டை ரக்டர் கே.பாலசந்தர் -
அவன் ஒரு தொடர்கதை
டை ரக்டர் கே.பாலசந்தர் வாழ்க்கையில் சில சோக சம்பவங்கள் நடந்தன. அதன் விளைவாக அவர் படங்களில் சமூக சீர்திருத்தக் கருத்துக்களைப் புகுத்தினார்.
பொதுவாக பாலசந்தரின் படங்களில் பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். பெண்களின் பிரச்சினைகள் அலசப்படும். பெண் உரிமை வலியுறுத்தப்படும். சமூக சீர்திருத்த கருத்துக்கள் எடுத்துக் கூறப்படும்.
இதற்குக் காரணம் என்ன என்பது குறித்து பாலசந்தர் எழுதியிருப்பதாவது:-
எங்கள் குடும்பம் பெரிய குடும்பம்தான். அண்ணன் பாலசுப்பிரமணியன் மூத்தவர். அவருக்குப்பின் சேதுலட்சுமி, மங்களம், சரசுவதி என்ற மூன்று மூத்த சகோதரிகள். ஐந்தாவதாக நான். எனக்கு அடுத்து ஒரு தங்கை nஜயலட்சுமி.
நான் சின்னஞ்சிறுவனாக இருந்தபோதே எனது மூத்த சகோதரிகளான சேதுலட்சுமி, மங்களம், சரசுவதி ஆகியோருக்கு திருமணமாகிவிட்டது.
அதுவும் நான் பிறப்பதற்கு முன்பே மங்களம் அக்காவுக்குத் திருமணம் முடிந்து விட்டது. அப்போது அக்காவுக்கு வயது 8.
நான் பிறப்பதற்கு முன்பே திருமணமான மங்களம் அக்கா, அடுத்த ஆண்டே கணவனை இழந்து விட்டாள். 8 வயதில் திருமணம்; 9 வயதில் விதவை. பெயரோ மங்களம். என்ன வினோதம்?
சின்னஞ்சிறு வயதில் என் சகோதரிக்கு ஏற்பட்ட அந்த இழப்பு நெடுநாளாக என் நெஞ்சை கனக்க வைத்தது என்று பாலசந்தர் கூறியுள்ளார்.
இதெல்லாம் புரிய எனக்கு 13 ஆண்டுகளாயின. அவ்வளவு இடைவெளிக்குப் பிறகுதான் அதன் தாக்கம் முழுமையாக எனக்குத் தெரிந்தது.
என்னுடைய இளைய சகோதரி nஜயா, மும்பையில் தனது கணவர் சங்கருடன் வாழ்ந்து வந்தாள். அவளது கணவர் எல்.ஐ.சி.யில் மிகப்பெரிய பொறுப்பில் இருந்து வந்தார்.
அப்போது எனக்கு 27 வயது இருக்கும். என் தங்கைக்கு 25 வயது இருக்கும். அவளுக்கு இரண்டு பெண் குழந்தைகள்.
என் கணவருக்கு உடல் நலம் இல்லை. ஆஸ்பத்திரியில் சேர்த்திருப்பதால் உதவிக்கு நீ இங்கு வந்து சில நாட்கள் தங்கவும் என்று தங்கையிடம் இருந்து கடிதம் வந்தது. நானும் என் மனைவியும் புறப்பட்டுச் சென்றோம்.
மும்பை ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட என் மைத்துனருக்கு என்ன நோய் என்பதை என் தங்கையிடம் சொல்லவே இல்லை. நான் டொக்டரைப் போய்ப் பார்த்தேன்.
அவர் உங்கள் மைத்துனருக்கு கேன்சர். அவர் அதிக நாள் உயிரோடு இருக்கமாட்டார். இதை உங்கள் தங்கையிடம் சொல்லவில்லை. வேறு யாரிடமாவது சொல்ல வேண்டும் என்பதால் உங்களிடம் மட்டும் சொல்லி இருக்கிறேன். நீங்கள் அவரை இங்கிருந்து அழைத்துச்சென்று விடுங்கள். அவருக்கு என்ன மருந்து தந்தாலும் பயன் இல்லை. வீண் செலவு செய்யவேண்டாம் என்றார்.
டொக்டர் சொன்னதைக் கேட்டு எனக்கு தலை சுற்றியது. என்ன செய்வது என்று தெரியவில்லை. மனைவியிடம் சொல்லலாமா அல்லது தங்கையிடம் சொல்லி விடலாமா என்று தவித்தேன். ஏனென்றால் அப்போது எனக்கும் இள வயதுதானே.
வீடு திரும்பும்போது, வழியில் ரயில் நிலையத்தில் உட்கார்ந்து அழுதேன்.
பிறகு என் தங்கையை சந்தித்தபோது, டொக்டர் என்ன சொன்னார்... இன்னும் ஒரு வாரத்தில் வீட்டுக்கு அனுப்பி விடலாம் என்று என்னிடம் கூறினாரே...! என்றாள்.
என்ன சொல்வது என்று தெரியாமல் தவித்தேன்.
அவர்தான் ஒரு வாரத்தில் வந்து விடுவாரே! நீ நாலைந்து நாள் லீவு போட்டு விட்டு இங்கேயே இரு என்றாள்.
டொக்டர் சொன்னதை தங்கையிடம் சொல்லி, அவள் கணவரை ஆஸ்பத்திரியில் இருந்து அழைத்து வந்து விடலாம் என்று நான் எண்ணிக்கொண்டிருந்தபோது, அந்த சில மணி நேரங்களில் ஆஸ்பத்திரியில் எனது தங்கையின் கணவர் இறந்து போனார். எனக்கு இது பேரிடிபோல் இருந்தது. இதற்குமுன் எத்தனையோ துயர நிகழ்ச்சிகள் என் வாழ்க்கையில் நடந்திருந்தாலும் இதுதான் பேரிடியாக வந்து இறங்கியது.
இளம் வயதிலேயே விதவையான எனது தங்கையின் நிலையைக்கண்டு இடிந்து போய்விட்டேன்.
அங்கேயே காரியங்கள் எல்லாம் முடிந்தன. சில நாள் கழித்து மூட்டை முடிச்சுகளுடன் சென்னைக்குப் புறப்பட்டோம். நான்கு வயது, இரண்டு வயது என்று இரு பெண் குழந்தைகளோடு எனது வீட்டுக்கு வந்தாள் என் தங்கை.
என் மனைவிக்கு பெரும் பொறுப்பாகி விட்டது. பள்ளிக்குச் செல்லும் இரண்டு குழந்தைகளையும் பராமரிப்பது எப்படி என்று முதலில் சங்கடம் ஏற்பட்டாலும், பின்னர் எனது சகோதரியை அவளது சகோதரியாகவும், அவள் குழந்தைகளை தன் குழந்தைகளாகவும் ஏற்றுக்கொண்டாள்.
ஒவ்வொரு மனிதனுக்கும் பின்னே இனம் புரியாத சோகம் உள்ளது. அந்த சோகத்தின் தாக்கம் அவ்வப்போது வெளிப்படும்போதும் அது புதிய சிந்தனைகளை -சீர்திருத்தக் கருத்துக்களை அள்ளி வழங்குகிறது. எப்போதுமே அடிபட்டவனுக்குத்தானே அதிகம் வலிக்கும்.
எனது படங்களில் வந்த சீர்திருத்தக் கருத்துக்களுக்குப் பின்னணி என்ன என்பது இப்போது புரிகிறதா?
இவ்வாறு பாலசந்தர் எழுதியுள்ளார்.
No comments:
Post a Comment