஓ.கே-வா?’ என, ஏன் இவர்கள் திரும்பக் கேட்பதே இல்லை. எல்லாம் முடிந்த பிறகு, இரண்டு நிமிடங்கள் பேசுவது, அணைத்தபடி தூங்குவது... இதெல்லாம் எவ்வளவு நிம்மதியைக் கொடுக்கும் தெரியுமா?
ஒரு பெண் தானாக வந்து முத்தமிட்டாலே குறைந்தது இரண்டு நிமிடங்கள் வெலவெலத்துப்போகும் ஆணிடம், 'எனக்கு இது வேண்டும்... இது பிடிக்கவில்லை’ என்பதை எப்படிப் பேசுவது? என்று பெண்கள் தயங்குகிறார்கள்... அவ்வளவுதான்!
'சம்சாரம் அது மின்சாரம்’ படத்தில் புதிதாகத் திருமணமான சந்திரசேகர், தன் தம்பியின் படிப்பை முன்வைத்து மனைவியுடன் இரவைக் கழிக்கத் தயங்குவார். பல உதாசீனங்களுக்குப் பிறகு புது மனைவி எரிச்சல் அடைந்து, நள்ளிரவில் கிணற்றடியில் போய்க் குளித்துக்கொண்டிருப்பார். ஒருகட்டத்தில் கணவனின் அக்கிரமம் தாங்க முடியாமல் அப்பா வீட்டுக்குச் செல்ல, அப்பா வாசலிலேயே துரத்தியடிப்பார். திரும்பும் வழியில் சந்திரசேகர் மிகக் கொச்சையாக, 'உனக்கு அதுதான் வேணும்னா ரோட்டுல இங்கேயே வெச்சுக்கலாமா?’ எனக் கேட்பார். இயல்பான தன் விருப்பத்தைச் சொன்னால் 'இப்படிக் கேட்டுவிடுவார்களோ!’ என்ற பயத்தில்தான், பெண்கள் அமைதியாகிவிடுகிறார்கள்.

பெண்களில் பலரது முதலிரவு அனுபவங்கள் வலி நிரம்பியவை. பெற்றோரை நிராகரித்து காதல் திருமணம் செய்த தோழியின் முதலிரவு அனுபவம் அப்படிப்பட்ட ஒன்று. 'நான் அம்மாவை நினைச்சு, அழுதுட்டு இருந்தேன். ஹோட்டல் ரூம்ல இருந்த பாத்டப்ல சேர்ந்து குளிச்சே ஆகணும்னு பிடிவாதம் பண்ணிக் குளிக்கவைச்சார். அப்புறம் அவரு தூங்கிட்டாரு. ராத்திரி முழுக்க நான் தூங்கவே இல்லை. கல்யாணம் ஆனா இப்படித்தான் இருக்குமா? இதுக்கா நான் எல்லாரையும் விட்டுட்டு வந்தேன். பயம்மா இருக்குடி’ என மிரண்டுபோய் சொன்னாள். உண்மையில், செக்ஸ் என்பதை காலம் முழுக்க வலி நிரம்பியதாக மட்டுமே அனுபவித்த பெண்கள் அநேகம் பேர். அரசு மருத்துவமனைகளில் மகப்பேறு பிரிவுக்குச் சென்றால், பிரவச வலியில் மனைவிகள் கணவனைத் திட்டும் வார்த்தைகளை காது கொடுத்துக் கேட்க முடியாது. 'உன்னால தினமும் வலி, வேதனைனு பட்டது போதாதா? இது வேறயா..?’ என ஆரம்பித்து, கிடைத்த வாய்ப்பை விடாது கொட்டித் தீர்த்துவிடுவார்கள்.

'காய்ந்த மாடு வயலில் பாய்வதுபோலான’ அந்தப் பாய்ச்சலுக்கு ஆண்களை மட்டுமே குறைசொல்லிப் பயன் இல்லை. அவர்கள் அப்படித்தான் வளர்க்கப்படுகிறார்கள். பெண்ணை அடக்கி ஆள்வது, அவர்களை ஆக்கிரமிப்பது இவையே 'ஆண்மை’ என்று இங்கே சொல்லித்தரப்படுகிறது. 'ஆம்பளைனா அப்படித்தான் இருக்கணும்’ எனச் சொல்லி வளர்ப்பதில் கணிசமான பங்கு அம்மாக்களுக்கும் உண்டு. நம் சமூகத்தில் ஆணின் குணத்தை அம்மாக்கள்தான் தீர்மானிக்கிறார்கள். வயதுக்கு வந்த மகளை அப்பாவோடு பேசாதே எனத் தடுக்கும்போது, மகள் மனதில் ஆண்களைப் பற்றி எந்த மாதிரியான எண்ணத்தை விதைக்கிறோம் என அம்மாக்கள் யோசிப்பதே இல்லை. 'அப்பாவையே நம்பக் கூடாது எனில், பிற ஆண்கள் நம்பிக்கையற்றவர்கள். பயப்பட வேண்டியவர்கள்’ என அவள் முடிவு செய்வாள். இதே மிரட்சியோடுதான் பெரும்பாலான பெண்கள் கணவனையும் அணுகத் தொடங்குகிறார்கள். 'வளர்ந்த தங்கச்சியைத் தொடாத... அதென்ன பொம்பளைப் புள்ளை கன்னத்தைக் கிள்றது?’ என அவனது தங்கையிடம் ஆரம்பித்து, 'ஸ்கூலுக்குப் போக ஆரம்பிச்சுட்டா... இன்னும் என்ன அவளைத் தூக்கிக் கொஞ்சிட்டு இருக்க. இறக்கி விடு’ என, பக்கத்து வீட்டுச் சிறுமியைத் தொடுவது வரை ஆண்களை பெண்ணிடம் இருந்து விலக்கியே வைக்கிறார்கள். ஒரு பெண்ணிடம் உறவுக்காக மட்டுமே நெருங்க வேண்டும் என வளர்க்கப்படும் ஆண், வாய்ப்பு கிடைக்கும் தருணத்தில் பெண்களிடம் வேறு எப்படி நடந்துகொள்வான்? செக்ஸ் இங்கு புனிதமானது அல்லது அருவருப்பானது என்கிற இரண்டு எதிரெதிர் எல்லைகளில் கொண்டுவைக்கப்பட்டுள்ளது. அது இயல்பானது என்பதை நாம் உணரவே இல்லை!

முதலிரவு முடிந்து வெளியே வரும் ஆணிடம், 'அப்புறம் எத்தனை ரவுண்டு மச்சான்?’ என்றுதான் இன்னமும் கேள்வி கேட்கிறார்கள். எண்ணிக்கையைக் குறைத்துச் சொன்னால் தன் ஆண்மையைச் சந்தேகித்துவிடுவார்களோ என்கிற பயம் ஆண்களுக்கு. அதனாலேயே, 'டயர்டா இருந்தா தூங்கு. நாளைக்குப் பார்த்துக்கலாம்’ என அறைக்குள் அக்கறையோடு நடந்துகொள்ளும் ஆண்கூட, வெளியே 'மூன்று’ எனத் தலை குனிந்து விரல்களை நீட்டுகிறான். முதலிரவுக்குச் செல்பவனின் நண்பர்கள், 'கலக்கிடு மச்சான்... விடாத’ என வெறியேற்றித்தான் அனுப்பிவைக்கிறார்கள்.
செக்ஸில் பெண்களைப் போலவே ஆண்களுக்கும் அநேகம் சந்தேகம் இருப்பதையும், அதுகுறித்த படபடப்புடனே அவர்கள் பெண்களை அணுகுகிறார்கள் என்பதை இரு தரப்புமே புரிந்துகொள்ள வேண்டும். முட்டாள்தனமான, மூடநம்பிக்கை நிறைந்த, திசையெங்கும் பரவிக்கிடக்கும் 'ஆண்மைக் குறைவு’ விளம்பரங்கள் வேறு ஆண்களின் நம்பிக்கையைக் குலைக்கும்.
பேசக் கூடாத, தேவையற்ற விஷயங்களை குடும்பத்துடன் உட்கார்ந்து விவாதிக்கும் நாம், 'செக்ஸ்’ என்ற விஷயத்தைப் பற்றி ஏன் பேசுவதே இல்லை? அப்பா, மாமா போன்ற முந்தைய தலைமுறை அதை பாசிட்டிவாகச் சொல்லிக்கொடுத்து, பதற்றத்தை ஏன் குறைக்க முயற்சிப்பதே இல்லை? செக்ஸ் குறித்த குற்றவுணர்ச்சிகளை விலக்கி அடிப்படை புரிதல்களை ஏற்படுத்தலாமே. 'இது இயல்பானது. எளிதாக எடுத்துக்கொள். ஒரு பெண்ணோடு சேர்ந்து லவ்மேக்கிங்கை ஆரம்ப நாட்களில் கற்றுக்கொள்’ என வழிகாட்டலாமே!

இதை எல்லாம் பேசுவது 'அபச்சாரம்’ என்று சொல்லிக்கொள்ளும் நம் சமூகத்தில், பலருக்கு விரும்பியபடியான 'உறவு’ என்பது திருமணத்தை தாண்டிய ஒருவரிடம்தான் சாத்தியப்படுகிறது. 'கணவனிடம் இதைக் கேட்க முடியாது. கணவன் என்னை இப்படியெல்லாம் பாராட்டுவது இல்லை’ என அந்தப் பெண்ணும், 'அவகிட்ட எப்படி இதைக் கேட்கிறது, அவளுக்குப் பிடிக்காது இல்லையா?’ என ஆண்களும் காரணம் சொல்லி தங்களைச் சமாதானப்படுத்திக்கொள்கிறார்கள். இருவரும் சமமாகப் பகிர்தலில் மூலமே மகிழ்ச்சி சாத்தியம் என்பதை உணர்ந்து, பரஸ்பரம் பேசிக்கொண்டாலே, குழப்ப மேகங்கள் விலகிவிடும். அதற்கு இன்றைய பெண்கள் தயாராகவே இருக்கிறார்கள். செக்ஸ் குறித்து அதிகப்படியான புனித பிம்பங்கள் எதுவும் அவர்களிடம் இல்லை.
முக்கியமாக, ஆண்கள் நினைத்துக்கொண்டிருப்பது போல், 'எத்தனை நிமிடங்கள் தாங்குகிறான்’ என்பதை வைத்து மட்டுமே ஒரு பெண் தன் கணவனை மதிப்பிடுவது இல்லை. தன் மேல் அவன் காட்டும் அக்கறை, அன்பு, மரியாதையே அவனிடம் அவளை நெருங்கவும் கிறங்கவும் வைக்கின்றன!நமது இந்தியப் பெண்களின் ஏக்கமும், அவர்களது நிலையும் :

No comments:

Post a Comment