Thursday, 18 August 2016

ரியோ ஒலிம்பிக் போல்வால்ட் இறுதிப் போட்டி பிரேசில் ரசிகர்கள் கூச்சல்- கடும் கண்டனம்


ரியோ ஒலிம்பிக் போல்வால்ட் இறுதிப் போட்டி
பிரேசில் ரசிகர்கள் கூச்சல்- கடும் கண்டனம் 







ரியோ ஒலிம்பிக் போல்வால்ட் இறுதிப் போட்டியில் பிரான்ஸ் நாட்டின் கடந்த ஒலிம்பிக் சாம்பியனை பிரேசில் ரசிகர்கள் கடுமையாக அவமானப்படுத்தி அழச்செய்தது சர்ச்சையாகியுள்ளது.

ஒலிம்பிக் போட்டிகளில் பொதுவாக எந்த நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவருக்கு ஆதரவுக்குரல் எழுவதைத்தான் பார்த்திருக்கிறோம், ஆனால் ரியோ ஒலிம்பிக்கில் பிரான்ஸ் நாட்டு போல்வால்ட் வீரர் ரெனோ லாவிலெனி என்பவரை பிரேசில் ரசிகர்கள் பதக்கமளிப்பு விழா வரை கேலிக்கூச்சலிட்டு அவமானப்படுத்தியது கசப்பான கலாய்ப்பு அனுபவத்தை ஏற்படுத்தியுள்ளது.

போல்வால்ட் இறுதிப் போட்டியில் பிரேசில் அறிமுக வீரர் தியாகோ பிராஸ் டா சில்வா இறுதியில் ரெனோ லாவிலெனியை எதிர்கொண்டார். இவர் லண்டன் ஒலிம்பிக்கில் போல்வால்ட் தங்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக டா சில்வா, லாவிலெனி இருவரும் 5.97மீ என்ற இலக்கைக் கடந்தனர், இது லாவினெலி லண்டன் ஒலிம்பிக்கில் தாண்டிய உயரமாகும். இதனையடுத்து இறுதிப் போட்டியில் 6.03மீ உயரத்தைத் தாண்ட எல்லை நிர்ணயிக்கப்பட்டது. இதில் முதல் முயற்சியில் பிரேசில் வீரர் டா சில்வா, பிரான்ஸ் வீரர் லாவினெலி ஆகிய இருவருமே தோல்வி அடைந்தனர். இதனையடுத்த ஆட்டத்தில் பிரேசில் வீரர் டா சில்வா எளிதில் 6.03 மீ உயரத்தைத் தாண்டி தங்கத்திற்கு அருகே தன்னை கொண்டு சென்றார். 

அப்போதுதான் முந்தைய சாம்பியன், 29 வயது பிரான்ஸ் வீரர் லாவிலெனி தாண்ட தனது மார்க்கிற்குச் சென்றபோது மரியாதை குறைவான சில நிகழ்வுகள் நடந்தன.


அதாவது போல்வால்ட்டில் தங்கள் நாட்டுக்கு பதக்கமே கிடைக்காது என்ற நிலையில் தங்கம் வெல்வதற்கு அருகில் தங்கள் நாட்டு வீரர் டா சில்வா இருக்கும் போது லாவிலெனியை வெற்றி பெற விடக்கூடாது என்ற ரீதியில் மைதானத்தில் ரசிகர்கள் கடும் கேலிக்கூச்சல் போட்டனர். அவர் தனது ரன் மார்க்கிற்கு வந்து ஆடத் தயாரான போது கேலிக்கூச்சல் கடுமையாக அதிகரித்தது, லாவிலெனி தனது கட்டை விரலை தாழ்வாகக் காண்பித்து தனது அதிருப்தியை வெளியிட்டார்.

அவரது கவனத்தை சிதைக்கும் குறிக்கோளுடன் அவருக்கு எதிராக பிரேசில் ரசிகர்கள் கூச்சல் போட தனது 3 தாவல் முயற்சிகளிலும் தோல்வி அடைந்து கடும் ஏமாற்றத்துடன் வெள்ளிப்பதக்கம் வென்றார். பிராஸ் டா சில்வா தங்கம் வென்றார். 

வெள்ளிப்பதக்கம் பெற்றது கூட அவருக்கு வருத்தமில்லை தான் கேலி செய்யப்பட்டது அவரை காயப்படுத்த தன் அணியினருடன் இணைந்த போது வேண்டா வெறுப்பாக பிரான்ஸ் கொடியை தூக்கி அசைத்தார். அப்போதும் அவரை கேலி செய்யும் விதமான கூச்சல்கள் குறையவில்லை. 


ஆனால் இதோடு பிரேசில் ரசிகர்கள் நிறுத்தியிருந்தால் பரவாயில்லை என்று கூறலாம், ஆனால் பதக்கம் வழங்கும் மேடைக்கு இவர் சென்ற போது கூட வெள்ளிப்பதக்கத்துக்குரிய லாவிலெனி பெயரை அறிவித்தவுடன் மீண்டும் கடுமையாக ரசிகர்கள் அவரைக் கேலி செய்யும் விதமாக கூச்சலிட்டனர். லாவினெலிஹின் வெந்த புண்ணில் இது வேலைப்பாய்ச்ச பதக்க மேடையில் பொங்கி வந்த கண்ணீரை அவரால் அடக்க முடியவில்லை. முகத்தை கைகளால் மூடிக் கொண்டு அழுதார். ஐஏஏஎஃப் தலைவர் செபாஸ்டியன் கோ, ஐ.ஓ.சி. தலைவர் தாமஸ் பாக் ஆகியோருடன் போல்வால்ட் லெஜண்ட் செர்ஜீ பபுகாவும் அவரை சமாதானப்படுத்தினர். 

இது குறித்து பிற்பாடு தெரிவித்த லாவிலெனி, “நியாயமான முறையில் நடந்து கொள்ளாதது அருவருப்பாக உள்ளது. ஒலிம்பிக் போட்டிகளில் மரியாதை இல்லாவிட்டால் வேறு எங்கு மரியாதை கிடைக்கும்?” என்றார்.

மேலும் நாஜி ஜெர்மனியில் 1936-ம் ஆண்டு பெர்லினில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளின் போது ஜெஸி ஓவன்ஸுக்கு அளிக்கப்பட்ட மரியாதையுடன் அவர் இதனை ஒப்பிட்டுப் பேசி பிறகு அதனை வாபஸ் பெற்றார், அதாவது உணர்ச்சிவசப்பட்டு அவ்வாறு கூறிவிட்டதாகத் தெரிவித்தார்.

ஒலிம்பிக் லெஜண்ட் மைக்கேல் ஜான்சன் கூறும்போது, “நீங்கள் ஆதரிக்க விரும்புவர்களுக்கு ஆதரவளியுங்கள், ஒரு வீரர் உங்கள் நாட்டு வீரருக்கு எதிராக விளையாடுகிறார் என்பதற்காகவே அவரை கேலி செய்து அவமானப்படுத்தாதீர்கள்” என்றார். 

பிரேசில் கால்பந்து கலாச்சாரம் அப்படியே ஒலிம்பிக்கிலும் அந்நாட்டு ரசிகர்களால் கடைபிடிக்கப் படுவதாக பலரும் விமர்சித்துள்ளனர்.


பிரேசிலியர்கள் இவ்வகை கேளிக்கையை "zueira" என்று அழைக்கின்றனர். அதாவது அடுத்தவர் செயல்திறனையே முடக்கும் அளவுக்கு கேலி செய்வது. இது கால்பந்தாட்டத்தின் போது, அதுவும் கால்பந்தாட்டம் ஒரு மதமாக பிரேசிலில் இருக்கும் போது நடைபெறுவது சகஜம், தடுக்க முடியாததும் கூட,

ஆனால் ஒலிம்பிக் போன்ற மிகப்பெரிய புலத்தில் கடும் நெருக்கடியில் அங்கு எந்த வீரருக்கும் நிறைய கவனம் தேவைப்படும். எனவே ஆட்டத்தின் போது கேலிக்கூச்சல் ஸ்போர்ட்ஸ்மென் ஸ்பிரிட் இல்லாததைக் காட்டுகிறது என்று நிபுணர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் தோற்றபிறகு பதக்க மேடை வரை இது தொடர்வதுதான் தற்போது பிரேசில் ரசிகர்கள் மீது கடும் விமர்சனத்தை ஈர்த்துள்ளது

No comments:

Post a Comment