Saturday, 28 October 2017

P.SRINIVASACHARI ,EMINENT WRITER OF DEVOTIONAL SUBJECTS DIED 1981 OCTOBER 28



P.SRINIVASACHARI ,EMINENT WRITER OF 
DEVOTIONAL SUBJECTS DIED 1981 OCTOBER 28



ஸ்ரீராமாநுஜர் பிறந்து 1,000 வருடங்களாகின்றன. அந்த ஆன்மிகப் புரட்சிக்காரரைப் பற்றி மிக எளிமையாக 1964-ல் தமிழுக்குச் சொன்னவர் பி.ஸ்ரீ எனும் பி. ஸ்ரீநிவாச்சாரி. இவர் எழுதிய ‘ஸ்ரீ ராமாநுஜர்’ புத்தகத்துக்கு 1965-ல் சாகித்ய அகாடமி விருது கிடைத்தது!
ஆனந்த விகடனை வாங்கிய சிறிது காலத்திலேயே எஸ்.எஸ். வாசன் கண் டெடுத்த இலக்கிய பொக்கிஷம் பி.ஸ்ரீ. ஆனந்த விகடனில் ‘சித்திர ராமாயணம்’, ‘கிளைவ் முதல் ராஜாஜி வரை’, ‘தென்னாட்டுத் திருக்கோயில்கள்’, ‘துள்ளித் திரிகின்ற காலத்திலே’, ‘சிவநேசச் செல்வர்கள்’ என்றெல்லாம் பல கட்டுரைகளையும் தொடர்களையும் அவர் எழுதினார்.
பி.ஸ்ரீ. பிறந்த ஊர் தென்திருப்பேரை. நெல்லை மாவட்டத்தின் தாமிரபரணி கரையிலிருக்கும் நவதிருப்பதிகளில் ஒன்று. ‘அகத்தியர் முதல் அனந்தகிருஷ்ணய்யங்கார் வரையில் தமிழ் தாகத்தைத் தீர்த்தது தாமிரபரணிக் கரைதான்’ என்பார் தமிழ் தாத்தா உ.வே. சாமிநாதய்யர். பி.ஸ்ரீ, உ.வே.சா.வுடன் அறிமுகம் ஆனார். தமிழ்த் தாத்தாவின் பழக்கத்தால் அவருக்குத் தமிழ் ஆர்வம் வர ஆரம்பித்தது. சின்ன வயதிலேயே தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளிலும் வல்லவராக இருந்தவர் பி.ஸ்ரீ. இவருக்கு தேசிய ஞானத்தைப் பக்குவமாகவும் இனிமையாகவும் கலந்து ஊட்டியது பாரதியாரின் பத்திரிகையும் எழுத்துக்களுமே! நாளடைவில் பாரதியாரின் பாடல்கள் அனைத்துமே பி.ஸ்ரீ.க்கு மனப்பாடமாகின.
அப்போது பி.ஸ்ரீ. படித்த கல்லூரியின் முதல்வர் விங்க்ளர் துரை. இவர் ஐரோப்பியர். மதபக்தி என்பது மூடநம்பிக்கை என்கிற கொள்கையுடைவர். கிறித்துவ மதத்தைக் கண்டித்ததோடு, சுயமரியாதைக் கொள்கையைக் காரசாரமாக உபதேசித்தார் விங்க்ளர் துரை. அவரது உபதேசங்கள் பி.ஸ்ரீ.யின் மனதில் ஆழமாகப் பதிந்தன. பி.ஸ்ரீ.க்கு கடவுள் நம்பிக்கை இருந்தது. ஆனால், மூடநம்பிக்கைகளை அறவே வெறுத்தார். கோயிலுக்குச் செல்வது, பூஜை, மதச் சடங்குகள் எதிலும் இவருக்கு வாழ்நாள் முழுவதும் நம்பிக்கை இல்லாமலே இருந்தது. நெஞ்சமே கோயில், நினைவே சுகந்தம், தாம் படிக்கும் கம்பராமாயணமே தாரக மந்திரம் என்று இருந்தது. விங்க்ளர் துரைக்குப் பிறகு கல்லூரியில் ஹெர்பர்ட் சாம்பியன் முதல்வராக வந்தார். இவர்தான் பின்னாளில் பி.ஸ்ரீ.க்கு சப்-இன்ஸ்பெக்டர் வேலை வாங்கிக்கொடுத்தார். போலீஸ் இலாக்காவில் இவருக்கு மேல் அதிகாரி ராபர்ட்சன். அவர் பி.ஸ்ரீ.யிடம் தமிழ் கற்றுக்கொண்டார்.
சப்-இன்ஸ்பெக்டராக தஞ்சாவூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியின் ஆலத்தம்பாடியில் பி.ஸ்ரீ. வேலை பார்த்தார். நடுவே அவரை புதுச்சேரிக்கு அனுப்புவார்கள். காரணம், அப்போது அரவிந்தர் அங்கே இருந்தார். `அவரைக் கண்காணித்துக் கைது செய்ய வேண்டும்’ இதுதான் காவல்துறையின் கட்டளை. இது நடக்கிற காரியமில்லை. காரணம், பி.ஸ்ரீ., அரவிந்தரின் பக்தர், சிஷ்யர்! அவரை எப்படிக் கைதுசெய்ய முடியும்? இதனால் போலீஸ் உத்தியோகம் பிடிக்காமல் போனது. மூன்றரை வருட போலீஸ் உத்தியோகத்துக்கு முழுக்கு போட்டார். காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
1908-ம் ஆண்டு வ.உ.சி.க்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. அவரது ஆயுள் தண்டனை பிறகு குறைக்கப்பட்டது. சிறையிலிருந்து விடுதலை அடைந்த பின் வ.உ.சி. வறுமையில் வாடினார். அவரது முயற்சிகளுக்கு பெரிய ஆதரவு கிட்டவில்லை. அப்போது கோவில்பட்டிக்கு வந்து மீண்டும் தன் வழக்கறிஞர் தொழிலை நடத்த ஆரம்பித்தார் வ.உ.சி. அவரைக் கோவில்பட்டியில் சந்திக்கப் போனார் பி.ஸ்ரீ. தன்னுடைய அரசியல் குரு, சிறிதும் கூச்சமின்றித் தன்னை ஒரு தோழனாக கருதிப் பழகியதில் நெகிழ்ந்துபோனார். பிறகு அவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்களானார்கள். அந்தச் சமயத்தில் பி.ஸ்ரீ., கோவில்பட்டியில் கம்பராமாயணப் பிரசங்கங்கள் செய்துகொண்டிருந்தார். பல நாட்கள் முதல் வரிசையில் அமர்ந்திருப்பார் வ.உ.சி. தமிழ் ஆராய்ச்சிப் பேரறிஞரான வையாபுரிப் பிள்ளை திருவனந்தபுரத்தில் வழக்கறிஞராகத் தொழில் செய்துவந்தார். அப்போது திருவனந்தபுரத்தில் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையும் இருந்தார். இவர்கள் ‘சைவ பிரகாச சபை’ அமைத்துத் தமிழ், சைவத்தொண்டு ஆற்றிவந்தார்கள்.
அப்படி ஒரு கூட்டத்தில், வருபவர்களை வரவேற்க வாசலில் நின்றுகொண்டிருந்தார் வையாபுரிப் பிள்ளை. அப்போது மீசையுடனும், கம்பீரமான தோற்றத்துடனும் ஒருவர் வந்து தன்னை ‘சுப்ரமணிய பாரதி’ என்று அறிமுகப்படுத்திக்கொண்டார்.அந்தக் கூட்டத்தில் பி.ஸ்ரீ.யும் இருந்தார். அங்கேதான் பாரதியும் பி.ஸ்ரீ.யும் அறிமுகமானார்கள். 1980-ல் ஆனந்த விகடன் மலருக்கு பி.ஸ்ரீ. ஒரு பேட்டியளித்தார்.
அதில், “நானும் அவனும் ( பாரதியும்) நெருங்கிய நண்பர்கள். அவன் என்னைவிட ஐந்து வயது பெரியவன். பாரதியின் சில பாடல்கள் அவனுக்கே நினைவிருக்காது. நான் அத்தனை பாடல்களையும் சொல்வேன். கம்பனுக்குப் பிறகு, பாரதியைத்தான் நான் கவிச் சக்கரவர்த்தியாக மதிக்கிறேன். நெல்லையிலும் பாளையங்கோட்டையிலும் கடையத்திலும் தாமிரபரணிக் கரையிலும் நாங்கள் பழகித் திரிந்த காலங்கள் அற்புதமானவை” என்றார் பி.ஸ்ரீ.
`குமரன்’ என்ற பத்திரிகையில் பி. ஸ்ரீ பல கட்டுரைகளை எழுதினார். அதைக் கண்ட வாசனும் கல்கியும் அவரை விகடனுக்கு எழுத அழைத்தார்கள். இவரைச் சென்னைக்குக் கொண்டுவர வேண்டுமென்று ஒரு கட்டத்தில் அவர்கள் விரும்பினார்கள். பி.ஸ்ரீ., விகடனில் பணிபுரிய வந்தார். ஆனால் வந்த நோக்கம் விகடனில் பணிபுரிய அல்ல. வாசன் ஒரு ஆங்கிலப் பத்திரிகை தொடங்கினார். அதற்கு மெர்ரி மேகஸீன் (Merry magazine) என்று தலைப்புக் கொடுத்தவர் பி.ஸ்ரீ.
அந்த ஆங்கிலப் பத்திரிகையின் பொறுப்பாசிரியர் வேலைதான் பி.ஸ்ரீ.க்கு. ஆனால் ஆனந்த விகடனுக்கு எழுதுவதே அவருக்கு முக்கிய வேலையாக இருந்தது. ராஜாஜி, பெரியார் இருவர் மீதும் பி.ஸ்ரீ.க்கு மிகுந்த பற்று இருந்தது. இதைத் தன்னுடைய `கொஞ்சமோ நினைவில் வெள்ளம்’ புத்தகத்தில் இப்படிக் குறிப்பிடுகிறார் பி.ஸ்ரீ.:

“சமய, அரசியல், சமுதாயத் தொண்டு நாட்டுக்கு எத்தனை முக்கியமானதோ, அதேபோல் சுயமரியாதைப் பெரியாரின் தன்மான, தனிவீர, சமய மறுப்புத் தொண்டுகூட எண்ணிறந்த மூடநம்பிக்கைகளிலிருந்து தமிழ் மக்களைக் காப்பாற்றுவதற்கு அவசியமானவை என்றே நான் உறுதியாக நம்புகிறேன். பக்தி எத்தனை அவசியமோ, அத்தனை அவசியம் மூடநம்பிக்கை ஒழிப்பு! பக்தி நெறியில் பகுத்தறிவைப் பயன்படுத்திக்கொள்ள இடம் கொடாதவர் களைத் தண்டிக்கவே இறைவன் மூடநம்பிக்கை என்ற கொடிய பிளேக் நோயை அனுப்பியுள்ளான் என்றார் ஒரு ஆங்கில அறிஞர். இந்த அரும்பெரும் கருத்திலே பெரியார் ராமசாமியின் பிரசாரத்திற்கு ஆதாரம் இருப்பதாகவே கருதுகிறேன்.”
- சுதாங்கன், மூத்த பத்திரிகையாளர். தொடர்புக்கு: sudhangan@gmail.com

நாட்டுப்புறக் கலைகள் பார்வையாளர்களின் ரசனையை அனுசரித்தே நிகழ்த்தப்படுகின்றன.
விட்டலாபுரம் கிராமத்தில் (அப்போதைய திருநெல்வேலி மாவட்டம்) தமிழறிஞர் பி. ஸ்ரீ. இருந்த சமயம். திருநெல்வேலி தொழிலதிபர் ஒருவர் பி.ஸ்ரீயைப் பார்க்கப் போயிருந்தார். இருவரின் ராமாயண உரையாடலின் உச்சக்கட்டத்தில் தோல்பாவைக்கூத்து பற்றிச் சொன்னார் தொழிலதிபர்.
ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர்கள் தோல் பாவைக்கூத்தைப் பார்ப்பது தரக்குறைவாகக் கருதப்பட்ட காலம் அது. தொழிலதிபர், அப்பாவுக்குத் தெரியாமல் ரகசியமாகப் பார்த்திருக்கிறார். அவர் சொன்ன விதம், பி.ஸ்ரீக்கு தோல்பாவைக்கூத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆசையைத் தூண்டி
யிருக்கிறது. இந்த நிகழ்ச்சி 40-களில் நடந்திருக்க லாம். அப்போது தோல்பாவைக்கூத்து நிகழ்ச்சியில் தமாஷ் காட்சிகள் குறைவாக இருந்த காலம். புன்னைக்காய் எண்ணெய் விளக்கில் மைக் இல்லாமல் நிகழ்ச்சி நடத்திய காலம்.
உளுவனும் உச்சியும்
கோபாலராவ் (1882 - 1976) அப்போது திருநெல் வேலி மாவட்ட எல்லைக் கிராமம் ஒன்றில் நிகழ்ச்சி நடத்திக்கொண்டிருந்தார். அவரைத் தேடிக் கண்டுபிடித்து விட்டலாபுரத்தில் கூத்து நடத்த ஏற்பாடு செய்துவிட்டார் தொழிலதிபர். முதலில் சுந்தரகாண்டம் நடத்தட்டும் என்றாராம் பி..
ஏற்கெனவே பார்த்த தோல்பாவைக்கூத்து நிகழ்ச்சிகளை நினைத்துப் பார்த்தார் தொழிலதிபர். பாவை ஆட்டுபவரும் பக்கவாத்தியக்காரர்களும் நிகழ்ச்சியின்போது உரையாடிய கெட்டவார்த்தை களும் தமாஷ் பாத்திரங்களான உளுவத்தலையன், உச்சிக்குரும்பன், அப்போது வழக்கில் இருந்த பச்சைக் கொப்புளான் என்னும் பாத்திரங்கள் பேசிய இரட்டை அர்த்த உரையாடலும் அவர் நினைவுக்குவந்தன. ராமன், சீதை தவிர பிற எல்லாப் பாத்திரங்களிடமும் உளுவனும் உச்சியும் கிண்டலாகப் பேச உரிமை உண்டு.
இரண்டு நிபந்தனைகள்
இப்படியான காட்சிகளை பி.யும் அவரது அக்ரகாரத்துப் பெண்களும் தமிழறிஞர் சிலரும் எப்படி எடுத்துக்கொள்வார்கள்? அதனால் கோபால ராவிடம் கிளிப்பிள்ளைக்குச் சொன்ன மாதிரி இதுபோன்ற காட்சிகளைத் தவிர்த்துவிடுங்கள் என்றாராம் தொழிலதிபர். நிகழ்ச்சியின்போது கெட்டவார்த்தை, இரட்டை அர்த்தக் கதைகள், பழமொழிகள் போன்றவற்றைச் சொல்லக் கூடாது; நிகழ்ச்சி நடத்தும்போது குடிக்கவும் கூடாது என்று தொழிலதிபர் நிபந்தனை விதித்தது கோபாலராவுக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஆனால், தொழிலதிபர் நிகழ்ச்சிக்குப் பேசிய தொகை சம்மதிக்க வைத்தது.
பி.ஸ்ரீ. பார்த்த கூத்து
பி.ஸ்ரீ.யை அன்று அசரவைத்துவிட்டார் கோபாலராவ். முக்கியமாக அனுமனும் சுக்ரீவனும் உரையாடியபோது இடையில் வந்த சுயராஜ்யம் என்ற சொல் அவரைக் கூர்ந்து கவனிக்க வைத்தது. சுக்ரீவன் கிட்கிந்தையில் அடிமையாக வாழ் வதைவிட சுயராஜ்யத்துக்குப் போராடுவது மேல் என்கிறான். வாலியை வெள்ளைக்காரனாகவும் கிட்கிந்தையைப் பாரதமாகவும் வர்ணித்துப் பேசிய உரையாடலைப் பார்வையாளர்கள் புரிந்து கொண்டு கைதட்டியதையும் அன்றைய பிரமுகப் பார்வையாளர்கள் கவனித்தார்கள். வாலிவதை முடிந்த பிறகு படைதிரட்டி வருகிறேன்; சீதையைத் தேடலாம் என்று ராமனிடம் சுக்ரீவன் கொடுத்த வாக்கை மறந்துவிட்டான். அதனால் ராமன் லட்சுமணனிடம்,
வரவில்லையே சுக்ரீவன்
மனதை அறிந்துவா தம்பி
சுயராஜ்யம் வேண்டுமென்றான்
கிடைத்ததும் மறந்துவிட்டான்
சுகபோகி ஆகிவிட்டான் - கொடுத்த
வார்த்தைகளை மறந்துவிட்டான்
தம்பி நீ போய் வா
எனப் பாடுவான்.
பாட்டு முடிந்ததும் ராமனும் லட்சுமணனும் திரையின் ஓரத்துக்குச் சென்று மெல்ல மறைந்துவிடு வார்கள். அனுமன் வந்து சுற்றும்முற்றும் பார்ப்பான். அப்போது உளுவத் தலையன் வருவான். “ஏ அனுமா! கேட்டயா சங்கதி” எனச் சொல்லிவிட்டு, சுக்ரீவனும் தாரையும் சரசமாடுவதை இரட்டை அர்த்தத்துடன் விவரிப்பான். இந்த உரையாடலின்போது கோபால ராவ் கட்டுப்பாட்டை இழந்துவிட்டார். கொஞ்ச நேரத்தில் சமாளித்துவிட்டார்.
கம்பனைப் புகுத்தினார்
பி.ஸ்ரீ. இதன் பிறகு கோபாலராவின் எல்லா நிகழ்ச்சிகளையும் பார்த்தார். 20-க்கும் மேற்பட்ட கம்பனின் பாடல்களை ராவுக்குச் சொல்லிக்
கொடுத்தார். அவற்றை எங்கே பாட வேண்டும் என்பதையும் கற்பித்தார். நிகழ்ச்சி நடத்து வதிலும் ஆலோசனை சொல்லியிருக்கிறார். கெட்ட வார்த்தைகளையும், இரட்டை அர்த்தங்களையும் குறைத்துக்கொள்ள வேண்டிய நிலைக்கு வந்தார் கோபாலராவ்.
பதிவு செய்யப்படாத சொற்கள்
தோல்பாவைக்கூத்து மட்டுமல்ல; சடங்குகளோ புராணமோ சாராமல் உரையாடல் வழி நிகழ்த்தப் படும் நாட்டார் நிகழ்த்துகலைகளுக்குக் கட்டுப் பாடற்ற தன்மை உண்டு. நாடகப் பாணியிலான நிகழ்த்துகலைகளுக்குக் கொஞ்சம் விதிவிலக்கு உண்டு. (எ.கா. ஸ்பெஷல் நாடகம், தெருக்கூத்து) பார்வையாளர்களின் ரசனையை அனுசரித்தே நிகழ்த்திய கலைஞர்களுக்கு வரன்முறை கிடையாது.
இதுபோன்ற நிகழ்ச்சிகள் கிராமத்து விழாக்களில் மட்டுமே நிகழும்; ஊரின் ஒதுக்குப்புறத்திலேயே இந்த நிகழ்ச்சி நடைபெறும். பார்வையாளர்கள் ஆண்கள் மட்டுமே; சிறுவர்களை அனுமதிக்க மாட்டார்கள். இதுபோன்ற நிகழ்ச்சிகளில் முறை தவறிய உறவுகள், ஆண்/பெண்களின் வக்கிரங்களே மையப்பொருள். இவை இரட்டை அர்த்தங்களில் பேசப்படும்; இவை வட்டாரரீதியான வழக்காறுகள்; வட்டார மக்களுக்கு எளிதில் புரிவன. இச்சொற்கள் அகராதிகளில்கூடப் பதிவுசெய்யப்படாதவை.
கப்பல் பாட்டு
தாமிரபரணி ஆற்றங்கரை கிராமத்துக் கோயில் விழாவில் நான் பார்த்துப் பதிவுசெய்த கப்பல் பாட்டு நிகழ்ச்சி இப்போது நிகழ்வதில்லை. கப்பல்போல் அலங்காரம் செய்த வண்டியில் இரண்டு பெண்களும் மூன்று ஆண்களும் நின்றோ இருந்தோ நிகழ்ச்சி நடத்துவார்கள். இவர்களின் உரையாடல் முறை தவறிய உறவுகுறித்து இருக்கும். மாமியார்- மருமகன், அண்ணி- கணவனின் தம்பி என உறவுக்காரர்களின் தகாத உறவு விரசமாக விவாதிக்கப்படும். கோமாளி இடையே புகுந்து இரட்டை அர்த்தங்களில் பேசுவான்.
மாமியார்- மருமகன் தொடர்பான விரசமான பாடலைப் பாடுவான் கோமாளி. மாப்பிள்ளை பெண் பார்க்கும் படலத்தில் மாமியாரிடம் லயித்த ஒருவனின் அனுபவம் பாடலின் மையம். இப்படியெல்லாம் பாடல், உரையாடல் என நாடகம் நடந்தாலும் இதன் மொத்த தொனி இதை நியாயப்படுத்தாது.
இரட்டை அர்த்தக் கலைகள்
கப்பல்பாட்டு போன்று கருப்பாயி ஆட்டம் (தஞ்சைப் பகுதி), கருப்பாயிக் கூத்து (மதுரை, புதுக்கோட்டை பகுதி), ரங்குபாய் நடனம் (தென் மாவட்டங்கள்), கரகாட்டத்தின் இடை நிகழ்ச்சிகள் (வாழைக்காய் வெட்டுதல்) எனச் சில நிகழ்ச்சிகளும் கணவன், மனைவி உறவின் விரிசல், தகாத உறவு, முதியவர்களின் வக்கிரம் என்பனவற்றை வெளிப்படையாக விமர்சிப்பவை.
அவசரகாலச் சட்டம்
சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு கப்பல்பாட்டு நிகழ்ச்சி நடத்திய பெண் கலைஞர் ஒருவரை மதுரையில் சந்தித்தேன். அவரிடம் பழைய நினைவுகளைக் கிளறியபோது, நெருக்கடிநிலை அமலில் இருந்தபோது, கப்பல்பாட்டுக் கலைஞர் களை போலீஸ் பிடித்துச் சென்றதையும், அவர் களைப் போன்ற வேறு கலைஞர்கள் ஊர்விட்டுப் பெயர்ந்ததையும் சொன்னார்.
இதுபோன்ற செய்தியை கேரளத் தெறிப் பாட்டுபற்றி மலையாளப் பேராசிரியர் ஒருவரிடம் கேட்டேன்.
தெறிப்பாட்டு
வட கேரளத்தில், குறிப்பாக பாலக்காடு, திரிசூர் மாவட்டங்களில் பகவதி, கண்ணகி கோயில் வழிபாடு, விழா தொடர்பானது தெறிப்பாட்டு. இதற்குக் கெட்ட வார்த்தை என்பது நேரடிப் பொருள். திருவிதாங்கூர் ராணி கௌரி லட்சுமிபாய் காலத்திலேயே (1810 - 15) இதற்குத் தடை வந்தது என்றாலும், 70-களில்கூட இது வழக்கில் இருந்தது. 1972-ல் நான் பாலக்காடு, சித்தூரில் படித்தபோது இப்பாடலைக் கேட்டிருக்கிறேன். தெறிப்பாட்டில் ஆண், பெண் உறுப்புகளின் வர்ணனை மேலோங்கி இருக்கும். இடையிடையே சிலப்பதிகாரக் கண்ணகி கதையும் துணுக்குகளாகக் கலந்து வரும். கோவலனிடம் சுகம் பெறாத கண்ணகியை ஆற்றுவிப்பதற்காக இந்தத் தெறிப்பாடல் என்ற விளக்கத்தையும் அப்போது கேட்டேன்.
நான் இதுபற்றி, மலையாளப் பேராசிரியர் விக்கிரமன் தம்பியிடம் கேட்டபோது, “எல்லாத் தெறிகளையும் சினிமாக்காரங்களும் அரசியல் வாதிகளும் ஏற்றுக்கொண்டார்களே; இனி எதற்குத் தனியான தெறிப்பாடல்” என்று மலையாளி களுக்குரிய கிண்டலுடன் சொன்னார்.
- அ. கா. பெருமாள், நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர்

பி. ஸ்ரீநிவாச்சாரி அல்லது பி.ஸ்ரீ. (ஏப்ரல் 16, 1886 – அக்டோபர் 28, 1981) பேச்சாளராக, எழுத்தாளராக, உரையாசிரியராக, பதிப்பாசிரியராக, வரலாற்று ஆசிரியராக, பத்திரிகை ஆசிரியராக, சமயாச்சாரியராக, திறனாய்வாளராக இப்படி பன்முக வித்தகராக விளங்கியவர். இவர் பி. ஸ்ரீ. ஆச்சார்யா என்றும் வழங்கப்படுகிறார்
வாழ்க்கைக் குறிப்பு[மூலத்தைத் தொகு]
1932ல் ஸ்ரீநிவாச்சாரி குடையுடன் இந்திய விடுதலை இயக்கம்
தென் திருப்பேரை என்னும் ஊரில், பிச்சு ஐயங்கார்-பிச்சு அம்மாள் தம்பதியருக்கு மூத்த மகனாகப் பிறந்தார். பெற்றோர் இவருக்கு பி.ஸ்ரீநிவாச்சாரி எனப் பெயரிட்டனர். நாளடைவில் அவரது பெயர் சுருங்கி, பி.ஸ்ரீ. என ஆகிவிட்டது.[1]
நெல்லையில் உள்ள, தற்போது "மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக் கல்லூரி" என்று அழைக்கப்படும் இந்துக் கலாசாலையில் கல்வி பயின்றார். பள்ளிப் பருவத்திலேயே ஆங்கிலத்தில் பேசுவதிலும் எழுதுவதிலும் நல்ல அறிவும் திறமையும் படைத்தவர் பி.ஸ்ரீ. பலமுறை பாரதியாரைச் சந்தித்து, பழகி மிகுந்த தோழமை பூண்டு, அவரைப் பாடச் சொல்லி, கேட்டு, மகிழ்ந்து பாராட்டியவர் பி.ஸ்ரீ.
பாரதியின் தாக்கத்தால் அந்நாளைய "இன்டர்மீடியட்' வகுப்புக்குப் பிறகு படிப்பைப் பாதியில் நிறுத்தி விட்டு விடுதலைப் போராட்டத்தில் பங்கு பெற்றார். விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபடுவதைக் கண்ட அவரது பெற்றோர், அவருக்குத் திருமணம் செய்து வைத்து அவரது கவனத்தைத் திசை திருப்ப நினைத்தனர். அதன்படி தங்கம்மாள் என்ற பெண்ணைத் திருமணம் செய்வித்தனர். இவருக்கு ஒரு மகனும், இரு மகள்களும் உள்ளனர்.
தமிழிலக்கிய ஆர்வம்[மூலத்தைத் தொகு]
தமிழ் இலக்கியத்தை அவ்வளவாக அறிந்திராத காலத்தில் ராஜாஜி தான் பி.ஸ்ரீ.யின் கவனத்தை தமிழின் பால் ஈர்த்தவர். தமிழ் இலக்கியங்களைப் படிக்கத் தொடங்கினார். அதுவே பிற்காலத்தில் திறனாய்வாகவும் ஆராய்ச்சியாகவும் உருப்பெற்றது.
பக்தி இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டிருந்த பி.ஸ்ரீ., திருக்கோயில்களிலும் தலபுராணங்களிலும் தம்மையறியாது ஓர் ஆழ்ந்த பற்றுக் கொண்டிருந்தார். செப்பேடுகள், கல்வெட்டுகள், சிற்பக்கலை போன்றவற்றிலும் மிகுந்த புலமை பெற்றிருந்தார். ஆனந்த விகடன் இதழில் "கிளைவ் முதல் இராஜாஜி வரை" என்ற தலைப்பில் கட்டுரை எழுதி, பின் அதை நூலாக்கினார்.
பத்திரிகையாளர்[மூலத்தைத் தொகு]
இவரது எழுத்தார்வம் "கிராம பரிபாலனம்" என்கிற வார இதழைத் தொடங்க வைத்து நட்டமடையவும் வைத்தது. செட்டிநாட்டில் மூன்றரை ஆண்டுகள் தங்கி, "குமரன்" பத்திரிகையின் ஆசிரியராக, பல கட்டுரைகளையும் கதைகளையும் தொடர்களையும் எழுதிக் குவித்தார்.
உ.வே.சா., கா.சு.பிள்ளை, வையாபுரிப்பிள்ளை, சேதுப்பிள்ளை, மறைமலையடிகள், பாரதியார், வ.உ.சிதம்பரனார், வ.வே.சு ஐயர், ராஜாஜி, கல்கி, சோமசுந்தர பாரதி, ரசிகமணி டி.கே.சி., மற்றும் பல இலக்கிய அன்பர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பைப் பெற்றவர் பி.ஸ்ரீ.
தினமணி, தினமலர், சுடர், சுதேசமித்திரன் போன்ற நாளிதழ்களுக்கும், கல்கி, ஆனந்த விகடன் போன்ற வார இதழ்களுக்கும் கலைமகள், அமுதசுரபி போன்ற மாத இதழ்களுக்கும் கட்டுரைகளை எழுதிக் குவித்தார். "தினமணி" நாளிதழில் பதிப்பாசிரியராகப் பணியாற்றியபோது எண்ணற்ற நல்ல நூல்களைத் "தினமணி மலிவு வெளியீடாக' வெளியிட்ட பெருமை பி.ஸ்ரீ.க்கு உண்டு. அவர் "தினமணி'யில் இருந்து ஓய்வுபெற்று, ஆனந்தவிகடனில் பகுதிநேர எழுத்தாளரானார்.
திறனாய்வு[மூலத்தைத் தொகு]
தமிழில் ஒப்பிலக்கியம் என்பதற்கு அடித்தளம் இட்ட பெருமையும் பி.ஸ்ரீ.க்கு உண்டு. கம்பனும் - ஷெல்லியும், பாரதியும் - ஷெல்லியும் என்று தொடங்கி, இலக்கிய ஒப்புமைகள் பல பி.ஸ்ரீ.யால் வெளிவந்தன. கம்பன் கவிதையை இலக்கியத் திறனாய்வு செய்து கம்பனின் புகழை உலகுக்கு வெளிச்சமிட்டுக் காட்டிய பெருமைக்குரியவர் பி.ஸ்ரீ. உடல்நிலை குன்றி படுக்கையில் இருந்தபோதும் கூட, "நான் இரசித்த கம்பன்' என்ற இறுதி நூலை எழுதி முடித்தார்.
விருதுகள்[மூலத்தைத் தொகு]
இவர் எழுதிய "ஸ்ரீஇராமானுஜர்" என்னும் வாழ்க்கை வரலாற்று நூலுக்கு 1965-ஆம் ஆண்டு சாகித்ய அகாதெமி விருது கிடைத்தது. மதுரையில் நடைபெற்ற ஐந்தாவது உலகத் தமிழ் மாநாட்டில் பாராட்டும், பொன் முடிப்பும் வழங்கப்பட்டது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
நூற்றுக்கணக்கான நூல்களை எழுதி 'கம்ப மேதை' என இலக்கிய உலகில் போற்றப்பட்ட பி.ஸ்ரீநிவாச்சாரியின் பேத்தி மதுரை லாவண்யா ஜெயராம்.தமிழறிஞர் குடும்பத்தில் பிறந்ததால் இலக்கியத்தையும், ஆன்மிகத்தையும் அவர் வழியில் பின்பற்றுவதை கடமையாகவும், பேறாகவும் கருதி வருகிறார்.நெல்லையில் வசிக்கும் இவரது தாய் பேராசிரியை பத்மஜா அனந்தராமன், 35 புத்தகங்களைதமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார். தொடர்ந்து எழுதுகிறார்.1965ம் ஆண்டு சாகித்ய அகாடமி விருதினை பெற்றதற்காக, மதுரையில் நடந்த 5வது உலகத் தமிழ் மாநாட்டில் பாராட்டும் பொன்முடிப்பும் பெற்ற பி.ஸ்ரீநிவாச்சாரி தன் இலக்கிய படகை ஓட்டும் போது அதில் உ.வே.சா., கல்கி, பாரதி, மறைமலையடிகள், சேதுபிள்ளை, ராஜாஜி, ரசிகமணி டி.கே.சி., என அனைவரோடும் கைகோர்த்து நின்ற தகவல்களோடு தன் இலக்கிய, ஆன்மிக பயணம் குறித்து மனம் திறக்கிறார் லாவண்யா...பள்ளிப் படிப்பு முதல் தமிழில் முனைவர் பட்டம் பெற்ற பின்னும் மேடைகளில் பேசுவது பிடிக்கும். அதிலும் ஆன்மிக மேடை என்றால் இரட்டிப்பு உற்சாகம். வைணவம், ஆழ்வார்கள் குறித்து பேசுவதை விரும்புவேன். பிள்ளையார் வழிபாடு, வான்புகழ் வானமாமலை, விட்டவேஸ்வரர் தலபுராணம், ராஜகோபாலசுவாமி கோயில் தலபுராணம் என நான்கு புத்தகங்களை வெளியிட்டுள்ளேன்.ஆழ்வார்கள் பற்றி எளிமையான முறையில் சிறு கதைகளை சொல்லி அவற்றை சிறுவர்களுக்கான புத்தக தொகுப்புகளாக வெளியிட முயற்சி செய்து வருகிறேன். எந்த மதம் சமயத்தை சார்ந்தவராக இருந்தாலும் ஆன்மிகம் தான் அடிப்படை. சிறு வயது முதல் அதில் முழுமையான ஈடுபாடு கொண்டிருந்தால் வாழ்நாள் முழுவதும் தவறுகள் செய்யமாட்டார்கள், என்பது தான்என்நம்பிக்கை. அதைத் தான் மேடைகளிலும் அழுத்தமாக வலியுறுத்துகிறேன்.இளைய தலைமுறையினருக்கு ஆழ்வார்கள், சைவநுால்கள், ஒப்பு நுால்கள் எழுதிய பழம்பெரும் எழுத்தாளர்களை பற்றி பலருக்கும் தெரியவில்லை. இது குறித்த விழிப்புணர்வை இன்றைய இளைய தலைமுறையினரிடம் ஏற்படுத்துவது அவசியமாகி உள்ளது. திரையுகம், கம்ப்யூட்டர் யுகத்தில் இளைய தலைமுறையினர் தங்களின் எதிர்காலத்தை தொலைத்து விடக்கூடாது, என்பதில் சமூகம் அதிக அக்கறை கொள்ள வேண்டிய காலம் இது.சமூக முன்னேற்றம் சார்ந்து பொது மேடை நிகழ்ச்சிகள், பட்டிமன்றங்கள், விவாதங்களில்பங்கேற்பது, ஆன்மிக நாடகங்கள், நல்லொழுக்கம் சார்ந்த கட்டுரைகள் தொடர்ந்து எழுதுவதற்குகுடும்பத்தினர் அனைவரும் ஒத்துழைப்பு கொடுப்பதால் இன்னும் அதிக ஈடுபாடுடன் இதில் பயணிக்க முடிகிறது, என்கிறார்.இவரை வாழ்த்த jaylanvan2@yahoo.com

No comments:

Post a Comment