‘தமிழ் இலக்கியத்தின் புதினஅரசி’
வை.மு.கோதைநாயகி
பள்ளி சென்று கல்வி கற்காதவர்
பிறப்பு : 1901, டிசம்பர் . 1
வை.மு.கோதைநாயகி
(பிறப்பு : 1901, டிச. 1 – நினைவு : 1960, பிப். 20)
ஒரு தமிழ்ப் பத்திரிகையின் ஆசிரியராக முதன்முதலில் பதவி வகித்தவர் என்ற பெருமை ஒன்றே போதும் இவர் என்றென்றும் பத்திரிகை வானில் ஜொலிப்பதற்கு.
நாவலாசிரியை,
எழுத்தாளர்,
பதிப்பாளர்,
பாடகி,
இசையமைப்பாளர்,
சமூகப்போராளி,
பேச்சாளர்,
சுதந்திரப் போராட்ட வீராங்கனை என, பன்முக ஆற்றலால் மிளிர்ந்து பெண்மைக்குப் பெருமை சேர்த்தவர் பெருமகளார் வை.மு.கோதைநாயகி.
முதல் துப்பறியும் நாவலைத் தமிழுக்கு தந்தவர் என்பது இவருக்கு கூடுதல் சிறப்பம்சம்.
படிப்பறிவு பயிலாத கதைச் சொல்லி:
பள்ளிக்கூடம் செல்லாத, பாடங்கள் படிக்காத பால்ய சிறுமியாக வளர்ந்தவள் கோதை. 5 வயதிலேயே 9 வயது சிறுவனுக்கு மனைவியான கோதை பிறந்தது, வைதீகக் குடும்பத்தில். வீட்டினில் எப்போதுமே ஒலித்துக் கொண்டிருந்த திருவாய்மொழிப் பாசுரங்களைக் கேட்டதால் தாய்மொழி மீது தீராதக் காதலை மனதிலே வசியப்படுத்திக் கொண்டாள் . கதைசொல்வதும், சங்கீதம் இசைப்பதும் மிகவும் பிடித்த விஷயங்களாக தன்னுள் வரித்துக்கொண்டாள்.
விக்கிரமாதித்யன் மன்னன் முதல் தெனாலிராமன் வரை வழக்கிலிருந்த அத்தனைகதைகளையும் சொல்லி ஆச்சரியப்பட வைத்தாள் . கதைகள் சொல்வதில் தணியாத தாகமும், சொல்லும் விதத்தில் தனித்துவமான பாணியும் இருந்ததால், கோதையின் கதைகளுக்குள் மயங்கியது குழந்தைகள் மட்டுமல்ல , பெரியவர்களும் தான்.
கணவன் என்னும் தோழன் :
அந்தக் காலத்தில் (இந்தக் காலத்திலும்தான்) இப்படி ஒரு கணவனா என வியக்க வைத்த பார்த்தசாரதியை துணைவராகப் பெற்றது கோதையின் பாக்கியமே. புராணங்களையும், வேதங்களையும் கற்க ஏற்பாடு செய்ததோடு, கோதையை நாடகங்களுக்கும் அழைத்துச் சென்றார் கணவர்.
நாடகக்கொட்டகைக்குச் சென்று நாடகங்கள் காணப் பெண்களை அனுமதிக்காதகாலத்திலும் தன் மனைவியை அழைத்துச் சென்றதோடு, அவரது எல்லாவகையான முன்னேற்றத்துக்கும் ஒரு தோழனாகவே துணை புரிந்துள்ளார்.
படிக்காத எழுத்தாளி,போராளி :
எழுதப் படிக்கத் தெரியாத கோதை சொல்லச் சொல்ல தோழி பட்டம்மாள் எழுதிய கதை ‘இந்திரமோகனா’ வடுவூர் துரைசாமி ஐயங்கார் அவர்களால் நடத்திவந்த ‘மனோரஞ்சனி’ இதழில் வெளிவந்தது.
பின்னர் ‘ஜகன்மோகினி’ என்னும் பத்திரிகைக்குப் பொறுப்பேற்று சிறப்பாக நடத்தினார். அதன் வாயிலாக
இந்து- முஸ்லிம் ஒற்றுமை,
பெண்விடுதலை,
சுதந்திர வேட்கை,
மதுவிலக்கு,
விதவைத் திருமணம் என சமூக முன்னேற்றத்திகான ஆயுதமாக எழுத்துக்களைக் கையாண்டவர் வை.மு.கோதைநாயகி.
மேலும் மேடைகளிலே குட்டிக்குட்டிக் கதைகளைச் சொல்லி, கேட்பவர்களின் மனதில் தனது கருத்துக்களை ஆழமாகப் பதியவைப்பதில் கைதேர்ந்தவராகவும் விளங்கினார்.
நாவாற்றல் மிக்க தீரர் சத்தியமூர்த்தியும், கர்மவீரர் காமராஜரும் வை.மு.கோதைநாயகியின் பேச்சுக்கு ரசிகர்களானதில் வியப்பில்லையே.
இன்னொரு முகம் இசை நாயகி:
கேட்போரை ஈர்க்கும் காந்தக்குரல், தெளிவான உச்சரிப்பு, ஆழ்ந்த சங்கீத ஞானம் ஆகியவை இணைந்த ஒரு பாடகியாகவும் கோதைநாயகி அவர்கள் திகழ்ந்தது நம்மையெல்லாம் மேலும் ஆச்சரியப்படச் செய்கிறது.
Kothainayaki (sitting) with N.L. Pattammal, her sister's daughter |
கோதைநாயகியால் ஊக்கம் பெற்றுப் பின்னாளில் இசைமேதையாய் புகழ்ப்பெற்றவர் டி.கே.பட்டம்மாள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மகாகவி பாரதியார் வை.மு.கோதைநாயகியின் பாட்டுக்கு ரசிகர். பின்னாளில் டி.கே.பட்டம்மாள் அவர்களின் தேனிசைக்குரலில் பாடி இசையுலகமே மயங்கிய ‘ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே’ என்ற பாடல் வை.மு.கோதைநாயகி அவர்களுக்காகவே பாரதியார் எழுதியது என்ற செய்தி வை.மு.கோ. அவர்களின் உன்னத வாழ்வுக்கு ஓர் உதாரணம்.
தேசப்பிதாவுடன் சந்திப்பு :
காந்தியடிகள் மற்றும் கஸ்தூரிபாய் அன்னையுடனான சந்திப்பு கோதைநாயகி அவர்களின் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. காந்திஜியின் ஆதர்சமான ஆளுமையும், எளிமையான வாழ்வும் மற்றும் சத்தியத்தின் மேல் அவருக்கிருந்த அசைக்கமுடியாதப் பற்றும் அவரை ஈர்த்தன.
அதன்பின், பட்டாடைகள் அணிவதையும், தங்க ஆபரணங்கள் பூணுவதையும் விடுத்து, காதியுடை உடுத்தி சுதந்திரப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். மதுவிலக்குக்காகப் போராடி 8 மாதங்கள் சிறைத் தண்டனைப் பெற்றார். அந்நியத் துணி பகிஷ்கரிப்பு, லோதி கமிஷன் எதிர்ப்பு போராட்டங்களில் கலந்துக்கொண்டதால் சிறை வாழ்க்கையை அனுபவித்தார்.
திரைப்படத் துறையிலும் முத்திரை:
தணிக்கைக் குழு உறுப்பினராக 10 ஆண்டுகள் பணியாற்றி திரைப்படங்களில் தேசபக்திக்கும், பெண்மைக்கும் முக்கியத்துவம் தரும் காட்சிகள் இடம்பெறுவதை ஊக்குவித்தார். கோதைநாயகியின் சில நாவல்கள் திரைப்படங்களாகவும் வெளிவந்துள்ளன.
சேவைப்பணிகள் செய்த செம்மல் :
காந்திஜியின் நினைவாக ‘மகாத்மாஜி சேவா சங்கம்’ துவக்கி பெண்களுக்கும், எளியோருக்கும் பல சேவைகள் புரிந்தார். அதற்காக அரசாங்கம் தந்த 10 ஏக்கர் நிலத்தை ஸ்ரீ வினோபா பாவேயின் ‘பூதான இயக்கத்திற்கு’ நன்கொடையாய் வழங்கினார்.
தன் வாழ்நாள் முழுதும் தேச விடுதலைக்கும், பெண்கள் முன்னேற்றத்துக்கும் பாடுபட்ட வை.மு.கோதைநாயகி அவர்கள் படைத்த நாவல்களின் எண்ணிக்கை 115 என்றால் இவரை ‘தமிழ் இலக்கியத்தின் புதினஅரசி’என்றழைப்பதில் நமக்கெல்லாம் பெருமிதம் தானே!
No comments:
Post a Comment