சர்வதேச பியர் தினம் ஆகஸ்ட் நான்காம் தேதி உலகெங்கிலும் கடைப்பிடிக்கப்படுகிறது. இரு நண்பர்கள் முதன் முதலில் சந்தித்துக்கொண்டாலும், சண்டைக்கு பின் இருவர் மனம் விட்டு பேசுவது இவையெல்லாம் ஒரு கிளாஸ் பியர் முன்னிலையில் தான் மேற்கு நாடுகளில் நடக்கிறது. ஐரோப்பா மற்றும் அமெரிக்கா போன்ற மேற்கு நாடுகளில் இந்த குறிப்பிட்ட தினத்தை ஒட்டி பல நிகழ்ச்சிகளும், கொண்டாட்டங்களும் நடந்தாலும், பியர் என்ற பானத்தை எந்தவொரு கிருமிகள் இன்றி, பதப்படுத்தி உலகிற்கு தந்த பெருமை லூயி பாஸ்ச்சருக்கு தான் சேரும். பால் சுத்திகரிப்பு முறையான பாசச்சுரைசேஷன் (Pasteurisation) மூலம் இவர் பெயர் இன்று உலகளவில் தெரியப்பட்டாலும், முதலில் இவர் இந்த சுத்திகரிப்பு முறையை கையாண்டது பியர் மற்றும் வைன் எனப்படும் பானங்களில் தான் என்பதை இங்கு குறிப்பிட வேண்டும். பல கண்டுபிடிப்புகளும், எதிர்ப்புகளும் கொண்ட இவரது வாழ்க்கை பக்கத்தை இங்கு நாம் திருப்பி பார்க்கலாம்.
லூயி என்னும் ஓவியன்
டிசம்பர் 27ம் தேதி 1822ம் ஆண்டில் பிரான்ஸ் நாட்டின் டோல் என்ற இடத்தில் லூயி பாஸ்ச்சர் பிறந்தார். பள்ளி பருவத்தில் பாஸ்ச்சர் ஓவியம் வரைவதில் மிகுந்த ஆர்வமாக இருந்ததுண்டு. வித்தியாசமான நிறத்தில் தான் வசிக்கும் கிராமம் மற்றும் சுற்றுப்புறங்களை வண்ணமயமாக வரைந்து அவ்வப்போது தனது பெற்றோர்களிடம் காண்பிப்பது லூயியுடைய வழக்கமாக இருந்தது. ஆசிரியர்கள் இவரது திறனை மேலும் வளர்க்க ஊக்கம் அளித்தாலும், பிரான்ஸ் படை வீரரான லூயியின் தந்தை ஓவியத்தை ஒரு வேண்டாத வஸ்துவாகவே பார்த்தார். படிப்பதில் கவனத்தை செலுத்த இடையூறாக ஓவியம் இருக்கும் என்று கருதி, படிப்பில் மட்டுமே முழு சிரத்தையும் இருக்க வேண்டும் என்று அடிக்கடி அறிவுரை கூறி, ஓவியப்பாதையிலிருந்து மெதுவாக லூயியை திசை திருப்பினார் என்று சொல்லலாம். படிப்பில் நாட்டமில்லாத லூயி, தந்தையின் கட்டுப்பாட்டினால் படிப்பதில் அதிக நேரத்தை செலவழிக்க துவங்கினார். ''பிரான்ஸ் நாட்டின் பெருமை, மற்றும் புகழில் நெஞ்சை நிமிர்த்திக்கொண்ட எனது தந்தை, என்னை படிக்க செய்த, அந்த பெருமைகளை தெரிந்துக்கொள்ள வழி வகுத்தார்.'' என்று ஒரு சந்தர்ப்பத்தில் லூயி தனது தந்தை பற்றி பகிர்ந்துக்கொண்டதாக சில கட்டுரைகள் மூலம் தெரிகிறது.
இவ்வாறாக, அரை மனதுடனும் அதிக கவனம் செலுத்தாமலும் லூயி தனது பள்ளிப்படிப்பை முடித்தார். பின், ஃபிளாஸபி துறையில் முதல் இளநிலை பட்டப்படிப்பை பேசான்காண் ராயல் கல்லூரியில் முடித்தார். அதே கல்லூரியில் பயிற்சியாளராக பணியாற்றிய லூயி, அறிவியல் மற்றும் கணித படிப்பை தொடர்ந்தார். ஆரம்பத்தில் சில தேர்வுகளில் தோல்வியை சந்தித்தாலும், இறுதியில் கணிதம் மற்றும் வேதியியல் பிரிவில் நல்ல மதிப்பெண்களை பெற்று அந்த படிப்பையும் வெற்றிகரமாக முடித்தார். லூயி எடுத்துக்கொண்ட இந்த இரண்டாவது படிப்பின் வழியாக, அறிவியல் உலகிற்கு வந்து பல கண்டுபிடிப்புகளை உலகிற்கு பின்னாளில் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் கண்டுபிடிப்பு
இளநிலை பட்டப்படிப்பை முடித்த பின், ஈகால் நார்மெல் என்ற புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தில் படிப்பதில் கவனம் செலுத்தியது மட்டுமின்றி, அதற்கான நுழைவுத் தேர்வுகளையும் எழுதினார். முதல் முயற்சியில் தோல்வியுற்றாலும், அடுத்த ஆண்டு எழுதியதில் நல்ல மதிப்பெண்களும், தரவரிசை பட்டியலில் இடத்தை பிடித்தும் ஈகால் பல்கலைக்கழகத்தில் அறிவியல் துறையில் முதுநிலை பட்டப்படிப்பை படித்தார். பட்டப்படிப்பை முடித்த பின் ஆண்டோய்ன் ஜெரோம் பாலார்ட் என்பவருடன் இணைந்து கிறிஸ்டெலோகிராபி துறையில் ஆய்வுகளை மேற்கொண்டார். முதல் முறையாக இவர் எடுத்துக்கொண்ட இந்த ஆய்வுகள், பல உண்மைகளை உலகிற்கு வெளிக்கொண்டு வந்ததற்கு பாலமாக அமைந்தது என்றே சொல்லலாம். இயற்பியல் மற்றும் வேதியியல் துறையில் ஆய்வுக்கட்டுரைகளை எழுதிய லூயி, அடுத்தகட்டமாக ஸ்ட்றாஸ்பார்க் பல்கலைக்கழகத்தில் வேதியியல் பேராசிரியராக பொறுப்பேற்றார்.
1848ம் ஆண்டில் பொறுப்பேற்ற லூயி, உயிரினங்களில் கொண்ட வேதியியல் கட்டுமானத்தை பற்றி முதலில் கண்டறிந்தார். ஒரே மாதிரியாக இருக்கும் மாளிக்யூல்ஸ் (Molecules) எனப்படும் அடிப்படையான பொருள், வலப்புறமாகவும், இடப்புறமாகவும் அமைக்கப்பட்டுள்ளதாக லூயி கண்டறிந்தார். இந்த மாளிக்யூல்களின் கூட்டமைப்பே எந்தவொரு பொருளுக்கும் வடிவத்தையும், சக்தியையும் தருகிறது. உயிருள்ள பொருட்களின் மாளிக்யூல் அமைப்பானது இடதுபுறமாகவே இருக்கின்றது என்ற தகவலை முதலில் உலகிற்கு இவர் உரைத்தார். லூயி தனது 25வது வயதில் கண்டறிந்த இந்த விஷயம், பின்னாளில் பல ஆய்வுகளில் எடுக்கப்பட்டு, DNA என்ற மனித செல்களின் அடிப்படை கூறு பற்றிய விரிவான தகவல்கள் மட்டுமின்றி, பல மருந்துகள் கண்டுபிடிப்பிற்கும் இது அடிப்படையாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த சமயத்தில், அறிவியல் துறையில் இருந்த பல கேள்விகளுக்கு முதல் குறிப்பாக லூயி அவர்களின் கண்டுபிடிப்பு விளங்கியது.
பியர் மூலம் கண்டறிந்த சுத்திகரிப்பு முறை
ஸ்டராஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் சிறிது காலம் பணிபுரிந்த பின், தான் படித்த ஈகால் பல்கலைக்கழகத்தில் மீண்டும் நுழைந்தார். இம்முறை அறிவியல் துறையின் இயக்குனராக பொறுப்பேற்று பேராசிரியராக பல மாணவர்களுக்கு வகுப்புகளை எடுத்தார். அப்போது மாணவன் ஒருவர் லூயிடம், அவர் தயாரிக்கும் பியர் பானம் தானாக கெட்டு போகும் மாயத்திற்கு விடை கோரினார். ஒரு வித புளிப்பு சுவையுடன், அந்த பானம் அடிக்கடி கெட்டுப்போவதற்கான காரணத்தை கண்டறிய, லூயி தொடர் ஆய்வுகளில் ஈடுபட்டார். அவர் கண்டுபிடித்ததில், அந்த பானமானது, அதனோடு கலந்திருக்கும் பல நுண் கிருமிகளால் புளிப்பாக மாறுவதாக மைக்ரோஸ்கோப் கொண்டு கண்டறிந்தார். ஒரு பொருள் கெட்டுப்போனதால், தேவையில்லாத கிருமிகள் அதில் காணப்படுகிறது என்ற கூற்றை மாற்றி, கிருமிகளின் நுழைவால் தான் கெட்டுப்போகும் செயல் நடைபெறுகிறது என்பதை நிரூபித்து காட்டினார். இன்று இந்த கண்டுபிடிப்பை கொண்டு பல மாற்றங்களை நாம் மருத்துவ உலகில் நிகழ்த்தியிருந்தாலும், 1860ம் ஆண்டில், முதல் முறையாக இந்த நிகழ்வை விளக்கிய போது, பல அறிஞர்களும், மக்களும் இவருடைய கண்டுபிடிப்பை ஏற்றுக்கொள்ளவில்லை. ''உங்களுடைய இந்த ஆய்வுகள், உங்களுக்கு எதிராகவே மாறும். நீங்கள் சொல்லும் எதுவும் நிகழ் உலகத்தில் சாத்தியமில்லை.'' என்று அப்போது மறுத்தனர். இருப்பினும், லூயி தன்னுடைய கண்டுபிடிப்பில் அதிகப்படியான நம்பிக்கையை வைத்து, தொடர் ஆய்வில் வேறு வகையான பானங்களைக் கொண்டு ஆய்வில் ஈடுபட்டு வந்தார்.
1863ம் ஆண்டில் நெப்போலியன் அரசர், பிரான்ஸின் எல்லா இடங்களிலும் வைன் உற்பத்தியிடங்களில் கெட்டுப்போவதால், ஏற்படும் நஷடம் குறித்து லூயி அவர்களிடம் விளக்கம் கேட்டார். தன்னுடைய தனிப்பட்ட ஆய்வுகளுக்கு இந்த சந்தர்ப்பம் சரியான பதிலை தரும் என்று லூயி எண்ணி, பிரான்ஸின் எல்லா உற்பத்தி இடங்களையும் நேரில் சென்று பார்த்தார். அங்கிருந்து எடுத்து வரப்பட்ட வைனை ஆய்வில் உட்படுத்திய போது, பியர் பானத்தில் கண்ட அதே வகையான நுண்கிருமிகளை இதிலும் கண்டார். மீண்டும் ஒரு முறை நுண்கிருமிகளால் பானங்கள் கெட்டுப்போகின்றன என்பதை ஊர்ஜிதப்படுத்தி, அவற்றை பதப்படுத்தும் முறையை வடிவமைக்கலானார். ஒரு குறிப்பிட்ட சூட்டில் பானங்களை கொதிக்க வைத்து, அதை கெட்டியாக மூடக்கூடிய குடுவைகளில் அடைத்து பதப்படுத்தும் முறையை அப்போது கண்டுபிடித்தார். அந்த முறையை வைன் துறையினர் பின்பற்றி, தரமான பானங்களை உருவாக்கியது மட்டுமின்றி, உற்பத்தி செய்து லாபத்தை பன்மடங்காக மாற்றினார்கள். பாஸ்ச்சுரைசேஷன் என்றழைக்கப்படும் இந்த முறையில்தான் தற்போது, வைன், பியர் மட்டுமின்றி அத்தியாவசிய பொருட்களான பால், தயிர் மற்றும் இதர உண்ணும் பொருட்களை அதிகநாள் வரை பதப்படுத்தி வைப்பதற்காக உபயோகப்படுத்தப்படுகிறது.
லூயி பாஸ்ச்சர்- சில ஷார்ட் தகவல்கள்
•பாஸ்ச்சுரைசேஷன் முறை இவரது பிரபலமான கண்டுபிடிப்பாக இருந்தாலும், லூயி முதலில் உலகிற்கு சொன்னது ஜெம் தியரி (Germ Theory). உயிரினங்கள் தானாக வாழ துவங்கி, இறந்த பின், புழு மற்றும் பூச்சிகள் சதைகளிலிருந்து வெளிவரும் என்று மக்கள் முன்பு நம்பினர். இந்த கருத்து தவறு என்றும், நாம் சுவாசிக்கும் காற்றில் சில கிருமிகள் இருப்பதாகவும், அதன் மூலம் நமக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டு நாளடைவில் இறந்துபோவதாகவும் தெரிவித்தார். இந்த கருத்தே, ஜெம் தியரியின் அடிப்படை கருத்தாகும். மக்கள் உண்மையென நம்பிய விஷயத்தை மாற்றி கூறியதால், லூயியை எதிர்த்த அறிஞர்கள் பலர்.
•வைன் துறையில் அதிக லாபத்தை ஈட்டி தந்த பின், பட்டு தொழில் துறையில் ஏற்பட்ட சரிவை லூயி தீர்த்து வைத்தார். பட்டு நூலின் தரம் குறைந்ததற்கு காரணம் கண்டறிய, லூயி தனது மனைவியுடன் சேர்ந்து, வீட்டில் சில பட்டு பூச்சிகளை வளர்த்து கவனித்து வந்தார். இதன் மூலம், பாரசைட் எனப்படும் தொற்று கிருமிகளால் பூச்சிகள் நோயுற்று தரமான பட்டு நூல் உற்பத்தி செய்வதில்லை என்பதை கண்டறிந்தார். நோயுற்ற பூச்சிகளை கவனித்து, தனியாக வைப்பது மட்டுமே தீர்வு என்று அறிந்து பட்டு துறையினருக்கு பரிந்துரைத்தார்.
•அதன் பின், மனிதர்களுக்கு ஏற்படும் கிருமி நோய்கள் மற்றும் அதற்கான குணங்களை பற்றிய ஆய்வில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். சிக்கன் காலரா, ரேபிஸ் போன்ற பல நோய்களுக்கு தடுப்பு மருந்துகளை கண்டுபிடித்த பெருமை லூயிக்கு உண்டு. இந்த அனைத்து கண்டுபிடிப்புகளுமே அவரது சொந்த வாழ்க்கையின் பிரதிபலிப்பாக பார்க்கலாம். அவருக்கு பிறந்த ஐந்து குழந்தைகளில் மூன்று குழந்தைகள் சிறு வயதிலேயே காலரா, டைபாய்டு போன்ற கொடிய நோய்களுக்கு இரையானது. பிள்ளைகளை பறிகொடுத்த பாதிப்பே, இவரை கிருமிகள் மற்றும் மனிதனுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்ற விசாலமான ஆய்வில் அவரை செலுத்தியது. இன்று ஏற்பட்டிருக்கும் பல மருத்துவ வளர்ச்சிக்கு இவருடைய கண்டுபிடிப்புகள் பெரிதும் உறுதுணையாக இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
•தனது 45வது வயதில் ஏற்பட்ட பக்கவாதத்தினால், உடலின் இடது பக்கம் செயலிழந்து பாதிக்கப்பட்டார். இருப்பினும், அவருக்காக ஒரு நடமாடும் ஆய்வகத்தை அமைத்து அதன் மூலம் அவரது ஆய்வுகளை மேற்கொள்ளும் வகையில் நண்பர்கள் உதவினர். ரேபிஸ் எனப்படும் நாய்கள் மூலம் மனிதர்களுக்கு தொற்றும் வியாதிக்கான தடுப்பு மருந்தை இந்த நடமாடும் ஆய்வகம் கொண்டு கண்டுபிடித்தார் என்பது கூடுதல் தகவல்.
•லூயி ஆரம்பித்த தொற்று நோய்களுக்கான ஆய்வின் அடுத்தகட்ட வளர்ச்சியாக பாரீஸ் நகரில் லூயி இன்ஸ்டிட்யூட் இவரால் நிறுவப்பட்டது. இன்று கிட்டத்தட்ட 133 மையங்கள் உலகெங்கிலும் நிறுவப்பட்டு பல ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்றும் வருகின்றன.
உலகமே நம்முடைய முயற்சியை எதிர்த்தாலும், தன்னம்பிக்கை மற்றும் தொடர் உழைப்பை மட்டும் விதைத்து, பல்லாண்டுகள் மறையாத வெற்றியை அடைய முடியும் என்ற வாழ்க்கைப்பாடத்தை சில அறிவியல் கண்டுபிடிப்புகள் மூலம் லூயி பாஸ்ச்சர் நமக்கு தந்துள்ளார்.
கட்டுரையாளர் குறிப்பு:
நித்யா ராமதாஸ், அண்ணா பல்கலைக்கழகத்தில் மின்னணு ஊடகவியலில் முதுகலை பட்டம் பெற்றவர். லைஃப் ஸ்டைல், ஃபேஷன், கலை மற்றும் மியூசிக் சார்ந்த கட்டுரைகளை எழுதுவதில் தேர்ந்தவர். தற்பொழுது கணவருடன் லண்டனில் வசித்து வருகிறார்.