Monday, 2 October 2017

MAHATMA GANDHI - SOME THOUGHTS



MAHATMA GANDHI - SOME THOUGHTS




கடந்த வாரம் நான் எழுதிய வார பத்தி ஒன்று, நாடு முழுவதும் கடும் விவாதத்தை ஏற்படுத்தியது. அனைத்து தரப்பு மக்களிடையேயும் அது தொடர்பான விவாதம் நிலவி வந்தது. ஒவ்வொருவருக்கும் ஒரு பார்வை உண்டு. சிலர் நான் வலுவான முறையில் அக்கருத்தினை கூறியவன் என்றும் வேறு சிலர் முட்டாள்தனமாக நான் கருத்தைக் கூறி முடிவுக்கு வந்துவிடுவதாகவும் கூறினர். சிலர் இத்துடன் எனது அரசியல் வாழ்க்கையும் முடிவுக்கு வந்துவிடும் என்றும் கணித்தனர்.
எனக்கு வெறுப்புகலந்த எண்ணற்ற மெயில்கள் வந்தன. எனது வாட்ஸ்அப் பாராட்டியும், மோசமாக திட்டியும் பலவித எதிர்வினைகளுடன் கூடிய செய்திகளால் நிரம்பியிருந்தது. தொலைக்காட்சி சானல்கள் முடிவேயில்லாமல் விவாதித்துக் கொண்டிருந்தன. செய்தித்தாள்கள் தலையங்கத்தை எழுதிக் கொண்டிருந்தன. மூத்தபத்திரிக்கையாளர்கள் கட்டுரைகளை எழுதிக் கொண்டிருந்தனர். ஆனால் நான் அமைதியாக இருந்தேன்.

எனது கட்டுரை தேசத்தந்தையான மகாத்மா காந்தியைப் பற்றியதல்ல. ஆனால், சுதந்திர காற்றை சுவாசிக்க இந்தியர்களுக்கு அதிகாரத்தை வாங்கித் தந்த அந்த மகாத்மாவைப் பற்றி ஒரு குறிப்பு அதில் உள்ளது. அவர் மகாத்மா காந்தி என அழைக்கப்படுகிறார். நான் காந்தியை பற்றி எழுதும் விமர்சன கருத்துக்கள் தேவையற்றது என்றும் அந்த மாமனிதரை இழிவுப்படுத்தும் வகையில் எழுதுவதாக சில விமர்சகர்கள் கூறினர். நீண்ட காலங்களுக்கு முன் இந்தியாவில் உள்ள எவரும் அவரைப் பற்றி பேசிவிட முடியும். அவரைப்பற்றி தெரிந்து கொள்ள முடியும். இந்தியாவின் பெருமகன்களில் ஒருவர் அவரைப் பற்றிக் கூறுகையில், “தனிப்பட்ட முறையில் காந்தியைப் பற்றி தெரிந்து கொண்ட பாகியசாலி நான். அவர் ஒரு பரிசுத்தமான மனிதர் என்றும், உயர்ந்த மனிதர் என்றும், துணிச்சல்மிக்கவர் என்றும் இந்த பூமியில் இதுவரை இல்லாத மேன்மைமிகு மகாத்மாவாகவும் இருந்தார் என உங்களுக்கு என்னால் கூற முடியும். அவர் மனிதர்களுக்குள் சிறந்த மனிதர், வீரர்களுக்குள் ஒரு சிறந்த வீரர். தேசபக்தர்களில் ஒரு சிறந்த தேசபக்தர். அவர் மூலம் இந்திய மனிதம் உன்னதமான நிலையை அடைந்துள்ளது எனக் கூட நாம் கூறிவிட முடியும்.” இந்த வார்த்தைகளை கூறியவர் மற்றொரு சிறந்த மனிதரான கோபால கிருஷ்ண கோகலே ஆவார்,

எனது கட்டுரை இழிவுபடுத்தும் வகையில் இருந்ததாக சிலர் கருதுகின்றனர். அது உண்மையா? மற்றொரு நாள் அதைப் பற்றி நான் விவாதிப்பேன். ஆனால், நான் எப்போதும் மதித்துப் போற்றும் ஒரு தனி நபர் உண்டென்றால் அவர் காந்தி மட்டும் தான். நான் சமய மரபுகளை பின்பற்றுபவன் அல்ல. அதுபோலவே, நான் கண்ணை மூடிக்கொண்டு ஆதரிப்பவனும் அல்ல. ஆனால், பிரிட்டிஷ் அரசை எதிர்த்து இந்தியர்களை எழுச்சி கொள்ள செய்வதில் வெற்றி பெறச் செய்த பெருமைக்கு தகுதியுடையவர் ஒருவர் உண்டென்றால் அவர் காந்தியடிகள் மட்டும் தான் என்பதாகவே நான் கருதுகிறேன். அது போன்றே இந்தியாவின் கூட்டு மனசாட்சியை தட்டியெழுப்பியவர் என்றால் அதுவும் மகாத்மா காந்தி மட்டுமே. அதனை அவர் வழக்கத்துக்கு மாறான முறையில் செய்தார். வரலாறு மற்றும் கலாச்சாரங்கள் முழுவதும் வன்முறைகளால் நிரம்பி வழியும் போது காந்தியடிகள் அதனை மற்றொரு வழியில் நடைமுறைப்படுத்தினார். வன்முறையில்லா முறைகளை தனது வாழ்வில் நடைமுறைப்படுத்தியதோடு, அவற்றை பிரச்சாரமும் செய்தார்.

ஒரு காலத்தில் அவர் வன்முறைக்கு ஆதரவாளராக இருந்தார் என்பது தற்போதைய தலைமுறையினருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவரே இதனை ஒப்புக் கொள்ளுகிறார். “நான் இங்கிலாந்திற்கு சென்ற போது, வன்முறையின் ஆதரவாளனாக இருந்தேன். அதன் மீது எனக்கு நம்பிக்கையும், வன்முறையில்லாமையின் மீது எந்தவித நம்பிக்கையும் இல்லாமல் இருந்தேன்”. ஆனால் ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாயின் எழுத்துக்கள் அவரை மாற்றியது. காந்தி கபடற்றவராக இருந்தார். “1906 இல் எனக்கொரு முக்கிய பணி வந்தது. வன்முறையில் நம்பிக்கை கொண்டு வாழும் மனிதர்களிடையே, வன்முறையற்ற, அமைதியான வாழ்க்கைமுறையை பற்றி எடுத்துறைக்கும் பணி அது.” என 1942 இல் எழுதினார்.
வன்முறை கவர்ச்சிகரமானது. உணர்ச்சிமிக்கதும் கூட. அது மனோவசியப்படுத்துவது. வரலாறு முழுவதும் வன்முறை நிகழ்ச்சிகள் நிறைந்துள்ளன. பல்வேறு காலக்கட்டங்களில் வன்முறை எப்படி மாறியுள்ளது என்றும் வரலாறு போதிக்கிறது. 


1917 இல் நடந்த ரஷ்ய புரட்சி சமீபத்திய வளர்ச்சி. இந்த காலக்கட்டத்தில் உலகம் முழுவதும் மார்க்ஸிஸமும் கம்யூனிசமும் உலகம் முழுவதும் பூத்து குலுங்கியது. அது பல புத்திசாலியான தலைவர்களை உற்பத்தி செய்தது. மார்க்ஸிசம் பாட்டாளி வர்க்கத்தின் பெயரால், உழைக்கும் மக்களுக்காக, வர்க்கமற்ற சமூகத்தை உருவாக்க,வர்க்க எதிரிகளுக்கு எதிர்வினையாற்ற, முதலாளித்துவத்தின் அடிமைத் தனத்திலிருந்து மக்களை விடுவிக்க வன்முறை அவசியம் என நியாயப்படுத்துகிறது. ஜார் மன்னனை லெனின் அப்புறப்படுத்தியது சமீபத்திய வன்முறை முறையை மெய்ப்பித்துக் காட்டுகிறது. ஆனால், இது போன்ற உதாரணங்களால் கவரப்பட காந்தி ஒரு சாதாரண மனிதரல்ல.
அவர் வன்முறையற்ற போராட்ட முறைகளில் நம்பிக்கை கொண்டிருந்தார். சத்யாகிரக போராட்டம் ஆங்கிலேயரை எதிர்த்து போராடுவதற்கான தீப்பந்தமாக இருந்தது. மதன் லால் திங்க்ராவால் சர் கர்சன் வில்லி படுகொலை செய்யப்பட்ட போது ஒட்டுமொத்த இந்தியாவும் அதனை நியாயப்படுத்தி கொண்டிருந்த போது காந்தியடிகள் அதனை கண்டிக்க தயங்கவில்லை.
“கொலையாளிகள் கறுப்பர்களாகவோ வெள்ளையர்களாகவோ என யாராக இருந்தாலும் இந்தியா இத்தகைய கொலையாளிகளின் ஆதிக்கத்தால் எந்த பயனையும் பெறப் போவதில்லை. இது போன்றவர்களின் ஆதிக்கம் ஏற்படுமானால் இந்தியா பாழாகி வீணாகிப் போய்விடும்,” என்று காந்தியின் பேரன் ராஜ்மோகன் காந்தி தான் எழுதிய ’மோகன் தாஸ்’ என்ற நூலில் எழுதினார்.

 சவார்க்கர் காந்தியை கொலை செய்ய முயற்சி செய்ததாக கைது செய்யப்பட்டு பின்னர் போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் விடுதலை செய்யப்பட்டார். காந்தியின் சிறப்பு, பிரச்சாரங்களில் மட்டும் இருந்துவிடவில்லை. தான் பிரச்சாரம் செய்வதை தானே பின்பற்றுவதிலும், தான் பிரச்சாரம் செய்யும் கொள்கைகளில் உண்மை தன்மையுடன் இருத்தலிலுமே இருந்தது. தான் தனது சொந்த வாழ்வில் பின்பற்றாத எதையுமே அவர் பிரச்சாரம் செய்ததில்லை. இதன் காரணமாகவே அவரது குடும்பம் சில விவகாரங்களை சகிக்க வேண்டியதாக இருந்தது. அவரது மனைவி அதிக நெருக்கடிகளைத் தாங்க வேண்டிய நபராக இருந்தார். 

அவரது தென்னாப்பிரிக்க வாழ்நாட்களில் ஒரு சத்தியாகிரக போராட்டத்தில் காந்தி கைது செய்யப்பட்ட போது கஸ்தூரிபாய் நோய்வாய்ப்பட்டார். அவரது நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. அப்போது பரோலில் சென்று மனைவியை கவனித்துக் கொள்ளுமாறு அவருக்கு அறிவுரை கூறப்பட்டது. ஆனால் காந்தி அதனை மறுத்தார். நவீனகாலத்தில் எந்த கணவனும் எழுதாத ஒரு கடிதத்தை காந்தி எழுதினார். ‘இந்த செய்தியால் தனது இதயம் துண்டிக்கப்பட்டாலும், சத்யாகிரகம் தன்னை அவரிடம் செல்வதில் இருந்து தடுக்கிறது. தனது மனைவி தைரியத்தை காத்து, போதிய சத்தான உணவுகளை உண்டால் அவரால் பழைய நிலைக்கு திரும்பிவிட முடியும். ஆனால் அதிர்ஷ்டம் வேறு மாதிரி இருந்தாலும், அவர் நான் அருகில் இருக்கும்போது இறந்தால் எப்படி இருக்குமோ அதே மனநிலையை நான் இல்லாத போதும் கொண்டிருக்கவேண்டும்,’ என்று எழுதினார்.”

அவரது மகன் ஹரிலால், தனது நடவடிக்கைகளால் கசப்பான உணர்வை ஏற்படுத்தினார். உண்மையில் பிற்காலத்தில், ஹரிலால் தனது தந்தையிடம் மிகுந்த கோபத்துடனும், அவருடனான உறவை துண்டித்துக்கொண்டார். தனது தந்தையார் தனது கல்வியை அலட்சியப்படுத்தினார் என்பதுடன் தன்னை இங்கிலாந்துக்கு சென்று, தான் விரும்பியபடி சட்டம் படிக்க அனுமதிக்கவில்லை என்பதிலும் காந்தியடிக மீது கடும் கோபத்தில் இருந்தார். ஒவ்வொரு தந்தையரும், ஹரிலால் தனது தந்தை காந்திக்கு எழுதிய கடிதத்தில் எழுதப்பட்ட ஒரு வரியை படிக்க வேண்டும். “நீங்கள் எங்களை அறிவில்லாதவர்களாக உருவாக்கியுள்ளீர்கள்.” இதிலிருந்து, ஒரு தந்தையாக காந்தியடிகள் தோற்றுப் போனார் என ஒருவர் கூறிவிட முடியும். ஆனால் உண்மை என்னவெனில், காந்தியடிகள் தனது மகனுடைய விவகாரத்தில் கூட சமரசம் செய்து கொள்ளத் தயாராக இல்லை என்பதே. ஒவ்வொருவருடனும் அவர் கண்டிப்பாக இருந்தாரென்றால், தனது மகனிடம் கூட அவர் அவ்வாறே இருந்தார்.

சமகால இந்தியாவில், ஒவ்வொரு அரசியல்வாதிகளும் தங்கள் பிள்ளைகளை மட்டுமே ஊக்குவித்து வரும் நிலையில் காந்தியடிகள் ஒரு ஒளிரும் உதாரணமாக இருந்து வருகிறார். அனைவரும் சமம் என்றும் சமமாகவே பாவிக்கப்பட வேண்டும் என்றே அவரது கருத்தாக இருந்தது. இங்கிலாந்திற்கு சென்று கல்வி உதவித் தொகை பெற்று சட்டம் படிக்க, ஹரிலாலை விட சஹன் லாலே தகுதியானவர் என்பதே அவரது கருத்தாக இருந்தது. அதனால் தான் சஹன் லால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
காந்தியடிகள் எளிமையானவராக இருந்தார். அவர் சிக்கலான நபராக இருக்கவில்லை. அவரது மெய்மை வெள்ளை அல்லது கறுப்பாக இருந்தது. அவரது வாழ்க்கையில் சாம்பல் நிறத்துக்கு இடம் இல்லாமல் இருந்தது. அவரை பொறுத்த வரை சத்தியம் என்பது ஒரு சமூகம் மட்டுமல்லாமல் தனி நபருக்கும் கூட உண்மையான சோதனையாக இருந்தது. 

ஆனால், துரதிருஷ்டவசமாக சத்தியம் என்பது பின்னிருக்கைக்கு தூக்கி வீசப்பட்டு, விமர்சனங்கள் எல்லாம் இழிவுபடுத்தும் சொற்களாக திரித்துக் கூறப்படும் காலக்கட்டத்தில் நாம் இருக்கிறோம். காந்தி எப்போதுமே சிறந்தவராக இருந்தார். அவர் சிறந்தவராகவே தொடருவார். ஒரு கட்டுரை வரலாற்றில் அவருக்குள்ள இடத்தை குறைத்துப் போட்டுவிட முடியாது. மாறாக, அவரது காலத்தையும், வாழ்வையும் தொடர்ந்து ஆய்வு செய்யப்படும் போது, வரலாறு மேலும் செறிவூட்டப்படும். விவாதம் அதனடிப்படையிலேயே தொடர வேண்டும்.
கட்டுரையாளர்: அசுடோஷ்

No comments:

Post a Comment