Sunday, 16 October 2016

MUTHURAMAN நவரச திலகம் நடிகர் முத்துராமன் மறைந்த நாள் 16 அக்டோபர் , 1981

MUTHURAMAN நவரச திலகம் 
நடிகர் முத்துராமன்
மறைந்த நாள் 16 அக்டோபர் , 1981






நடிகர் முத்துராமன்
- R.P.ராஜநாயஹம்

கிரிக்கெட்டில் ஃபார்ம் போல சினிமாவிலும் நடிகர்கள் ஃபார்ம் வரும்போது பிரமாதமாக கலக்குவார்கள். முத்துராமன் நாடக நடிகர். சிறு கதாபாத்திரங்களில் தான் சினிமாவில் ஆரம்பத்தில் நடித்தவர். 

1956ல் ரங்கூன் ராதா படத்தில் ஒரு வக்கீல் ரோலில் வருவார்.
சகஸ்ரராமத்தின் சேவாஸ்டேஜ் நாடகங்களில் நடித்திருக்கிறார்.
வைரம் செட்டியார் நாடக கம்பெனியின் நடிகர். சினிமா வாய்ப்புக்காக முயற்சித்தவர்.

ஜூபிடர் சோமுவின் அஸ்தமன படம் அரசிளங்குமரி(1961)யில் எம்ஜிஆரின் ஸ்டண்ட் நடிகர் கே.பி.ராமகிருஷ்ணனுக்கு ஒரு ரோல் கிடைத்த போது அந்த ரோலை அவர் நாடக நடிகர் முத்துராமனுக்கு பெருந்தன்மையுடன் விட்டுக்கொடுத்தார். 

எம்.ஜி.ஆருடன் ஏற்றம் இறைத்துக்கொண்டே ’தந்தனத்தானே ஏலேலோ தந்தனத்தானே ஏலேலோ பாட்டில் சீர்காழியின் “ வேலை செஞ்சால் உயர்வோம் என்ற விவரம் மண்டையில் ஏறனும்” வரிக்கு முத்துராமனின் performance எம்ஜிஆர் தேஜஸான அழகுக்கும் அவருடைய நடிப்புப்பாணிக்கும் சற்றும் பொருந்தாமல் under acting என்ற அளவில் இருப்பதை இன்றும் காணமுடியும். எம்.ஜி.ஆருடன் ஒரு பாடல் காட்சியில் நடித்த பெருமை மட்டும் தான் அன்று.


ஸ்ரீதர் நெஞ்சில் ஓர் ஆலயம்(1962) படத்தில் வாழ்வு கொடுத்தார்.
போலீஸ்காரன் மகள் படத்தில் ’இந்த மன்றத்தில் ஓடி வரும் இளம் தென்றலைக் கேட்கின்றேன்’பிபிஎஸ் ஜானகி மாஸ்டர்பீஸ் பாடலில் கூட ’ பரவசம்’ உணர்வை கண்ணை செயற்கையாக உருட்டி பூரிப்பை விசித்திரமாக வெளிப்படுத்துவார்.

”சுமைதாங்கி” படத்தில் ஜெமினி கணேசனுக்கு அண்ணனாக நடித்தார்,ஜெமினியின் flair இவரை காணாமல் அடித்தது.
எஸ்.எஸ்.ஆரின்’வானம்பாடி’ படத்தில் ‘நில்,கவனி,புறப்படு’ பாடலில் அந்த முதல் மூன்று வரிக்கும் இவருடைய Expression இன்று பார்த்தாலும் சிரிப்பை வரவழைக்கக்கூடியது.

சினிமாவில் நாடக நடிப்பின் செயற்கைத்தன்மையை இவரால் ஆரம்பகாலத்தில் உதறவே முடியவில்லை.

ஒரு நாடக நடிகையைத்தான் முத்துராமன் காதல்திருமணம் செய்துகொண்டார். இயக்குனர் (தேவராஜ்) மோகனின் சகோதரி.

”எதையும் தாங்கும் இதயம்’’(1962) எஸ்.எஸ்.ஆர் விஜயகுமாரி படம்.சூலமங்கலம் ராஜலட்சுமி பாடிய”எனக்கும் உனக்கும் வெகு தூரமில்லை. நான் நினைக்காத நேரம் இல்லை” பாடல் இந்தப் படத்தில் தான். இதில் முத்துராமனுக்கு வயதான கதாபாத்திரம்.முதலியார் பாத்திரம். நன்றாக நடித்திருந்தார்.

முக்குலத்தோர் இனத்தைச் சேர்ந்த முத்துராமனுக்கு சினிஃபீல்டில் மொதலியார் என்றே பட்டப்பெயர்.முத்துராமன் முக்குலத்தோர் மாநாடுகளில் கலந்துகொண்ட ஜாதி அபிமானி.

காதலிக்க நேரமில்லை(1964) படத்தில் ஒரு அதிசயம். இவர் கிழவர் வேடம் போட்டு வருகிற நேரங்களில் பாலையா,நாகேஷ் இருவருக்கும் பிரமாதமாக ஈடுகொடுத்தார்.

”டெண்ட்?” என்று அந்த கிழவர் வேட ஆரம்ப வசனம் துவங்கி
”எனக்கு மட்டும் என்னய்யா” (பாலைய்யா ‘அதானே’ அதானே’ என்று ஒவ்வொரு வார்த்தைக்கும் தலையாட்டுவார்)

” ம் ஒரே பிள்ளை! ம்..”

நாகேஷிடம்” நஷ்டம் வந்தா கூட நான் கவலைப் படமாட்டேன்”

’’அசோக் இவங்களை வெளியெ அனுப்பி கதவ சாத்து”

கலக்கிவிடுவார்!



பாலைய்யாவை முத்துராமன் படுத்தும் பாடு.

இதே போல் தான் ’எதையும் தாங்கும் இதயம்’ படத்தில் எம்.ஆர்.ராதாவை படாத பாடு படுத்துவார். ஒரு நாயை ட்ரீட் பண்ணுவது போல “ச்சீ..ச்சீ..போய்யா” என்பார் முத்துராமன்.எம்.ஆர். ராதாவுக்கு கேட்கவேண்டுமா? கல்லையெடுக்கும் ஆளைப் பார்த்த நாய் ஈனமாக முனகல் குரல் கொடுத்து தவிக்குமே, அதே போல முத்துராமனிடம் பம்முவார்.

சிவாஜியுடன் 
“ அன்னை இல்லம்””
பார் மகளே பார்””
திருவிளையாடல்” 
“கர்ணன்” 
”பழனி” என்று ஆரம்பித்து பின் பெரும்பாலான படங்கள்.. 

ஊட்டி வரை உறவு,
சிவந்தமண்,
அருணோதயம்,
இருதுருவம், 
சொர்க்கம், 
எங்கிருந்தோ வந்தாள்,
மூன்று தெய்வங்கள், 
ராஜராஜசோழன்,
வைரநெஞ்சம்,
அவன் தான் மனிதன்...இன்னும்..இன்னும்

ஜெய்சங்கர் படங்களில் சப்போர்ட்டிங் கேரக்டர் ரோல் செய்த இவருக்கு நல்ல பேர் கிடைத்தது.
 ’வீட்டுக்கு வீடு’ படம் தவிர.ஏனென்றால் அந்தப் படத்தில் லட்சுமிக்கு ஜோடியாக ஜெய்சங்கர் அம்மாஞ்சியாக அட்டகாசமாக நடித்திருப்பார்.பஞ்சவர்ணக்கிளியில் ரெட்டை வேடத்தில் ஜெய் நடிப்பு இவரை விட நன்றாகவே இருக்கும்

பெண் தெய்வம்,
கண்ணன் வருவான்,
நிலவே நீ சாட்சி,
சூதாட்டம், 
மாணவன் போன்ற படங்களில் முத்துராமன் இனணந்து நடித்தார். 

’முத்துராமன் தான்யா நல்லா நடிச்சிருக்கான்’ என்று தரை டிக்கட் ரசிகர்கள் படம் முடிஞ்சி தியேட்டரை விட்டு வெளியே வரும்போதே சொல்வார்கள்.

AVM ராஜனுடன் 
‘’ பூவும் பொட்டும்’’, 
”இருளும் ஒளியும்”
 பதிலுக்கு பதில்”

அதே காலங்களில் எம்.ஜி.ஆருடன் 
“கண்ணன் என் காதலன்” 
"என் அண்ணன்” 
”ஒரு தாய்மக்கள்”

ஜெமினியுடன்
’பூஜைக்கு வந்த மலர்’
 ’வாழ்க்கை படகு’’
அவளுக்கென்று ஓர் மனம்
’ ‘புன்னகை’’
சுடரும் சூறாவளியும்’ போன்ற படங்கள்.


பின்னால் தான் இவருக்கு தனிக்கதாநாயகனாக மார்க்கெட்டில் மதிப்பு வந்தது.
“மயங்குகிறாள் ஒரு மாது” ,
”தீர்க்க சுமங்கலி” 
,’‘உறவு சொல்ல ஒருவன்”,
திக்கு தெரியாத காட்டில்”, 
சூரிய காந்தி”,

நடிகர் சிவகுமாரின் மனைவியும் சூரியா,கார்த்தி இருவரின் தாயாருமான லட்சுமி அம்மணிக்கு அந்த காலகட்டத்தில் முத்துராமனின் நடிப்பு மிகவும் பிடிக்கும். 

சிவகுமார் ’ என் மனைவி முத்துராமனின் ரசிகை’ என அப்போது குறிப்பிடுவார்.

Wig வைத்து நடிக்க ஆரம்பித்த பின் தான் முத்துராமனுக்கு லட்சணமே வந்தது. அது வரை பார்க்க ஏதோ உரித்த கோழி போலத்தான் இருந்தார்.
முத்துராமனுக்கு தலையில் Wig பிரமாதமாக பொருந்தும். பின்னால் சத்யராஜுக்கு Wig பொருந்தியதைப்போல. 

குரல் கூட சத்யராஜின் குரல் சில சமயங்களில் முத்துராமன் குரல் போல இருக்கும். கே.ஆர்.விஜயாவுடன் அதிகப் படங்களில் ஜோடியாக நடித்த நடிகர் முத்துராமன் தான்.

கே.ஆர் விஜயாவின் நூறாவது படம் நத்தையில் முத்து (1973) படத்திலும் ஜெயலலிதாவின் நூறாவது படம் திருமாங்கல்யம்(1974) இரண்டு படங்களின் கதாநாயகன் முத்துராமன் தான்.

’காசே தான் கடவுளடா’ படம் வெளியான போது ஒரு சுவாரசியம். தேங்காய் சீனிவாசன் கட்-அவுட் ஒன்று பிரமாண்டமாக பைலட் தியேட்டரில் வைக்கப்பட்டது. 

முத்துராமன் அதைப் பார்த்து விட்டு அந்தப்பட இயக்குனர் சித்ராலயா கோபுவிடம் போய் ‘ என்ன கோபு, இப்படி செய்யலாமா? நான் தான் படத்தின் கதாநாயகன். ஆனால் தேங்காய் கட் அவுட் வைத்தது எனக்கு அவமானம் இல்லையா’ என்று வருத்தப்பட்டார். ’படத்தில் தேங்காய்க்குத்தான் பயங்கர அப்ளாஸ்.இதற்கு நீங்கள் வருத்தப்பட்டு பயனில்லை’என்று கோபு சமாதானப்படுத்தினார்.

எம்.ஜி.ஆர்,
சிவாஜி,
ஜெமினி சாதனை முத்துராமனால் எட்டமுடியாத விஷயம்.
ஆனால்
அவர் 
,AVM ராஜன்,
ரவிச்சந்திரன்,
சிவகுமார் ஆகியோரை விட நல்ல நடிகர்.

பிபிஎஸ் பாடல்களில் இவருக்கு வாய்த்தவை.
’நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்’
’முள்ளில் ரோஜா,கள்ளூரும் ரோஜா’
’மதுராம் நகரில் தமிழ் சங்கம்’
’சந்திப்போமா?சந்திப்போமா’
’போகப் போகத்தெரியும் இந்தப் பூவின் வாசம் தெரியும்’
’மௌனமே பார்வையால் ஒரு பாட்டு பாடவேண்டும்’
‘கனவில் நடந்ததோ கல்யாண ஊர்வலம்’
‘உன்னழகை கண்டு கொண்டால் பெண்களுக்கே ஆசை வரும்’
‘எங்கெல்லாம் உன் வண்ணம், அங்கெல்லாம் என் எண்ணம்’

எஸ்பிபி யின் பாடல்கள்

‘சம்சாரம் என்பது வீனண’
‘கேட்டதெல்லாம் நான் தருவேன்,எனை நீ மறவாதே’ (எஸ்.பி.பி மனைவிக்கு பிடித்த பாடல்)
’நான் என்றால் அது அவளும் நானும்’
கே.ஜே.ஜேசுதாஸ் பாடல்
‘மோகனப் புன்னகை ஊர்வலமே, மன்மத லீலையின் நாடகமே’
‘மலைச்சாரலில் இளம்பூங்குயில் அதன் மார்பினில் ஒரு ஆண் குயில்’
‘இனங்களிலே எந்த இனம் பெண்ணினம்’
கதாநாயகனாக மார்க்கெட்டில் இருந்து இவருடைய சரிவும் மோசமாய்த்தான் இருந்தது.

‘நினைவில் ஒரு மலர்’ போல 90% சூட்டிங்,எடிட்டிங் நிறைவடைந்த நிலையிலும் எத்தனையோ படங்கள் முடிக்கவே முடியாமல் பரிதாபமாய் முடங்கிப்போய் விட்டன! ஃபைனான்சியர்கள்,வினியோகஸ்தர்கள் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓடி ஒளிந்தார்கள். ஆறுமுகம் செட்டியார் போல எத்தனையோ தயாரிப்பாளர்கள் நொடித்துப் போனார்கள்.

முத்துராமனை வைத்து ‘உயிர்’(1971), ‘எங்கள் குல தெய்வம்’(1974) போன்ற படங்கள் இயக்கிய பி.ஆர்.சோமு ‘நினைவில் ஒரு மலர்’படத்தில் இவரை கதாநாயகனாகவும் ரவிச்சந்திரனை இரண்டாவது கதாநாயகனாகவும் வைத்து படம் இயக்கி விட்டு பிசினஸ் செய்ய முடியாமல் சலித்து
1980ல்புலம்பினார். “இவன் ஒரு சப்பை, அவன் ஒரு லாப்பை. விளங்குமா?”

அதே நேரம் முத்துராமன் நியூ காலேஜில் படித்துக்கொண்டிருந்த மகன் கார்த்திக்கை (அப்போது கார்த்திக் பெயர் முரளி)தயாரிப்பாளராக்கி ‘பணம்,பெண்,பாசம்’ படம் எடுத்து வெளியிட்டார்.

மகன் கார்த்திக் பாரதிராஜா படத்தில் கதாநாயகனாக ஒப்
பந்தமானார். இவர் வில்லனாக ரஜினி படம் ‘போக்கிரிராஜா” வில் நடிக்க ஆரம்பித்தார். சரி இவரும் ஒரு ரவுண்டு வரப்போகிறார் என்றே எல்லோரும் எண்ணியிருந்தார்கள்.

கார்த்திக் நடித்து ‘அலைகள் ஓய்வதில்லை’ வெளியாகி சக்கைப்போடு போட்டது.
முத்துராமன் ஊட்டிக்கு ஒரு பட சூட்டிங் போனவர் அதிகாலை ஜாக்கிங் போகும்போது உயிர் விட்டார். ( ஒரு படத்தில் நாகேஷ் வசனம்”உயிரை விட்டா ஊட்டியில் தான் உயிரை விடனும்”)

வெறொரு படத்திற்காக வந்திருந்த கமல் ஹாசன் தான் கீழே விழுந்து கிடந்த முத்துராமனைப் பார்க்க நேர்ந்தது. அவர் உடல் தூக்கியபோது அவ்வளவு திடகாத்திரமாக இருந்ததை கமலால் உணரமுடிந்திருக்கிறது.
சிவகுமார் இது குறித்து தான் எழுதிய ’இது ராஜபாட்டையல்ல’ புத்தகத்தில் ’சட்டென்று எழுந்து தன் வெடிச்சிரிப்புடன் முத்துராமன் ‘நல்லா ஏமாந்தீங்களா” என சொல்லமாட்டாரா’ என்று தனக்குத் தோன்றியதாக எழுதியிருக்கிறார்.

ரஜினி படம் இவருக்கு வேறொருவர் டப்பிங் பேசி வெளியானது.
முத்துராமனின் திடீர் மரணத்தின் போது அதிர்ச்சி தான். அதே காலகட்டத்தில் தான் சாவித்திரி, கண்ணதாசன் மரணங்களும்.
கே.ஆர் விஜயா இன்றும் தன்னை மிகவும் பாதித்தவிஷயம் முத்துராமனின் திடீர் மரணம் தான் என்பார்.


எம்.ஜி.ஆர்.சிவாஜி,ஜெமினி,எஸ்.எஸ்.ஆர், அவர்களுக்கு பின் வந்த
AVM ராஜன்,ஜெய்சங்கர்,ரவிச்சந்திரன் என்று எல்லா கதாநாயகர்களுக்கும் Second Hero வாக நடித்தே வாழ்வின் பெரும்பகுதியை கழித்தவர் முத்துராமன். 

இந்திப் படங்களில் ராஜ்குமார் இப்படி குணச்சித்திர கதாபாத்திரங்கள் செய்தவர்.நெஞ்சில் ஓர் ஆலயம் இந்தியில் முத்துராமன் ரோல் அவர் தான் செய்தார். வாழ்க்கை படகு இந்தியில் கூட முத்துராமன் ரோல் ராஜ்குமார் தான்.

ஹீரோவாய் சினிமாவில் கிடைக்கும் luxury அசாதாரணமானது. அதோடு அவர் மகன் கார்த்திக் சொன்னது போல ஹீரோ நடிகனின் வாழ்வு Erotic ஆக அமைந்தே தீரும்.


ஆனால் பாவம் முத்துராமன் தொழில்ரீதியாக மட்டுமல்லாமலும் கூட துர்பாக்கியசாலி. தமிழில் மற்ற கதாநாயகர்களை விடவும்.
எஸ்.எஸ்.ஆர் இன்று 92 வயதில் வாழ்ந்துகொண்டிருக்கிறார். (என்னிடம் திலகர் மருது 2002 ஆம் ஆண்டு எஸ்.எஸ்.ஆருக்கு 80 வயது என்று சொன்ன போது நம்பவே முடியவில்லை.)

AVM ராஜனுக்கு இன்று 80 வயது. அல்லேலூயா! ஏசுவின் அடிமை! பெந்தகோஸ்து கிறிஸ்தவ போதகராய் வெள்ளுடையில் பிரச்சாரம் செய்துகொண்டு.... மகமாயி..மகமாயி..என்று சினிமாவில் ஒவ்வொரு டயலாக்கிலும் சொன்னவர் இன்று ...அல்லேலூயா.. 

அல்லேலூயா..உம்மை ஜெபிக்கிறோமைய்யா.. ஏசுவின் அடிமை...
இப்ப சத்தத்தையே காணோமே. ஒருவேளை தாய்மதம் திரும்பிவிட்டாரா??

எம்ஜிஆருக்கு சாகும்போது official age 70!
சிவாஜி மரணமடைந்த போது 74 வயது.
ஜெமினி கணேஷ் 85 வயதில் இறந்தார்.
ஜெய் சங்கருக்கு சாகும்போது 62 வயது.
ரவிச்சந்திரன் மரணம் 71 வயதில்.

52 வயதில் வாழ்க்கையை முடிக்க முத்துராமன் நோயாளியுமல்ல.
அலைகள் ஓய்வதில்லை தவிர்த்து மகன் கார்த்திக் நடித்த படங்களை பார்க்கக் கொடுத்து வைக்கவில்லை.

கார்த்திக் சிவாஜி மகன் பிரபுவை விடவும் சிறந்த நடிகன்.
சிவகுமார் தன் மகன்களின் சிறப்பைக் கண்டு களிக்கும் பேறு பெற்றிருப்பது போல முத்துராமனுக்கு வாய்க்கவில்லை.

அப்போது முதலமைச்சர் எம்.ஜி.ஆர் இரங்கல் : "அரசியல், சமுதாயத்தொண்டு என்றெல்லாம் முத்துராமனைப்பற்றி பேச ஒன்றும் இல்லையென்றாலும் கூட ‘நட்பு,பழகும் தன்மை’ இவற்றைப் பொறுத்தவரை ஒரு சகாப்தம் மறைந்து விட்டது என்றே சொல்லவேண்டும்”

- R.P.ராஜநாயஹம்

இவரைப்பற்றி தமிழ் சினிமாவில் எப்படியாவது முன்னேறணும்னு துடி துடித்து அடக்கியவர் ஆனால் பிலிம் நியூஸ் அனந்தன் போல் ஒரு தமிழ் சினிமாவின் என்சைக்கிளோ பீடியா அவர் 











ஒரு முறை ட்விட்டர் வலைத்தளத்தில் நாங்கள் காரசாரமாய் சண்டையிட்டது ஞாபகம் உள்ளது . தற்போது திருப்பூரில் வசிக்கிறார் என்று நினைக்கிறேன் 

No comments:

Post a Comment