Wednesday, 12 October 2016

குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று


குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று 







"அம்மா இந்த எர்த்ல நிறைய மாமா அத்தையெல்லாம் இருக்காங்களே? நாம அவங்களையெல்லாம் கூட்டிட்டு போய் அந்த குழந்தைகளுக்கு அப்பாம்மாவா இருக்கச் சொல்லலாமா?"
காயத்ரி சித்தார்த் 






ஒரு முறை ஆதரவற்ற குழந்தைகளைப் பற்றியும் உணவில்லாமல் துயரப்படுவோர் குறித்தும் அம்முவிற்கு விரிவாக எடுத்துச் சொல்ல நேர்ந்தது. படுக்கையில் சாய்ந்து போர்வையால் முகத்தை பாதி மறைத்தபடி அசைவின்றி கேட்டுக்கொண்டிருந்தாள். "இதையெல்லாம் புரிந்து கொள்ளும் வயதா இவளுக்கு? 5 வயதுக் குழந்தையிடம் வாழ்வின் கொடூர முகங்களை இப்போதே ஏன் அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறேன் நான்?" என்று புத்தியில் உறைக்கவும் சட்டென நிறுத்திக் கொண்டேன். 


இரண்டு நிமிடங்கள் கடந்திருக்கும்.. திடீரென ஒரு விம்மலோடு எழுந்தவள், பாய்ந்து வந்து என் கழுத்தைக் கட்டிக் கொண்டு கதறி அழ ஆரம்பித்தாள். நான் திகைத்து சமாதானப்படுத்தக் கூட வார்த்தையற்று அமர்ந்திருந்தேன். தேம்பி அழுது முடித்தவள், கண்கள் சிவந்து கன்னங்களில் கோடாய் கண்ணீர் வழிந்திருக்க,

" ஏம்மா, ஏன் அவங்களுக்கு அப்பாம்மா இல்ல? அவங்க நைட் யார் கூட தூங்குவாங்க? யார் அவங்களுக்கு சாப்பாடு செஞ்சு தருவாங்க? அவங்ககிட்ட ஒரு டாய் கூட கிடையாதா? பார்பி டாலெல்லாம் அவங்க பாத்ததே இல்லியா? 
எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்குதும்மா..
ரொம்ம்ம்ம்ம்ப. நாம எதாச்சும் செய்யலாம்மா, 
எதாச்சும் ஹெல்ப் பண்ணலாம். 

நம்மகிட்ட இருக்க காசெல்லாம் எடுத்துட்டு போய் அவங்களுக்கு என்ன டாய் வேணுமோ வாங்கித் தரலாம். 

அவங்க படுக்கறதுக்கு பெட் இல்ல, பார்க்கறதுக்கு டிவி இல்லன்னு சொன்னாங்கன்னா நம்ம வீட்டையே காலி பண்ணிக் குடுத்திடலாம். 

நாம அப்றமா எல்லாம் திரும்ப வாங்கிக்கலாம். 
அம்மா அவங்கல்லாம் எங்க இருக்காங்க? 
எனக்கு திரும்பத் திரும்ப அழுகையா வருது, 
இங்க ரொம்ப வலிக்குது" என்று தொண்டையைக் காண்பித்து விட்டு திரும்பவும் அழ ஆரம்பித்தாள்.

மேலும் சில நொடிகள் கழித்து, இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு கண்டுபிடித்து விட்டவள் போல பிரகாசமாய் நிமிர்ந்து கண்களைத் துடைத்துக் கொண்டு,

"அம்மா இந்த எர்த்ல நிறைய மாமா அத்தையெல்லாம் இருக்காங்களே? நாம அவங்களையெல்லாம் கூட்டிட்டு போய் அந்த குழந்தைகளுக்கு அப்பாம்மாவா இருக்கச் சொல்லலாமா?" என்றாள்.

இந்தப் பிள்ளைக்கு என்ன பதில் சொல்ல? 
இவளுக்கு ஒன்றும் புரிந்திருக்காதென்று நினைத்த என் மடமையை என்ன சொல்ல? 

நாளும் நாளும் ஒளி கூடி வளர்கிறாள். பதிலிறுக்க முடியாத கேள்விகளால் நிரம்பியிருக்கிறாள். 

நான்கு மொழிகளை கற்றுக் கொண்டு வருகிறாள். அவளது சொல்வங்கி பெரியோர்களின் சொற்களால் நிறையத் தொடங்கியிருக்கிறது. 

மடிக்கணினியையும், அலைபேசியில் யூடியூப், கூகுள் தேடலையும் தானாகவே இயக்கக் கற்றிருக்கிறாள். 

அறிவும், தகவல்களும் அவளின் குழந்தைமையை கொஞ்சம் கொஞ்சமாய் முழங்கையால் இடித்து வெளியே தள்ளிக் கொண்டிருக்கின்றனவோ என்று நான் வருத்தப்படாத நாளில்லை.

இத்தனையிருந்தும் அவள் உபயோகப்படுத்தும் சிம் இல்லாத சாம்சங் போனில் wifi என்றொரு விஷயமிருப்பது அவளுக்குத் தெரியாது! அவள் குறும்பு எல்லை மீறும் சமயங்களில் அவளுக்குத் தெரியாமல் wifi off செய்து வைத்து விடுவேன். எடுத்து யூடியூப் போட பலமுறை முயற்சி செய்துவிட்டு கோபமாய் வருவாள். 

"இந்த சாம்சங் வர மாட்டிங்குது. ஏன்னு கேளுங்க. 
திட்டுங்க. 
யூடியூப் வர சொல்லுங்க" என்று பொரிவாள். 

நான் அதை காதில் வைத்துக் கொண்டு அம்மனிடம் நேரடியாய் உரையாடும் பூசாரி போல பேசுவேன். 

பேசி முடித்து,
 "நீ கீர்த்துவை அடிச்சியாமே? 
பொம்மை தர மாட்டேன்னியாமே?
 சாம்சங் கோவமா இருக்காம் உம்மேல. 
நீ அவளைக் கொஞ்சினா தான் ஒர்க் ஆகுமாம்" என்றால், ஓடிப் போய் கீர்த்துவை கட்டிப் பிடித்து முத்தமழை பொழிவாள் :) 

மன்னிப்புக் கேட்பாள். 
சமயங்களில் நான் சாம்சங்கிடம் பேச மறுத்தால் 
அவளாகவே போனை அதட்டுவதும், கெஞ்சுவதும், கொஞ்சுவதும், 'உடைச்சிடுவேன் உன்னை' என்று மிரட்டுவதுமாக இருப்பாள்.

ஒரு முறை பள்ளி விட்டு வந்ததும் போனைக் கையில் எடுத்தாள். "மொதல்ல யூனிஃபார்மை மாத்து. 
இல்லன்னா போன் ஒர்க் ஆகாது" 
என்றுவிட்டு கிச்சனுக்குள் நுழைந்தேன். 

கொஞ்சம் கழித்து எதோ வேலையாய் பெட் ரூமிற்குள் நுழைந்தால், அரைகுறையாய் ஒரு ஃப்ராக்கிற்குள் தலையையும் ஒரு கையையும் மட்டும் நுழைத்துக் கொண்டு, சர்ச்சில் தொழுபவள் போல மண்டியிட்டு கையிரண்டையும் கோர்த்துக் கொண்டு, 

பெட்டின் மீதிருந்த சாம்சங்கிடம், 
"ப்ளீஸ் சாம்சங், இங்க பாரு. நான் டிரஸ் போட்டுகிட்டேன். சொல்றேனில்ல, ஏன் என்னை நம்ப மாட்டேன்ற?" 
என்று கெஞ்சிக் கொண்டிருந்தாள்! :))))

எங்கள் செல்லக் கண்ணம்மாவிற்கு இன்று ஆறாவது பிறந்தநாள். 

அதிஉன்னத மகளுக்கு அவள் அன்னையின் எளிய அன்புப் பரிசு "மயக்குறுமகள்". இவ்வருட புத்தக சந்தையில் வெளிவருகிறது. 

அவள் அளித்ததை போற்றிக் கொண்டாடி அவளுக்கே திருப்பியளித்திருக்கிறேன். 

பிறந்தநாள் வாழ்த்துக்கள் செல்வமே! 
இன்னும் இன்னுமென மகிழ்ந்திரு. 
என்றும் நலமுடன் வளமுடன், குன்றென செல்வமும், குன்றாப் புகழும், தேடிவரும் உறவும், நாடி வரும் நட்புமென நலமே சூழ வாழ்வாங்கு வாழ்ந்திரு. வாழ்க வளமுடன்.

#மயக்குறுமகள்







காலங்களில் அவள் வசந்தம் 
கலைகளில் அவள் ஒரு மழலை ஓவியம் 
- காயத்ரி சித்தார்த்
என் பட்டுக் கண்ணம்மா..

11.10.2016 - உலக பெண் குழந்தைகள் தினமாம். உலகம் முழுவதும் அனைவரும் தத்தம் பெண் குழந்தைகளைக் கொண்டாடிக் கொண்டிருக்கையில் நான் என் முதல் தேவதையை விடவும் உன்னிடமே என் கவனம் முழுவதையும் குவித்திருந்தேன். ஏனென்றால் ஏனைய பெண் குழந்தைகளை விடவும் அது உனக்கு அதிமுக்கியமான நாள்!
கடந்த ஒரு மாதமாய் "நான் பிக்காஜி போப் போறேன்" என்று சொல்லிக் கொண்டேயிருந்த நீ, அந்த ப்ரீ கேஜிக்குள் முதன் முதலாய் அடியெடுத்து வைத்தாய். உன் அக்கா பள்ளிக்குச் சென்ற முதல் தினம்.. இன்னமும் நேற்றுப் போல் என் நினைவிலிருக்கிறது. அதற்குள் நீயும் சிறகு விரிக்கப் பழகி விட்டாய். வாழ்த்துக்கள் என் செல்லமே!

அன்று நான் மிகவும் கலங்கினேன். 
உன் அக்கா எப்போதும் வீடு முழுவதும் நிறைந்திருப்பாள். வீட்டின் அத்தனை பொருளின் மீதும் அவளின் ஸ்பரிசமிருக்கும். ஒவ்வொரு நாளும் அத்தொடுகையை புதுப்பித்துக் கொண்டே இருப்பாள். அவள் பள்ளிக்குச் சென்றதும் அவள் அருகில் இல்லாத நான்கு மணி நேரத் தனிமையின் துயரை, அவள் பொம்மைகளோடும் வீட்டின் ஒவ்வொரு பொருளோடும் நான் பகிர்ந்து கொண்டேன். என்னைப் போலவே அவையனைத்தும் அவளுக்காக காத்திருப்பதைப் போல கற்பிதம் செய்து கொண்டேன்.
ஆனால்.. நீ அப்படியல்ல. வீட்டில் நான் எங்கிருந்தாலும் துணையெழுத்து போல நீயும் அருகிருப்பாய். நான் அமர்ந்தால் மடியில், நின்றால் இடையில், சாய்ந்தால் மார்பில், படுத்தாலோ பணிபுரிந்தாலோ அருகிலென கூடவே இருப்பாய். உன்னை குழந்தையென்றெண்ணாது என் அங்கம் போல, என் ஆடை போல, என் எண்ணம் போலவே உணர்ந்து வந்திருக்கிறேன் இத்தனை நாட்களும். நேற்று திடீரென உன்னை விலக்கி நான் மட்டும் நிற்க வேண்டியிருந்தது. இந்த நாளுக்காக உன்னைத் தயார் செய்ததை விடவும் நான் என்னைத் தயார் செய்து கொள்ளவே அதிகம் உழைத்தேன்.

நீ ஆர்வமாயிருந்தாய்.. எல்லாவற்றிலும் அக்காவின் எதிரொலி போலவே இருக்க விரும்பும் நீ,
அவளைப் போலவே பள்ளி செல்ல.. 
பாடம் கற்க.. 
ஆடிப் பாடி விளையாட..

பள்ளியில் நடந்ததென நாளும் ஒரு கதை சொல்ல விரும்பினாய். அக்காவைப் போலவே அழகாய் உடையணிந்து, பூச்சூடி, கடவுளை வணங்கி, பெரியோர்களிடம் ஆசி பெற்று, தந்தையின் மடியமர்ந்து அரிசியில் அகரமெழுதி, முதுகில் புதுப் பை மாட்டி தயாராகி, இரண்டரையடி உயர பூங்கொத்தாய் கண் நிறைத்து நின்றாய். வெள்ளிச் சிமிழிலிருந்து குங்குமம் தொட்டு உன் நெற்றியில் அரிசியளவு கீற்றிட்டு, உன் உச்சி முகர்ந்து முத்தமிடுகையில் உணர்ந்தேன்..

உவகையென்பதும் கர்வமென்பதும் பெரும்பேறென்பதும் வாழ்வின் அர்த்தமென்பதும் மகவே என்பதை. உன் குட்டித் தலைமேல் ஆசியெனப் படிந்த என் கரங்களிலிருந்து, பெருகிப் பெருகி இவ்வுலகு நிறைத்த விழைவுகளை நானே வியந்து பார்த்தபடியிருந்தேன். ஆனால் வியப்பெதற்கு?


அன்னையென்பவளின் ஆசைகள் அனைத்தும் எப்போதும் பேராசைகளாய் மட்டுமே இருக்க முடியும்.
பள்ளி சென்று, உன்னை பத்திரமாய் பார்த்துக் கொள்ளும்படி பலநூறு முறை அறிவுறுத்தி, நீ அழுதால் உடனே என்னை அழைக்கும்படி மீண்டும் மீண்டும் வற்புறுத்தி, தயங்கித் தயங்கி உன்னை ஒப்படைத்தேன்.
ஆசிரியை உன் தளிர்க்கையைப் பிடித்து உள்ளே அழைத்துச் செல்கையில் திரும்பி என் முகம் பார்த்து, கணத்திற்கும் குறைவாய் சின்னஞ்சிறு தயக்கமொன்றைக் காட்டி, பின் தெளிந்து உள்ளே சென்றாய். திரியில் பற்றிய நெருப்பு வெடியருகே வந்ததும் அணைந்தாற் போலிருந்தது. அவ்வளவு தானா?!
இதற்கா அத்தனை முகாந்திரங்கள்?! அட! பிள்ளையை முதல் முதலாய் பள்ளிக்கு அனுப்புவது என்பது எத்தனை எளிதான காரியமாயிருக்கிறது!! என்று வியந்து, அவசியமற்றதைப் பேசி, காரணமற்றுச் சிரித்து வீட்டருகே வந்தபோது தான், அலையெனப் பெருகி பெரும் திகைப்பொன்று முகத்தில் அறைந்தது.

எப்படி நான் மட்டும் வீட்டிற்குப் போவது? வீட்டிலிருக்கும் அத்தனைப் பொருளும் என்னைப் பரிதாபமாய் பார்த்திருக்க, நான் மட்டும் தன்னந்தனியே அந்த தனிமையை எப்படி சுமந்திருப்பது? 
இது என்ன அநியாயம்?
அன்னையென்றும், 
வயதில் உன்னை விட மூத்தவளென்றும், அறிவாளியென்றும், 
பொறுப்புள்ளவளென்றும் நான் பூட்டிக் கொண்டிருந்த அணிகள் அனைத்தும் ஐந்தாங்கல் ஆட்டமென பரந்து சிதற, உன்னை விடவும் சின்னஞ்சிறு குழந்தையாகி கண்ணீருடன் தலைகவிழ்ந்து, காரிலிருந்து இறங்க மறுத்து அடம்பிடித்தேன்.
"ம்ஹூம்.. என்னால வீட்டுக்குப் போய் தனியா இருக்க முடியாது. நானும் உங்க கூட ஆபீஸுக்கே வந்துடறேன். என்னைக் கூட்டிட்டுப் போங்க ப்ளீஸ்...." :)
ஆமாம்! நீ வளர்ந்து இதைப் படிக்கையில் சிரிப்பாய் தான். "அசட்டு அம்மாம்மா நீங்க" என்பாய். சொன்னால் சொல்லிக் கொள்! உன் நானாவும் கூட அதைத்தான் சொன்னார். என்னளவில் அம்மாவாயிருப்பதற்கும் அசடாயிருப்பதற்கும் பெரிய வித்தியாசங்கள் ஏதுமில்லை.

வீட்டிற்குள் நுழைந்ததும், படுக்கையறைக்குள் சென்று முகம் மறைத்து படுத்துக் கொண்டேன். குட்டிம்மா, அந்த அறையில் கடிகாரம் என்ற வஸ்து இருப்பதையும், அது 'திடும் திடுமென' இத்தனை சத்தமாய் ஒலிப்பதையும் நேற்று தான் முதல் முறையாய் உணர்ந்தேன் தெரியுமா?
அத்தனை அருகில், காதிற்குள் கேட்பது கடிகார ஓசையா, அல்லது என் இதயத் துடிப்பா என்றும் கூட திகைப்பாயிருந்தது.
'நீ அழுகிறாயோ.. 
என்னைத் தேடுகிறாயோ.. 
மொழி புரியாத ஆசிரியர்களிடம், கம்மிய குரலில் 
"அம்மா வேணும், 
அம்மாகிட்ட போனும்" என்று திரும்பத் திரும்ப கேட்கிறாயோ..

என்று கலங்கித் தவிக்கும் ஒரு மனதும், கீழ் வீட்டு நித்து துணைக்கு இருக்கிறாளே! நிச்சயம் அழ மாட்டாய் என்று திடமாய் நம்புமொரு மனதும்,
'கண்டிப்பாய் போன் வரும். 
போய் கூப்பிட்டு வர வேண்டியிருக்கும்' என்று உடைகளை மாற்றாமல் உட்கார்ந்து, போன் சைலண்டில் இருக்கிறதா, ரிங்டோன் வால்யூம் சரியாயிருக்கிறதா என்றெல்லாம் ஆராய்ந்து கொண்டு விசித்திரமாய் காத்திருக்கும் ஒரு மனதுமாய் திசைக்கொன்றாய் பிரிந்து நிற்கும் என்னை, நானே மெளனமாய் கை கட்டி நின்று வேடிக்கையும் பார்த்துக் கொண்டிருந்தேன்.
நீருக்குள் அமிழ்வதைப் போல கனத்த மெளனத்திற்குள் மெல்ல மூழ்கிக் கொண்டிருக்கையில், திடுமென அனைத்தையும் கலைந்தெறிந்து, எழுந்து சமையலறைக்குச் சென்றேன்.
எதிலாவது கவனம் செலுத்தினால் மனம் சீராகுமென்று நம்பி கூடையிலிருந்த பாத்திரங்களை எடுத்து அடுக்கத் தொடங்கினேன். ஒரு கிண்ணம் கை தவறி கீழே விழுந்த மறுநொடி, நீ விழித்து விடுவாயென்று நான் பதறி படுக்கையறை நோக்கி ஓடி வந்தேன். பாதி வழியில் யாரோ தடுத்தாற் போல திகைத்து நின்று கண்ணீர் மல்கினேன்.
பள்ளிி முடியும் வரை போன் எதுவும் வரவில்லை. 
நீ சமத்தாய் விளையாடிக் கொண்டிருப்பதை உன் ஆசிரியர்கள் படம் பிடித்து வாட்சப்பில் அனுப்பினார்கள்.

மகிழ்வதா?
வருந்துவதா?
என்று குழப்பமாயிருந்தது.
நீ திரும்பி வருவதற்காக காத்திருந்தேன்.. வீட்டருகே நெருங்கும் போதே பேருந்திலிருந்தபடி என்னைப் பார்த்ததும் உதடு பிதுக்கி விம்மினாய். நான் அள்ளிக் கொள்ள கை நீட்டியதும் பெரும் கேவலோடு தாவி வந்து, கண்ணீருடன் தோளில் சாய்ந்து கொண்டாய்.
"ஏண்டாம்மா அழற?"
"அம்மா வேணும்னு அழறேன்"
"தோ.. 
அம்மா வந்துட்டேன் பாரு. 
அழக் கூடாது. 
நாளைக்கு ஸ்கூல் போவியா மாட்டியா?"
"போவேன்..."
"அட! நாளைக்கு அழ மாட்டியா?"
"அழுவேன்.."
"டெய்லி அழுதுட்டே ஸ்கூல் போவியா?"
"ஆமா. அம்மா வேணும்னு அழுவேன்.."
"அச்சோ.. 

அம்மால்லாம் ஸ்கூலுக்கு வர முடியாதே கன்னுக்குட்டி. பெரியவங்களை எல்லாம் ஸ்கூலுக்குள்ள விட மாட்டாங்க"
"ப்பீஸ் அம்மா.. 
நீங்க குட்டியா ஆய்டுங்க. 
குட்டியாய்ட்டு என் கூட ஸ்கூலுக்கு வாங்க.. ப்பீஸ்.."

காயத்ரி சித்தார்த்






No comments:

Post a Comment